மஹிந்தவுடன் இணைந்து செயற்பட்டு வந்த குமார வெல்கம அவ்வணியிலிருந்து விலகி சுதந்திரக்கட்சியின் நிகழ்வுகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார். நேற்று கொலன்னாவையில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் கிளை திறப்பு விழாவிலும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பங்கேற்றிருந்தார்.
இதேநேரம், பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு எதிர்வரும் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்கப்போவதில்லை என்று களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது சுதந்திரக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு அரசாங்கத்தினை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு எடுத்த போது அதற்குக் கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்து அக்கூட்டத்திலிருந்து குமாரவெல்கம வெளியேறியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து ஏற்கனவே நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித்தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட குமார வெல்கம ஆரம்பித்திருந்தார்.
இருப்பினும், ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டதையடுத்து கடுமையான அதிருப்திகளை குமார வெல்கம பகிரங்கமாக வெளியிட ஆரம்பித்திருந்தார். இதனால் மஹிந்த அணியினருக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட ஆரம்பித்திருந்தன..
ஏனைய உறுப்பினர்களின் முறைப்பாடுகளுக்கு அமைவாக, கட்சி விடயங்களை பகிரங்கமாக விமர்ச்சிப்பதை தவிர்க்குமாறு மஹிந்த ராஜபக்ஷ குமார வெல்கமவைக் கோரியிருந்தார். இருப்பினும் தான் பொதுஜன முன்னணியின் உறுப்பினர் இல்லை என்ற வாதத்தினை முன்னிலைப்படுத்திய குமாரவெல்கம தனது கருத்துக்களை தொடர்ந்தும் தெரிவித்து வந்ததோடு சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற சமய நிகழ்விலும் திடீரெனக்கலந்துகொண்டார்.
இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுஜன முன்னணியின் தேசிய மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக அக்கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவுள்ள நிலையில் அம்மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட குமாரவெல்கம, நான் சுதந்திரக்கட்சியின் உறுப்பினராகவே தற்போதும் உள்ளேன். நான் பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையையும் பெற்றிருக்கவில்லை. ஆகவே பிறிதொரு கட்சியின் மாநாட்டில் பங்கு பற்றவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
அதேநேரம், சுதந்திரக்கட்சியுடன் தொடர்ந்தும் செயற்படுவீர்களா என வினவியபோது, மத்திய குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு இன்னமும் எனக்கு விடுக்கப்படவில்லை. ஆனால் கட்சியின் உறுப்பினராக நான் தொடர்ந்தும் செயற்படுவேன் என்றார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவையும் விரைவில் குமாரவெல்கம தனித்து சந்தித்து பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.