அமெரிக்கா: அகதிகள் சிறையில் 3 இந்தியர்கள் 20 நாட்களாக உண்ணாவிரதம்!

அமெரிக்காவுக்கு அகதிகளாக சென்று டெக்சாஸ் எல்லையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இந்தியர்களில் 3 பேர் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு பலவந்தமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சமடைய செல்லும் மக்களை அந்நாட்டின் சில மாநிலங்களில் உள்ள எல்லைப்பகுதியில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து  தற்காலிக சிறைகளில் அடைத்து வைத்துள்ளனர்.

அவ்வகையில், டெக்சாஸ் மாநில எல்லையில் கைது செய்யப்பட்டு  எல் பாசோ பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் இந்தியாவை சேர்ந்த சிலர் ஓராண்டுக்கு மேலாகியும் விடுதலை செய்யப்படாமல் இருப்பதை கண்டித்து கடந்த 9-ம் தேதியில் இருந்து 3 இந்தியர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அடைக்கலம் தேடி வரும் மக்கள்

எங்களை நாடுகடத்துவது தொடர்பான வழக்குகளை நாங்கள் வெளியில் இருந்து சந்தித்துக் கொள்கிறோம். எனவே, உடனடியாக எங்களை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால் 3 இந்திய அகதிகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

இதைதொடர்ந்து, தற்காலிக சிறையில் உள்ள மருத்துவர்கள் அவர்களை கட்டாயப்படுத்தி ஊசி மூலமாக கைகளில் குளுக்கோஸ் ஏற்றினர். இப்படி, சர்வதேச அகதிகள் பாதுகாப்பு சட்டத்தை மீறும் வகையில் அவர்களுக்கு பலவந்தமாக சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞரான லின்டா கோர்ச்சாடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இப்படி அகதிகளாக வந்து பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை வலுக்கட்டாயப்படுத்தி உணவு அளிப்பது அல்லது குளுக்கோஸ் ஏற்றுவது போன்றவற்றை சித்ரவதைக்கு ஒப்பான செயலாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது நினைவிருக்கலாம்.