இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு நான்கு தசாப்தகாலத்தில் 7 ஜனாதிபதி தேர்தல்களை நாடு சந்தித்திருக்கிறது.இவ்வருட இறுதியில் நடைபெறவிருப்பது 8 வது ஜனாதிபதி தேர்தலாகும்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை காலமும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு (போட்டியிடுவதை தவிர்த்த இரு சந்தர்ப்பங்களை தவிர)அதன் வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் ஐக்கிய தேசிய கட்சி பிரச்சினைகளை எதிர்நோக்கியதில்லை.
1977 ஜூலை பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைத்தபோது பிரதமராக பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்தன இருமாத காலத்தில் 1972 குடியரசு அரசியலமைப்புக்கு திருத்தமொன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்ற போது அவருக்கு போட்டியாக கட்சிக்குள் வேறு எவரும் அந்தப் பதவிக்கு உரிமை கோருவது குறித்து கனவிலும் நினைத்துப்பார்த்திருக்க முடியாது.தனது முதலாவது 6 வருட பதவிக்காலத்தில் சுமார் ஐந்து வருடங்கள் நிறைவடைந்த நிலையில் ஜெயவர்தன ( எதிரணி குழப்பநிலைக்குள்ளாகியிருந்த சூழ்நிலையில் ) 1982 அக்டோபரில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றியும் பெற்றார்.
பிறகு தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் அரசியலில் இருந்து ஒய்வுபெறும்போது 1988 இறுதியில் அவர் தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாசவை நியமித்தார். ஜெயவர்தன அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக இருந்த காமினி திசாநாயக்க போன்றவர்களும் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு விரும்பிய போதிலும் பிரேமதாசவை மீறி வேறு எவரையும் அந்தக்கட்டத்தில் ஜெயவர்தனாவினால் நியமித்திருக்கமுடியாது.
1988 டிசம்பரில் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) யின் இரண்டாவது கிளர்ச்சியின் வன்முறைகளுக்கு மத்தியிலும் பிரேமதாச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான முன்னணியின் வேட்பாளரான முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைத் தோற்கடித்தார்.
ஜனாதிபதி பிரேமதாச தனது முதலாவது பதவிக்காலத்தின் இடைநடுவில் 1993 மே தினத்தன்று கொழும்பில் தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து அன்றைய பிரதமர் டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் 1994 நவம்பரில் மூன்றாவது ஜனாதிபதி தேர்தலை நடத்தினார். பிரேமதாசவுடனான முரண்பாட்டின் விளைவாக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட காமினி திசாநாயக்க மீண்டும் கட்சிக்குள் வந்து ஜனாதிபதி வேட்பாளரானார்.கொழும்பில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் திசாநாயக்க கொலைசெய்யப்பட்டதை அடுத்து அந்த ஜனாதிபதி தேர்தலில் அவரின் விதவை மனைவி சிறிமா ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
கட்சிக்குள் காமினி திசாநாயக்கவுக்கு அடுத்த தலைவராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க அந்தக்கட்டத்தில் வேட்பாளராக விரும்பவில்லை. சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்றைய பிரதமர் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சிறிமா திசாநாயக்கவை மிகவும் சுலபமாகத் தோற்கடித்தார்.
ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது முதலாவது பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாக 1999 டிசம்பரில் நான்காவது ஜனாதிபதி தேர்தலை நடத்தினார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்த விக்கிரமசிங்க அந்த தேர்தலில்தான் முதன் முதலாக ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார். கொழும்பு நகரமண்டப மைதானத்தில் பொதுஜன முன்னணியின் இறுதிப்பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த திருமதி குமாரதுங்க விடம் விக்கிரமசிங்க தேர்தலில் தோல்வி கண்டார்.
ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவு தொடர்பாக எழுந்த சட்டப்பிரச்சினையொன்றில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விளைவாக ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலை 2005 நவம்பரில் நடத்தவேண்டியதாயிற்று. அதில் சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ச போட்டியிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக மீண்டும் விக்கிரமசிங்கவே களமிறங்கினார்.
இவர்களில் எவருக்கும் ஆதரவு அலை என்று ஒன்று இல்லாத நிலையில் நடைபெற்ற அந்த தேர்தலில் ராஜபக்ச வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. தமிழ்ப்பகுதிகளில் குறிப்பாக வடக்கில் விடுதலை புலிகள் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு மக்களை பலவந்தப்படுத்தியிருக்காவிட்டால் விக்கிரமசிங்கவுக்கே பெரும்பாலும் வெற்றிகிடைத்திருக்கும் என்று நம்பப்பட்டது. ராஜபக்ச சுமார் 28 ஆயிரம் வாக்குகளை குறைவாகப் பெற்றிருந்தால் 50 சதவீத வாக்குகள் என்ற எல்லையைக் கடந்திருக்கமாட்டார் என்று கணிப்பீடுகள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.
தனது முதலாவது பதவிக்காலத்தில் விடுதலை புலிகளுடனான போரை முழுவீச்சில் முன்னெடுத்த ஜனாதிபதி ராஜபக்ச ஒவ்வொரு கட்ட வெற்றியின்போதும் சிங்கள மக்களின் ஆதரவை படிப்படியாக அதிகரித்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது. கட்டம் கட்டமாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் அதை நிரூபித்தன.இறுதியில் 2009 மேயில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து ராஜபக்ச தனது செலாவாக்கின் உச்சக்கட்டத்தில் இருந்தார். போர் வெற்றிக்களிப்பில் தென்னிலங்கையை மிதக்கவிடும் அரசியல் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் அவரது அரசாங்கம் முன்னெடுத்தது.
தனக்கு பெரிதும் வாய்ப்பான அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி ராஜபக்ச தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒன்றரை வருடங்கள் இருந்த நிலையில் இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்காக 2010 ஜனவரியில் ஆறாவது ஜனாதிபதி தேர்தலை நடத்தினார். போர் வெற்றியையடுத்து அன்று தென்னிலங்கையில் இருந்த சூழ்நிலையில் தன்னால் வெற்றிபெறமுடியாது என்பதை நன்கு உணர்ந்த விக்கிரமசிங்க ஏனைய எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ( போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்த ) ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிரணியின் பொது வேட்பாளராக களமிறக்கினார்.
ஆனால், போருக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியதாக மார்தட்டிக்கொண்டிருந்த ராஜபக்சவிடம் பொன்சேகா தோல்வி கண்டார். தென்னிலங்கை சிங்கள மக்கள் ராஜபக்சவை அமோகமாக ஆதரித்தார்கள்.ஆனால், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் தமிழ் மக்கள் பொன்சேகாவுக்கே பெரும்பான்மையாக வாக்களித்தனர். பொன்சேகாவினால் அந்த தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அவரைக் களமிறக்க இணங்கினார் என்பது சந்தேகமே.
ராஜபக்சாக்களுக்கு தென்னிலங்கையில் அமோகமான ஆதரவு இருந்த சூழ்நிலைகளில் அரசியல் ரீதியாக பாதிக்கப்படுவது தானாக இருந்துவிடக்கூடாது என்பதே விக்கிரமசிங்கவின் தந்திரோபாயமாக இருந்தது என்பது வெளிப்படையானது. தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இருவருடங்கள் இருந்த நிலையில் மூன்றாவது பதவிக்காலத்தை பெறும் நோக்கில் ஜனாதிபதி ராஜபக்ச நடத்திய ஏழாவது ஜனாதிபதி தேர்தலிலும்(2015 ஜனவரி ) விக்கரமசிங்க அதே தந்திரோபாயத்தையே பயன்படுத்தினார். ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவும் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன அன்றைய எதிரணியின் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றியும் கண்டார். உரிய காலத்துக்கு முன்கூட்டியே அந்த்தேர்தலை நடத்தியதில் தான் இழைத்த தவறை ராஜபக்ச பிறகு பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டார்.அதற்கு பிறகு நடந்தவையெல்லாம் அண்மைய வருடங்களின் வரலாறு.
இன்னும் நான்கு மாதங்களில் நடைபெறவிருக்கும் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசியல் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், இத்தடவை பிரதமர் விக்கிரமசிங்கவின் தந்திரோபாயம் என்னவாக இருக்கும் என்பதே முக்கியமான கேள்வி. மூன்றாவது தடவையும் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் தந்திரோபாயத்தை அவரால் கடைப்பிடிக்க அவரால் முடியாது.அவ்வாறு செய்வதற்கு அவரை கட்சியினர் அனுமதிக்கவும் போவதில்லை என்பது வெளிப்படையானது. இந்த தேர்தல் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை அவரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவரும் வீடமைப்பு , நிர்மாணத்துறை அமைச்சருமான சஜித் பியேமதாசவும் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவும் தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமானால், அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு தயாராயிருப்பதாக பகிரக்கமாக கூறுகின்ற அதேவேளை, விக்கிரமசிங்க எதுவும் பேசாமல் இருக்கிறார். கட்சியின் தலைவரே வேட்பாளராக நிற்கவேண்டும் என்று சரத் பொன்சேகா போன்றவர்கள் பகிரங்கமாக பேசுகின்ற வேளையிலும் கூட பிரதமர் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவையே நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் அண்மைய வாரங்களாக வலுவடைந்துகொண்டிருக்கிறது. பிரதமரின் விசுவாசிகள் என்று கருதப்பட்ட பல அமைச்சரகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட பிரேமதாசவுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பிரேமதாசவின் மனைவி ஜலானி இரு வாரங்களுக்கு முன்னர் அட்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரைாயாற்றும்போது தன்னை ‘ எதிர்கால முதற்பெண்மணி ‘ என்று கூட வர்ணித்திருந்தார். இவ்வாறாக எல்லாம் விக்கிரமசிங்கவுக்கு ‘ செய்திகள் ‘ அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கப்போவதாக அறிவிப்பதற்கு தயங்குகிறார்.பதிலாக, கட்சியின் செயற்குழுவும் பாராளுமன்றக் குழுவும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவெடுக்கும் என்று அறிவித்துவி்ட்டு அவர் பேசாமல் இருக்கிறார்.
சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கினால் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பைப் பற்றி நம்பிக்கைகொள்ள முடியும் என்று கட்சிக்குள்ளும் ஆதரவாளர்கள் மத்தியிலும் அபிப்பிராயம் வலுவடைவது ஒன்றும் இரகசியமல்ல. விக்கிரமசிங்க போட்டியிடுவாரேயானால் ராஜபக்ச முகாமின் வேட்பாளருக்கு ஈடுகொடுக்க முடியாமல் போகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பல மட்டங்களிலும் நிலவுகின்ற எண்ணம் கட்சிக்குள் அவரின்தலைமைத்துவ நிலை எதிர்நோக்க ஆரம்பித்திருக்கின்ற கடுஞ்சவாலை உணர்த்திநிற்கிறது.
ஐக்கிய தேசிய கட்சி பிரதமர் விக்கிரமசிங்கவின் தலைமையில் கால்நூற்றாண்டைக் கடந்து விட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அந்த கால்நூற்றாண்டாக கட்சியினால் அடையமுடியாமல் இருக்கிறது. அவரின் தலைமையே தொடருமானால் தங்களின் எதிர்கால அரசியல் வாய்ப்புகள் ஆபத்துக்குள்ளாகக்கூடும் என்று கட்சியின் முக்கியமான அரசியல்வாதிகளில் கணிசமான எண்ணிக்கையினர் அச்சங்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் போலத்தெரிகிறது. ஆனால், எதுவுமே நடக்காதது போன்று விக்கிரமசிங்க தனது அலுவல்களைப் பார்த்துக்கொண்டு திரிகிறார்.
ஐக்கிய தேசிய கட்சியின் வரலாற்றில் மிக நீண்டகாலம் தலைவர் பதவியில் இருப்பவர் விக்கிரமசிங்க.அதேவேளை அக்கட்சியின் தலைவர்களாக இருந்தவர்களில் எவருமே அவரைப் போன்று இடையறாது தலைமைத்துவத்துக்கு சவாலை எதிர்கொண்டு தாக்குப் பிடித்தவர்களும் வேறு எவரும் இல்லை. தற்போது மீண்டும் அவரின் தலைமைத்துவம் சவாலை எதிர்நோக்குகிறது. இத்தடவை அவரால் அதை சமாளிக்கமுடியுமா? இந்த கேள்விக்கான பதிலுக்கு நீண்டகாலம் காத்திருக்கவேண்டியதில்லை.