காவிரிக்காக தீக்குளித்த விக்னேஷ் மரணம்

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பேரணியில் தீக்குளித்த இளைஞர் விக்னேஷ் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தற்கொலை மூலமாக போராடுவது சரியான வடிவமில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார், யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்றும் தெரிவித்தார்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து சிந்தாதிரிப் பேட்டை வரை நேற்று பேரணி நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் அமீர், சேரன், ரவிமரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தீக்குளித்த தொண்டர்

இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சித் தொண்டரான திருவாரூரை சேர்ந்த விக்னேஷ்குமார்,23 என்பவரும் பங்கேற்றார்.

புதுப்பேட்டை அருகே பேரணி வந்தபோது விக்னேஷ்குமார் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்த கட்சியினர் உடனடியாக தண்ணீரை ஊற்றியும், இலைகள் மற்றும் அட்டைகளை பயன்படுத்தியும் தீயை அணைத்தனர். பின்னர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விக்னேஷ் மரணம்

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். உடலில் பெரும்பாலான இடங்கள் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்த விக்னேஷ் காவிரியில் தண்ணீர் வராது என்ற விரக்தியில் தீக்குளித்ததாக தெரிகிறது. இளைஞர் விக்னேஷ் மரணத்தை தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயக்குடும்பம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் மேல வீதியில் வசித்து வரும் பாண்டியன், கண்ணகி தம்பதியரின் மகன் விக்னேஷ் ,23. இவர் டிப்ளமோ படிப்பு முடித்து சென்னை பாடியில் உள்ள தனியார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நாம் தமிழர் கட்சியின் மன்னார்குடி நகர இளைஞர் பாசறை செயலாளர் பதவியில் உள்ளார். சென்னையிலேயே தங்கி வேலை செய்துவரும் நிலையில் நாம் தமிழர் கட்சி அறிவித்த போராட்டத்தில் கலந்து கொண்டார். இவருக்கு ஜனனி என்ற மூத்த சகோதரி உள்ளார்.

மன்னார்குடியில் இறுதிச்சடங்கு

காவிரியில் தமிழர்களின் உரிமையை வலியுறுத்தி விக்னேஷ் உயிர் தியாகம் செய்துள்ளார் என சீமான் தெரிவித்துள்ளார். நாட்டின் வளங்கள் அனைவருக்கும் பொதுவானது என சீமான் தெரிவித்துள்ளார். தற்கொலை மூலமாக போராடுவது சரியான வடிவமில்லை என்று கூறிய சீமான், யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்றும் தெரிவித்தார். இளைஞர் விக்னேஷின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவரது இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் நடைபெறும் என்றும் சீமான் கூறியுள்ளார்.

தலைவர்கள் அஞ்சலி

உயிரிழந்த விக்னேஷ் உடலுக்கு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அஞ்சலி செலுத்தினார். விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரிக்காக உயிர்நீத்த விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.