ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இலங்கையின் வரலாற்றில் முக்கிய கட்சிகளாக விளங்குகின்றன. இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இக்கட்சிகள் மாறி மாறி ஆட்சி பீட மேறி இருக்கின்றன. இந்நிலையில் இக்கட்சிகளின் செயற்பாடுகள் மற்றும் போக்குகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. கட்சிகள் நாட்டின் அபிவிருத்திக்கு உரியவாறு வலு சேர்க்கவில்லை. நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்கிற பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் இவ்விரு பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் மாறி மாறி ஆதரவளித்து வருகின்றன. எனினும் இதற்கு உரிய பலனை சிறுபான்மைக் கட்சிகள் பெற்றுக்கொண்டனவா என்று சிந்திக்குமிடத்து விடை திருப்திகரமானதாக இல்லை. தேர்தல் காலங்களில் சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு பின்னர் அவர்களைத் தூக்கி எறியும் பிழையான போக்கே பெரும்பான்மைக் கட்சிகளிடம் அதிகமாகக் காணப்படுகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.
மலையக மக்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதிலும் பார்க்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகளவில் ஆதரவு வழங்குவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அந்தளவிற்கு இம்மக்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் புறந்தள்ளுவதற்குக் காரணம் என்ன என்கிற கேள்விக்கு விடைகள் பல காணப்படுகின்றன. ஸ்ரீல.சு. கட்சி மலையக மக்களுக்கு இழைத்த துரோகங்களின் காரணமாக அக்கட்சி அவர்களின் இதயங்களில் இடம் பிடிக்கத் தவறி இருக்கின்றது என்பதே கசப்பான உண்மை.
வாக்கு
வாக்கு என்பது ஒரு வேட்டுக்கு சமமானது என்பார்கள். அரசியல் உரிமைகளில் வாக்களிக்கும் உரிமை என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. பிரஜைகள் வாக்களிப்பதன் மூலமாக ஆட்சியாளர்களைத் தெரிவு செய்கின்றார்கள். ஜனநாயக நாடுகளில் தேர்தல்கள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்ற நிலையில் வாக்களிப்பு, தேர்தல்கள் என்பனவற்றின் ஊடாக மக்களின் விருப்பங்கள் பிரதிபலிக்கின்றன. வாக்களிக்கும் உரிமையானது எல்லா வயது வந்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். லஸ்கி என்ற அறிஞர் வாக்குரிமை மட்டுப்படுத்தலை நிராகரித்திருக்கின்றார். மேலும் மக்களின் ஒரு பிரிவினருக்கு வாக்குரிமை மறுக்கப்படுவதன் மூலம் அரசாங்க நலன்களை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலையே ஏற்படும். அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்த முடியாத மக்கள் குழுவின் மீது அரசாங்கத்தின் அக்கறையும் குறைவாகவே காணப்படும் என்றும் அறிஞர் லஸ்கி வலியுறுத்தி இருக்கின்றார். இந்தக் கூற்று முற்றிலும் உண்மையானது.
மலையக மக்கள் நீண்டகாலமாக பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பன இல்லாத சமூகமாக இருந்தனர். இதனால் அவர்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறை குறைவாக இருந்ததோடு நாதியற்ற சமூகமாக நீண்ட காலமாக மலையகம் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பவற்றைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் இம்மக்களை ஏறெடுத்துப் பலரும் பார்க்கும் நிலைமை ஏற்பட்டது.
வாக்கு என்பது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் உந்து சக்தியாக அமைகின்றது. இந்நிலையில் மலையக மக்கள் சிறுபான்மையினர் என்ற ரீதியில் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் ஒரு போக்கினை கொண்டிருக்கின்றனர். மலையக கட்சிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பெரும்பான்மைக் கட்சிகளுக்கு காலத்துக்குக் காலம் தங்களது வாக்குகளை வழங்கி வருகின்றனர். எனினும் வாக்களிப்பு என்பது மலையக மக்களைப் பொறுத்தவரையில் எந்தளவுக்கு சாதக விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றது? மலையகத் தலைமைகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பெரும்பான்மைக் கட்சிகளுக்கு வாக்களித்ததால் பெற்றுக்கொண்ட நன்மை என்ன? மலையக மக்களின் பிரச்சினைகள் அதிகமுள்ள நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள் இவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுத்தனவா?—-போன்றவை பற்றிச் சிந்திக்கையில் மலையலக மக்கள் நம்பி ஏமாந்த நிலைமைகளே அதிகமாக காணப்படுகின்றன. பெரும்பான்மை கட்சிகள் தமது இலக்கு நிறைவேறியபின் பல சந்தர்ப்பங்களில் மலையக மக்களை கை கழுவி இருக்கின்றன. `ஆற்றை கடக்கும் வரை அண்ணன் தம்பி; ஆற்றைக் கடந்த பின் நீ யாரோ? நான் யாரோ?’ என்ற போக்கே பெரும்பான்மைக் கட்சிகளிடம் காணப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல.
சில மலையக அரசியல்வாதிகள் பெரும்பான்மைக் கட்சிகளின் கோரமுகம் தெரிந்திருந்தும் தமது சுயஇலாபத்துக்காகவும் அமைச்சுப் பதவிக்காகவும் பெரும்பான்மைக் கட்சிகளுக்காக வக்காளத்து வாங்குவதையும் கூறியாதல் வேண்டும். இத்தகையோரை சமூகத்தின் துரோகிகள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?.
ஐ.தே. கட்சி மற்றும் ஸ்ரீல.சு. கட்சி தொடர்பில் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் தொடர்ச்சியாகவே விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. மாறிமாறி நாட்டை ஆட்சி செய்யும் இக்கட்சிகள் நாட்டின் வளங்களைச் சுரண்டுவதிலும் அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதிலும் அதிகமாக ஆர்வம் செலுத்தி வருகின்றன. மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதிலோ அல்லது நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்வதிலோ இக்கட்சிகளுக்கு அக்கறை இல்லை. இக்கட்சிகளின் செயற்பாடுகள் நாட்டைச் சீரழித்திருப்பதோடு நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் சவாலாக உள்ளதாக ஜே.வி.பியின் முக்கியஸ்தர் ஒருவர் ஏற்கனவே கூறியிருந்ததும் இங்கு நோக்கத்தக்கது. இது ஒரு புறமிருக்க, ஐ.தே. கட்சி, ஸ்ரீ லங்கா சு. கட்சி என்ற இரண்டையும் நாம் நோக்குகையில் ஸ்ரீ லங்கா சு. கட்சி தொடர்பில் மலையக மக்கள் பலரிடையே அதிருப்தியான வெளிப்பாடுகள் இருந்து வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று எண்ணியபோது பல்வேறு விடயங்களையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. ஸ்ரீல.சு. கட்சி ஒரு தேசியக் கட்சி என்று சொல்லப்பட்டாலும் அக்கட்சிக்கு ஒரு சிங்கள பௌத்த அடிப்படை காணப் படுகின்றது. பல்லின மக்கள் வாழும் இலங்கையில் இந்த பௌத்த அடிப்படை நிலையானது சாதக விளைவுகளுக்கு வலுசேர்க்குமா என்று நோக்க வேண்டியுள்ளது.
பௌத்தமும் அரசியலும்
ஸ்ரீல.சு. கட்சியை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க உருவாக்கினார். பௌத்த குருமார்களுக்கு முக்கியத்துவமளித்து இவர் செயற்பட்டார். அவர்களையும் இணைத்துக்கொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார். பௌத்தத்தையும் அரசியலையும் இணைத்த ஒருவராக பண்டாரநாயக்க விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. அரசு வேறு, மதம் வேறு என்று இன்று நோக்கப்படுகின்றது. தேசிய அரசுகள் இவ்வாறே இன்று உருவாகியுள்ளன. எனினும் மதமும் அரசியலும் அன்று கலந்த நிலையில், அதனால் பல்வேறு விளைவுகளையும் சந்திக்கவேண்டி இருந்தது. ஸ்ரீல.சு. கட்சியின் போக்குகள் சிறுபான்மை மக்களிடையே அதிருப்தி நிலைகள் பலவற்றையும் தோற்றுவித்திருந்தன.
தனிச் சிங்களச் சட்டம்
தனிச் சிங்களச் சட்டம் என்பது இந்நாட்டின் வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயமாக அமைந்தது. இச்சட்டம் சிறுபான்மை மக்களிடையே அதிருப்தி நிலைகள் பலவும் மேலெழுவதற்கு உந்து சக்தியாகியது. பௌத்த பிக்குமார்கள் 1950 களின் முற்பகுதியில் சங்கங்கள் அமைத்து பின்னர் சங்கங்களின் ஒன்றியங்களையும் நிறுவி புத்த ஜயந்திக்கான ஆரம்ப வேலைகளில் ஈடுபட்டனர்.
‘எக்சத் பிக்கு பெரமுன’ ஏற்படுத்தப்பட்டது. பிக்குகளை ஒழுங்கமைத்து ஐ.தே.கவை தோற்கடிப்பதற்காகவே இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. புத்த ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்ட கருத்துகளும் இவ்வொன்றியத்தின் முக்கிய அம்சங்களில் அடங்கி இருந்ததாக புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். அரசு அங்கீகாரமும் ஆதரவும் பெற்று புத்த மதத்தைப் பேணுதல், கல்விச் சீர்திருத்தங்கள், பௌத்த சொத்துகளுக்கு சலுகைகள் போன்ற பல விடயங்கள் இதில் உள்ளடங்கி இருந்தன. மேலும் பௌத்த பிக்குகள் ‘சிங்களம் மாத்திரம்’ கொள்கையின் பிரசாரர்களாகவும் செயற்பட்டதாகவும் தெரியவருகின்றது. பிக்குகள் மொழிப்பிரச்சினை பற்றி மிகுந்த ஆர்வம் காட்டியதாக குமாரி, ஜெயவர்தனா போன்றோர் சுட்டிக்காட்டி இருக்கின்றமையும் அவதானிக்கத்தக்கது.
ஸ்ரீல.சு. கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றார். இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் முதல் மசோதா சிங்களத்தையே தனியொரு மொழியாக்குவதாக ஆக்கப்பட்டது. தனிச்சிங்களச் சட்டமானது பல்வேறு பாதக விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று லெஸ்லி, கொல்வின் ஆர்.டி. சில்வா உள்ளிட்ட பலரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இலங்கைக்கு மிகப்பெரிய ஆபத்து வர உள்ளது. அம்மக்கள் தமக்கு அநியாயம் நடப்பதாக உணர்ந்தால் அவர்கள் நாட்டில் இருந்து பிரிந்து போகக் கூட தீர்மானிக்கலாம் என்று லெஸ்லி கூறினார். சிங்களம் மட்டும் சட்டம் எதிர்பாராத விளைவுகளைத் தரும் என்பது கொல்வினின் கருத்தாக இருந்தது. தனிச்சிங்களச் சட்டம் பல்வேறு தழும்புகளுக்கும் வித்திடுவதாக அமைந்தது. இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அ. அமிர்தலிங்கம் இது பற்றித் தெரிவிக்கையில்;
”தனிச்சிங்களம் எனும் கொள்கை இந்த நாட்டில் பொது வாழ்க்கையில் தமிழ் மொழியை அதற்குரிய ஸ்தானத்தில் இருந்து வெறுமனே விலக்கி வைப்பதை மட்டும் கருதவில்லை. ஆனால் அது இந்த நாட்டின் தமிழ்மொழி பேசும் மக்களை இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார வாழ்க்கை என்பனவற்றில் இருந்தே வெளியே தள்ளி வைக்கிறது என்று கூறி இருக்கின்றார்.
ஸ்ரீல. சு. கட்சியை உருவாக்கிய பண்டாரநாயக்க தனிச் சிங்களச் சட்டத்தை முன்வைத்து தமிழ்மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டார். மலையக மக்களின் மனதில் இந்த வெறுப்புநிலை ஆழமாகவே பதிந்துவிட்டது.
ஒப்பந்தங்கள்
ஸ்ரீல.சு. கட்சியின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில ஒப்பந்தங்கள் காரணமாக இந்திய வம்சாவளி மக்களின் இருப்பு கேள்விக்குறியானது. இந்திய வம்சாவளி சமூகம் துண்டாடப்படுவதற்கு இந்த ஒப்பந்தங்கள் வலு சேர்ப்பதாக அமைந்தன எனலாம். 1964 மற்றும் 1974 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் விளைவாக இந்திய வம்சாவளியினர் எத்தகைய விளைவுகளை எதிர்நோக்க நேர்ந்தது என்பதை பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தனது கட்டுரை ஒன்றிலே தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார். இதன் அடிப்படையில் நோக்குகையில் 1964 ஆம் ஆண்டில் நாடற்றவர்களின் தொகை ஒன்பது லட்சத்து 75 ஆயிரம் எனக் கொள்ளப்பட்டு இலங்கை மற்றும் இந்திய அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ஐந்து லட்சத்து 25 ஆயிரம் பேரை இந்தியாவும் மூன்று லட்சம் பேரை இலங்கையும் ஏற்றுக்கொள்வதென்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. 1974 ஆம் ஆண்டின் இலங்கை –இந்திய ஒப்பந்தத்தின்படி எஞ்சிய ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேரை இரு நாடுகளும் சம அளவில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. எனவே இந்தியா மொத்தமாக ஆறு லட்சம் பேருக்கும், இலங்கை மூன்று லட்சத்து 75 ஆயிரம் பேருக்கும் குடியுரிமை வழங்க முடிவானது. இந்த ஒப்பந்தங்கள் சர்வதேச சட்டப்படி இரு நாடுகளும் தமக்குரிய கடப்பாடுகளை நிறைவேற்றக்கோரி இருந்தன.
ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்ட இந்தியத் தமிழர்கள் அவர்களின் தலைவர்கள் போன்றோருடன் கலந்தாலோசித்து செய்யப்படவில்லை என்று கண்டனங்கள் பலவும் மேலோங்கி இருந்தமையும் யாவரும் அறிந்ததே. இந்திய அரசாங்கம் ஆறு லட்சம் பேரை ஏற்றுக்கொள்ள இணக்கம் தெரிவித்திருந்தது. எனினும் ஐந்து லட்சத்து ஆறாயிரம் பேர் மட்டுமே இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்திருந்தனர். அதேவேளை, ஆறு லட்சத்து 25 ஆயிரம் பேர் இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது 1987ஆம் ஆண்டளவில் மூன்று லட்சத்து 37 ஆயிரத்து 410 பேரும் அவர்களுடைய பிள்ளைகளான ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 952 பேரும் இந்தியக் குடியுரிமை பெற்று இந்தியா சென்றனர். இந்தியா செல்ல வேண்டிய 84 ஆயிரம் பேர் தவிர்ந்த ஏனையோர் இலங்கை குடியுரிமையைப் பெற்றனர். இதேவேளை, இந்தியா திரும்பிய பெருந்தோட்ட இந்திய தொழிலாளர்களுக்கான முழுமையான புனர்வாழ்வுத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இவர்களின் நிலைமைகளை அறிந்த இலங்கை வாழ் இந்தியர்கள், இந்தியா செல்ல தயக்கம் காட்டியதாகவும் செய்திகள் வலியுறுத்துகின்றன. முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இந்தியத் தமிழர்களை எவ்வாறேனும் இந்தியாவுக்கு அனுப்பிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். உயர்ந்தபட்சம் எத்தனை பேரை அனுப்பலாம் என்பது இவரின் எண்ணமாக இருந்தது. இதில் அவர் வெற்றியும் கண்டார். இந்திய வம்சாவளி சமூகம் சிதைவுறுவதற்கு ஸ்ரீமா முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார் என்பதனை எவரும் மறுக்கமுடியாது. இத்தகைய நிலைமைகளும் ஸ்ரீல.சு.கவின் மீது மலையக மக்களை வெறுப்படையச் செய்திருந்தன.
தேசிய மயம்
1972 காலப்பகுதியில் அதிகமான இந்திய வம்சாவளியினர் தோட்ட உரிமையாளர்களாக மாறி இருந்தனர். இந்நிலைமையானது ஸ்ரீல.சு. கட்சிக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி இருந்தது. இந்திய வம்சாவளியினரிடம் இருந்து எவ்வாறு நிலத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆழமாகச் சிந்தித்தனர். பெருந்தோட்டங்களைத் தேசிய மயமாக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இவ்வாறாக தேசிய மயமாக்கியமை, மலையகத் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு விடயமே. இனவாத சிந்தனையுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை பலரும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. மலையகத்தின் சில பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களில் இருந்தும் விரட்டியடிக்கப்பட்டனர். மனித நேயமில்லாத ஒரு கீழ்த்தரமான செயலாக இது சிந்திக்கப்பட்டது. ஒரு தேசிய நிலப்புரட்சி நடக்கின்றது. இந் நடவடிக்கையின்போது சிலர் சிரமத்திற்கு உள்ளாகத்தான் செய்வார்கள் என்று அரசாங்கம் சமாதானம் கூறியது. ஸ்ரீல.சு.கவின் ஆட்சிக் காலத்தில் 1972 இல் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் வேலையின்மைப் பிரச்சினை, உணவுப் பற்றாக்குறை போன்றவை தலைதூக்கின.
இதன் காரணமாக மலையக மக்கள் பலர் வட மாகாணத்தில் சென்று குடியேறினர். மலையக மாவட்டங்களில் ஏற்பட்ட இனக்கலவரங்களும் தொழிலாளர்களின் இடம்பெயர்வுக்குக் காரணமாக அமைந்தன. இவ்வாறு சென்றவர்கள் இலங்கைத் தமிழர் செறிந்து வாழும் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காலப் போக்கில் தமது இந்திய, மலையக அடையாளங்களை கைவிட்டு உள்ளூர் மக்களுடன் கலந்துவிடும் போக்குகள் காணப் படுவதாகவும் புத்திஜீவிகள் வலியுறுத்தி இருந்தனர். ஸ்ரீல.சு. கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சம் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பஞ்சத்தினால் சில தொழிலாளர்கள் பிச்சைப்பாத்திரம் ஏந்தி நகர்ப்புறங்களில் யாசிக்கும் நிலைக்கும் உள்ளாகி இருந்தமை புதிய விடயமல்ல. இத்தனைக்கும் காரணமாக ஸ்ரீல.சு. க. தொழிலாளர்களை நிர்வாணப் படுத்தி வீதியில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. எனவே மலையக மக்கள் எவ்வாறு ஸ்ரீல.சு. கவை ஆதரிப்பார்கள் என்ற நியாயமான கேள்வி மேலெழுகின்றது. சுயநலத்திற்காக சிலர் வேண்டுமானால் இக்கட்சியுடன் இணைந்திருக்கலாம். பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.
1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு
சோல்பரி அரசியல் திட்டம் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருப்பதாகவும் எனவே புதிய அரசியல் யாப்பு முன்வைக்கப்பட வேண்டுமென்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தல்கள் இடம்பெற்று வந்தன. 1956 இல் பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் எதிர்க்கட்சியின் ஆதரவுடன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் போதிய ஆதரவின்மை, மக்கள் ஐக்கிய முன்னணி பிளவுபட்டமை, பண்டாரநாயக்க 1959 இல் சுட்டுக்கொல்லப்பட்டமை என்பன போன்ற நிலைமைகளால் இம்முயற்சி ஈடேறவில்லை. 1970 இல் இடம்பெற்ற தேர்தலில் ஸ்ரீல.சு. க. இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டது. பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க புதிய அரசியல் திட்டம் ஒன்றை உருவாக்க முனைப்புடன் செயற்பட்டார். இதற்கேற்ப 1972 மே 22 ஆம் திகதி தொடக்கம் முதலாவது குடியரசு அரசியலமைப்பு நடை முறைக்கு வந்தது.
முதலாவது குடியரசு அரசியலமைப்பானது சிறுபான்மை மக்களின் நலன்களைப் புறந்தள்ளியதாகவே காணப்பட்டது. பௌத்த மதத்திற்கு வலு சேர்த்திருந்தது. பல்லினத்தன்மை கேள்விக்குறியாகி இருந்தது. சோல்பரி அரசியல் திட்டத்தில் பெயரளவில் காணப்பட்ட சிறுபான்மையோர் காப்பீடு இந்த அரசியல் திட்டத்தில் நீக்கப்பட்டது. சிங்கள மொழியை மட்டும் அரச கரும மொழியாக்கியதன் மூலமும் பௌத்த மதத்தை அரச மதமாக ஆக்கியதன் மூலமும் இந்நாடு சிங்கள பௌத்த நாடு என்ற கருத்து வளர்க்கப்பட்டது. அடிப்படை உரிமைகள் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருந்தன. அரசியல் திட்டத்தில் வலு வேறாக்கம் காணப்படவில்லை. மாறாக அது ஒன்றாக்கமே காணப்பட்டது. குற்றவியல் நீதி ஆணைக்குழு, அரசியலமைப்பு நீதிமன்றம் போன்றவற்றை பலரும் வரவேற்கவில்லை. சிறுபான்மையினர் எல்லாவித நம்பிக்கைகளையும் இழந்து அரசியலில் இருந்தும் அரசாங்கத்தில் இருந்தும் விலகிச் செல்லும் போக்கு வளர்ச்சியடைய முதலாவது குடியரசு அரசியலமைப்பு காரணமாகி இருந்தது. மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஸ்ரீல.சு. கவை இதனால் விரும்பவில்லை. இந்நிலையில் சந்திரிகா ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் ஸ்ரீல.சு.கவின் போக்குகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டதையும் மலையக மக்கள் சார்பாக அவர் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் இங்கு குறிப்பிட்டாதல் வேண்டும். இதேவேளை வடக்கு – கிழக்கு மக்களுக்கான உரிமை வழங்கல் குறித்தும் ஸ்ரீல.சு.க. சாதக நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. 1965 இல் டட்லி –செல்வா உடன்படிக்கை கைவிடப்படுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்ப்பும் ஒரு காரணம்.
ஐ.தே.க. – ஸ்ரீல.சு.க.
ஸ்ரீல.சு.க. மலையக மக்களை பலவழிகளிலும் நிர்வாணப்படுத்த முயன்றது போன்றே ஐதேகவும் மலையக மக்களை நிர்வாணப்படுத்த பல வழிகளிலும் முயற்சித்துள்ளது. பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பவற்றைப் பறித்தெடுத்து நீண்ட காலமாக அரசியலில் அநாதைகளாக மலையக மக்கள் இருக்கும் நிலைமையை ஐ.தே.க உண்டு பண்ணியது. இதன் தழும்புகள் இன்னும் மாறாத நிலையில் ஏனைய சமூகங்களுக்கும் மலையக சமூகத்துக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பதற்கும் இது காரணமாக அமைந்தது. ஐ.தே.கவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இனக் கலவரங்களால் மலையக மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டது. பலர் இந்தியாவிற்கும், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடம்பெயரும் நிலையை இது ஏற்படுத்தி இருந்தது. 1983 கறுப்பு ஜூலையை அவ்வளவு எளிதில் எவராலும் மறந்துவிட முடியாது. இக்கலவரம் குறித்து ஜே.ஆர். ஜெயவர்தனா மீதும் விசனப்பார்வை இருந்து வருகின்றது. 1985 திம்பு பேச்சுவார்த்தை, 2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்த யோசனை என்பவற்றை ஐ.தே.க. எதிர்த்தது. இந்திய –இலங்கை உடன்படிக்கையை (1987) ஸ்ரீல.சு.க. எதிர்த்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐ.தே.க. – ஸ்ரீல.சு.க. இரண்டு கட்சிகளுமே மலையக மக்களுக்கு துரோகமிழைத்துள்ளன. இதில் ஒரு கட்சி பேய் என்றால் இன்னொரு கட்சி பிசாசு. நல்ல பேய், நல்ல பிசாசு என்று இல்லை. இரண்டு கட்சிகளுமே எம்மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளவில்லை. பெரும்பான்மைச் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் கலாசாரத்தை மையப்படுத்தி இக்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. தமிழர்களுக்கு உரிமை வழங்குவதென்றால் இவர்களுக்கு வேப்பங்காயாகக் கசக்கின்றது. இரண்டு கட்சிகளும் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
– துரைசாமி நடராஜா