அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஹிக்

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் கிரேம் ஹிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலியா அணியின் தலைமை பயிற்சியாளராக டேரன் லேமென் உள்ளார். இவருடன் பீல்டிங் பயிற்சியாளராக கிரேக் ப்ளேவெட் உள்ளார். பந்து வீச்சு பயிற்சியாளராக சமீபத்தில் டேவிட் சாஹெர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் கிரேம் ஹிக் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தென்ஆப்பிரிக்கா அணி அடுத்த மாதம் அவுஸ்ரேலியா சென்று டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. அப்போது இருந்து அவர் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார். அதில் இருந்து 2019-ம் ஆண்டு ஆஷஸ் தொடர் வரை பயிற்சியாளராக இருப்பார் எனத் தெரிகிறது.

அவுஸ்ரேலியா அணி ஆசியக் கண்டத்தில் கடைசி 9 டெஸ்டிலும் தோல்வியடைந்துள்ளது. சமீபத்தில் இலங்கை அணிக்கெதிராக 0-3 என படுதோல்வியை சந்தித்தது. அடுத்த வருடம் பிப்ரவரி மார்ச் மாதத்தில் அவுஸ்ரேலியா அணி இந்தியா வருகிறது. இதற்கான அவுஸ்ரேலியா அணியின் பேட்ஸ்மேன்களை தயாராக்குவது இவருக்கு பெரிய சவாலாக இருக்கும். தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து நான்கு சீசனுக்கு இவர் பயிற்சியாளராக இருப்பார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹிக் முதல் தர போட்டிகளில் 41112 ரன்கள் குவித்துள்ளார். முதல்தர போட்டிகளில் ஒரு இன்னிங்சில் நாற்சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக 1991 முதல் 2001 வரை 10 ஆண்டுகளில் 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.