ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெர்ரி டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்களுடன் 1000 ரன்களை கடந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.
இங்கிலாந்து – ஆஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கு இடையில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் அடித்தது. பின்னர் 122 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. கேப்டன் லேனிங் (44), ஆல்-ரவுண்டர் வீராங்கனை எலிஸ் பெர்ரி (47 ரன்கள், ஆட்டமிழக்காமல்) சிறப்பாக விளையாட, ஆஸ்திரேலியா 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அதிரடி மன்னன் ஷாகித் அப்ரிடி 98 விக்கெட்டுக்களுடன் 1416 ரன்கள் சேர்த்து இரண்டு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சாதனையை தவறவிட்டார். அந்த சாதனையை எலிஸ் பெர்ரி படைத்துள்ளார்.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 1471 ரன்களுடன் 88 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இவரால் எலிஸ் பெர்ரியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.