பாதுகாக்கப்பட வேண்டிய கன்னியா!

இலங்­கை­யொரு பௌத்த நாடு. இங்­குள்ளவர்களில் பெரும்பாலானோர் சிங்­க­ள­வர்கள். இங்கு அனைத்து மதங்­க­ளுக்கும் சம­வு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் இந்த நாட்டின் முழு உரிமை பௌத்­த­ருக்கே உரியது என்­பதை அனை­வரும் ஏற்றுக்கொள்ள வேண்­டு­மென்ற  பௌத்த அடிப்­ப­டை­வாதம் தலைவ™ரித்­தாடும் நிலையில் கன்­னி­யாவில் பௌத்த விகாரை அமைக்க தடை­ எனும்  உயர் நீதி­மன்றின் தீர்ப்­பா­னது நீதி இன்னும் சாக­வில்­லை­யென்பதை நிரூ­பித்துக் காட்­டு­கி­றது.

 

கடந்த திங்­கட்­கி­ழமை (22.07.2019) திரு­கோ­ண­மலை மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் கன்­னியா வெந்­நீ­ரூற்று சர்ச்சை தொடர்பில்  பிறப்­பித்திருக்கும் இடைக்­கால தடை­யுத்­த­ர­வா­னது வர­லாற்று முக்­கி­யத்­துவம்வாய்ந்தது.  அது மாத்­தி­ ரமன்றி, உலக இந்­துக்­களின் ஆன்­மீக கௌர­வத்தை காப்­பாற்­றி­யுள்ள நீதிப் பிர­க­ட­ன­மா­கவும் விளங்­கு­கி­றது.

திருக்­கோ­ணேஸ்­வ­ரத்­துக்கு மேற்கே அமைந்­தி­ருக்கும் கன்­னியா வெந்­நீ­ரூற்று பிர­தே­ச­மா­னது ஒரு வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடம்.  ஒரு புனித பிர­தே­ச­மா­கவும் நூற்­றாண்டுக் காலமாக  இருந்து வந்­துள்­ளது.

இலங்­கா­புரி வேந்தன் இரா­வ­ண­னுடன் தொடர்­பு­பட்­டதும் ஆன்­மீக உலகின் அதி­சயம் எனப் போற்­றப்­படும் ஏழு வெந்­நீ­ரூற்­றுக்­களைக் கொண்­டதும், தட்­ஷண கைலாச புராணம், வீர­சிங்­காத புராணம், திரு­கோ­ணா­சல புராணம் போன்ற பல்­வேறு புரா­ணங்­களால் விதந்­து­ரைக்­கப்­பட்ட பெருமை கொண்­டதும், அகத்­திய மாமு­னியின் மனம்கவர்ந்த புண்­ணிய தலங்களைக் கொண்­ட­து­மான இட­மாக கன்னியா இருந்து வந்­துள்­ளது.

இங்கிருந்த பூர்­வீ­க­மான பிள்­ளையார் ஆலயம் அமைந்­தி­ருந்த இடத்தில் பௌத்த தாதுகோபு­ர­மொன்றை அமைக்க, வில்கம் விகாரை பிக்­குமார் எடுத்­து­வரும் பிர­யத்­த­னங்­க­ளுக்கு தொல்­பொருள் திணைக்­க­ளமும் உடந்­தை­யாக இருந்து வரும் நிலையில் அண்­மையில் பிள்­ளையார் ஆலயம் இருந்த பூர்­வீக மேட்டை உடைத்து பௌத்த தாது கோபுரம் அமைக்க எடுத்த முயற்­சிக்கு தடை விதிக்­கப்­பட  வேண்­டு­மென்ற தீர்­மானம் கடந்த ஜூன் 7 ஆம் திகதி (07.06.2019) நடை­பெற்ற திரு­மலை மாவட்ட ஒருங்­கி­ணைப்புக்குழுக்­கூட்­டத்தில் எடுக்­கப்­பட்­டது.

வழக்குத் தாக்கல்

இத்­தீர்­மா­னத்­தையும் பொருட்­ப­டுத்­தாமல் வில்கம் விகாரை விகா­ரா­தி­பதி மீண்டும் தாதுகோபு­ரத்தை அமைக்கும் முயற்­சியை தீவி­ரப்­ப­டுத்­திய நிலை­யி­லேயே இரா­வ­ண­சேனை, கன்­னியா மர­பு­ரிமை அமைப்பு மற்றும் தென்­க­யிலை ஆதீனம் 2019.07.16 தேதி­யன்று கவ­ன­யீர்ப்பு போராட்­ட­மொன்றை நடத்­தி­யது. அத்­துடன் திரு­கோ­ண­மலை மடத்­தடி, மாரி­யம்மன் ஆலய தர்­ம­கர்த்­தாவும், கன்­னியா வெந்­நீ­ரூற்று மற்றும் பிள்­ளையார் ஆலய தர்­ம­கர்த்­தாவும் நம்­பிக்கைப் பொறுப்­பா­ள­ரு­மா­ன திரு­மதி.கோகி­ல­ர­மணி என்­பவர் மேற்­படி பெளத்­த­மத ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக, ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­ன எம்.ஏ.சுமந்­தி­ரனின் ஆலோ­ச­னைக்­க­மைய திரு­கோ­ண­மலை, மேல் நீதி­மன்றில் 22.07.2019 வழக்­கொன்றை தாக்கல் செய்து ஐந்து தடை­ ஆ­ணை­களை விதிக்­கும்­படி  கோரி­யி­ருந்தார்.

இவர் தனது மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக, தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம், திரு­மலை அர­சாங்க அதிபர் ஆகி­யோரை குறிப்­பிட்டு கன்­னியா என்ற இடத்தில் வெந்­நீ­ரூற்று அமைந்­துள்ள இடம், நிலம் அதை­யொட்­டிய பிள்­ளையார் கோயில் உள்­ளிட்ட காணி மடத்­தடி மாரி­யம்மன் கோயி­லுக்குச் சொந்­த­மா­னது. இதை திரு­மலை மாவட்ட நீதி­மன்றம் வழக்கு இலக்கம் TR/10/2000 இல் நம்­பிக்கை பொறுப்பு கட்­டளைச் சட்டம் 112ஆவது பிரிவின் கீழ் வழங்­கப்­பட்ட பரா­தீ­னப்­ப­டுத்தல் கட்­டளை மூலம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

2011 செப்­டெம்பர் 9 ஆம் திக­தி­ய­ளவில் தொல்­பொருள் சட்­டத்தின் 18 ஆம் பிரிவின் கீழ் மேற்­கு­றிப்­பிட்ட நம்­பிக்கை பொறுப்பு ஆத­னங்­க­ளுக்குள் அடங்கும் கன்­னியா வெந்­நீ­ரூற்று மற்றும் பிள்­ளையார் கோயில் அமைந்­தி­ருந்த பகுதி சம்­பந்­த­மாக கட்­ட­ளை­யொன்று பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டது.

பிள்­ளையார் ஆலயம் அமைந்­தி­ருந்த இடத்தில் விகா­ரை­யொன்றை நிர்­மா­ணிப் ­ப­தற்கு எதி­ரா­ளியும் அவர்­க­ளது முக­வர்­களும் ஊழி­யர்­களும் எதி­ரா­ளியின் கீழ் செயற்­ப­டு­வோரும் திட்­ட­மிட்­டுள்­ளனர். இங்­குள்ள பிள்­ளையார் ஆலயம் 01.11.2001 ஆம் ஆண்டு பதிவு செய்­த­மைக்­கான ஆதாரம் எம்­மி­ட­முண்டு.

மனு­தாரர் அண்­மையில் சில குழு­வி­னரால் தனது உரி­மை­களை செயற்­ப­டுத்­த­வி­டாமல் தடுக்­கப்­பட்டு தாக்­கப்­பட்டார். மேலும் கன்­னியா வெந்­நீ­ரூற்­றுக்கு வரும் பக்­தர்­க­ளிடம் எதி­ராளிகள் அனு­மதி சீட்­டினை விற்­பனை செய்து வரு­கி­றார்கள். இதனை  சில நேரங்­களில் அரு­கி­லுள்ள வில்கம் விகா­ரையின் பௌத்த பிக்­கு­ முன்­னெ­டுக்கிறார் மனு­தா­ரரின் நம்­பிக்கை பொறுப்பிலிருந்து வந்­துள்ள பிள்­ளையார் ஆல­யத்­தி­ன் நிர்­வாகம் அனைத்­தையும் எதிர்­ம­னு­தா­ரர்­களும் கீழ் உள்­ள­வர்­களும் கைப்­பற்­றி­யுள்­ளனர். எனவே மனு­தா­ரரின் நம்­பிக்கைப் பொறுப்­பி­லுள்ள பிள்­ளையார் ஆலயம் இருக்கும் குறித்­த­ இ­டத்தில் விகாரை ஒன்றை நிர்­மா­ணிப்­பதும் நிர்­மா­ணிக்கத் தீர்­மா­னிப்­பதும் மனு­தா­ரரின் உரி­மை­களைத் தடை செய்து மனு­தா­ரரை கோயில் ஆதீன வளா­கத்­திற்குள் அனு­ம­திக்­காமல் மறுப்­பதும் மாரி­யம்மன் ஆதீ­னங்­க­ளிற்குள் பக்­தர்­களை அனு­ம­திக்­காமல் தடை செய்­வதும் அனு­மதி சீட்­டுக்­களை விற்­பனை செய்­வதும் எதிர் மனு­தா­ரரின் அதி­கார வரம்பை மீறிய செயல். ஆகவே பின்­வரும் தடை­ ஆணை­களை வழங்­கும்­படி மனு­தா­ர­ரான திரு­மதி.கோகி­ல­ ர­மணி நீதி­மன்றை கோரி­ய­தற்கு அமைய பின்­வரும் தடை­யா­ணைகள் கடந்த 22.07.2019 ஆம் திகதி தடை­ ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது.

1. கன்­னியா வெந்­நீ­ரூற்­றுக்கு அரு­கில் பிள்­ளையார் கோயில் இருந்­த­ இ­டத்தில் பௌத்த விகாரை கட்­டு­வ­தற்கு தடை­வி­தித்து மன்று இடைக்­கால கட்­டளை பிறப்­பிக்­கின்­றது. குறிக்­கப்­பட்ட கட்­டளை வழக்கு முடியும் வரை அமுலில் இருக்கும்.

2. மனு­தா­ர­ரையோ அல்­லது மற்­றைய பக்­தர்­க­ளையோ கன்­னியா வெந்­நீ­ரூற்­றுக்கோ பிள்­ளையார் கோயி­லுக்கோ செல்­வதை தடுக்கக்கூடாது எனவும் அத்­துடன் அனு­மதி சீட்டு விற்­ப­னைக்கு தடை விதித்தும் இடைக்­கால கட்­டளை மன்­றினால் பிறப்­பிக்­கப்­ப­டு­கி­றது.

3. மனு­தாரர் மாரி­யம்மன் கோயி­லுக்கு உரித்­தான காணி­களில் புனர்­நிர்­மாண வேலைகள் செய்­வதை தடுக்­கக்­கூ­டாது என இடைக்­கால கட்­டளை மன்­றினால் பிறப்­பிக்­கப்­ப­டு­கி­றது.

4. மனு­தா­ர­ரையோ அல்­லது அவர்­க­ளது முக­வர்­க­ளையோ கன்­னி­யாவில் இருக்கும் மாரி­யம்மன் கோயி­லுக்கு உரித்­தான, ஆத­னங்­களை நிர்­வ­கிப்­பதை தடுக்­கக்­கூ­டாது என இடைக்­கால தடை விதிக்­கப்­ப­டு­கி­றது.

5. கன்­னி­யா­வி­லுள்ள பூர்­வீ­க­மான பிள்­ளையார் கோயிலை புனர்­நிர்­மாணம் செய்­வ­தற்கு இடைக்­கால கட்­டளை பிறப்­பிக்­கப் ­ப­ட­வில்லை. குறித்த விடயம் இந்த வழக்கின் கருப்­பொ­ரு­ளாக இருப்­ப­தாலும் தொல்­பொருள் வர்த்­த­மா­னியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­ ப­டி­யாலும் இடைக்­கால கட்­ட­ளையோ  தடையோ வழக்கின் இறுதியில் முடி­வெ­டுக்­கப்­படும் என உயர்­நீ­தி­மன்­றினால் கட்­டளை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. இவ்­வ­ழக்கில் மனு­தா­ர­ரான கோகி­ல­ர­மணி ஐந்­து­வகை தடை­ ஆ­ணை­களை கோரி­யி­ருந்­த­போதும் மேற்­கு­றிப்­பிட்­ட­படி நாலு விட­யங்­க­ளுக்கு தடை­ ஆணை பிறப்­பிக்­கப்­பட்டு, 5 ஆவது விவ­கா­ர­மான கன்­னியா பிள்­ளையார் ஆல­யத்தை மீளவும் புன­ர­மைப்பு செய்­வ­தற்­கான அனு­ம­தியை வழக்கின் முடிவில் எடுக்­கப்­ப­டு­மென நீதி­பதி இளஞ்­செ­ழியன் தீர்ப்பு வழங்­கி­யி­ருந்தார்.

கன்­னியா வெந்­நீ­ரூற்­றுக்கள் பிர­சித்தம் பெற்ற ஊற்­றுக்கள் மாத்­தி­ர­மன்றி வர­லாற்­றுக்கு முந்­திய காலந் தொடக்கம் பிர­பலம் பெற்ற புனித நீராக போற்­றப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது. தந்­தையை இழந்­த­வர்கள் தாயை இழந்­த­வர்கள் தமது அந்­தி­சஷ்டி கட­மை­களை முடிப்­ப­தற்கும், வரு­டந்­தோறும் நினைவு கொள்­ளப்­படும் ஆண்டு திவ­சத்தை முன்­னிட்டும் இந்தப்­ பு­னித நீரூற்­றுக்­களில் நீராடி உரிய சடங்­கு­களை மேற்­கொண்டு இங்­குள்ள பிள்­ளையார் மற்றும் சிவன் ஆல­யங்­களை தரி­சித்து, வணங்கிச் செல்­வது பூர்­வீ­க­மான வர­லாறு, ஆடி­அ­மா­வாசை, சித்­திரா பௌர்­ணமி, நவ­ராத்­திரி, சிவ­ராத்­திரி ஆகிய விஷேட தினங்­க­ளுக்கும் வருகை தந்து பிதிர்க்­க­டன்­களை செய்து வரு­வது பல கால­மாக இடம்­பெற்­று­வரும் சம்­பி­ர­தா­யங்­க­ளாகும்.

இந்த ஐதீகம் உண்­டா­கு­வ­தற்கு கூறப்­படும் சம்­ப­வங்­களை தட்­ஷண கைலாச புராணம் கோணேசர் கல்­வெட்டு, வீர­சிங்­காத புராணம், இரா­மா­யணம் போன்ற புராண இதி­கா­சங்கள் மூலம் விளக்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கன்­னியா என்ற பெய­ருக்­கு­ரிய கார­ணங்­களும் அவற்றில் கூறப்­பட்­டுள்­ளது.

வரலாறு கூறும் கதை

இலங்கை வேந்தன் இரா­வணன் தன் தாயார் கைகே­சியின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க லிங்­க­மொன்றை பெற கோணேஸ்­வரம் வந்து கடும் விரதம் இருக்­கிறான். இராவணன் சிவ­னிடம் லிங்­கத்தைப் பெற்று பிர­திஷ்டை செய்து விட்டால் அவனை வெல்ல பிர­பஞ்­சத்தில் யாராலும் முடி­யாது என்­பதை தனது ஞான­நி­லையால் உணர்ந்துகொண்ட விஷ்ணு பகவான் இராவணன் லிங்­கத்தை சிவ­னி­ட­மி­ருந்து பெறா வண்ணம் முனிவர் வேடம் தாங்கி சூழ்ச்சி செய்து உன் தாயார் கைகேசி இறந்து விட்டார் என பொய்­யு­ரைக்­கின்றார்.

அது கேட்டு புலம்­பிய இரா­வணன் முனிவர் வேடத்­தி­லுள்ள விஷ்­ணு­ப­க­வா­னிடம் தனது தாயாரின் ஈமக்­கி­ரி­யை­களை நடத்­தித் ­த­ரும்­படி இரங்கி நிற்க, அதற்கு உடன்­பட்ட விஷ்ணு கோணேஸ்­வ­ரத்­துக்கு மேற்குப் புற­மா­க­வுள்ள கன்­னியா எனும் இடத்­திற்கு ஈமக்­கி­ரி­யை­களை செய்ய அழைத்து வந்து கிரி­யை­களை செய்­வ­தற்­காக, தனது கரத்­தி­லுள்ள தண்­டினால் ஏழு இடத்தில் ஊன்­றினார். ஊன்­றிய இடங்­களில் கடும் சூடு, இளஞ்­சூடு என ஏழு வகை பேத­முள்ள கூவல்கள் உண்­டா­கி­ய­தா­கவும், அதன் தொடர்ச்­சி­யா­கவே இறந்­த­வர்­களில் ஈமங்­களை செய்யும் வழக்கம் உரு­வாகி வந்­த­தா­கவும் ஐதீகம்.

கன்­னி­யாவின் திருப்­ப­ணி­களை குளக்­கோட்­டு­மன்னன், கஜ­பாகு மன்னன், அதன்­முன்னே குளக்­கோட்­டனின் தந்தை போன்றோர் செய்­துள்­ள­தாக, மரபு வழிக் கதைகள் மூலம் அறி­யப்­ப­டு­வ­துடன் இவ்­வெந்­நீ­ரூற்று புகழை, நவா­லியூர் சோம­சுந்­த­ரப்­பு­லவர் மற்றும் 1961ஆம் ஆண்டு பிள்­ளையார் ஆல­யத்தில் நடை­பெற்ற ஆடி­ய­மா­வாசை தீர்த்த உற்­ச­வத்தின் போது புல­வர்­மணி ஏ.பெரி­ய­தம்­பிப்­பிள்ளை கன்­னியாய் திரு என்ற பொருளில் பாடிய பாடலும் இதன் புகழை பறை­சாற்­று­வன.

கன்­னி­யாவை கைய­கப்­ப­டுத்தும் சூழ்ச்சி அல்­லது பௌத்த மய­மாக்கும் முயற்­சிகள் முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­தனா காலத்­தி­லி­ருந்தே இடம்­பெற்று வந்­துள்­ளது என்­பதை கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் அண்­மையில் குறிப்­பிட்­டி­ருந்­தது இங்கு ஞாப­கத்தில் கொள்­ளப்­பட வேண்­டிய விடயம்.

கன்­னியா வளாகப் பகு­தியில் பிள்­ளையார் ஆலயம், சிவன் ஆலயம், முருகன் ஆலயம் என்­பவை இருந்­த­மைக்­கான தட­யங்கள் இருந்­த­போ­திலும் சிவன் ஆலயம் 1950ஆம் ஆண்­டு­களை அண்­மிய பகு­தி­களில் சிதை­வ­டைந்து போன நிலையில் பிள்­ளையார் ஆலயம், கன்­னியா பிள்­ளையார் ஆல­ய­மென தொடர்ந்து 1983 ஆம் ஆண்­டு­வரை வழி­பட்டு வரப்­பட்­டுள்­ளது. இவ்­வாண்­டுக்குப் பின் ஏற்­பட்ட கல­வ­ரங்­களைத் தொடர்ந்து சில விஷ­மி­களால் இவ்­வா­லயம் துவாம்சம் செய்­யப்­பட்ட நிலையில் இதை புன­ர­மைப்­ப­தற்­கான முயற்­சிகள் 1985 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதற்­கென, ஆலய புன­ர­மைப்பு சபை­யொன்று உரு­வாக்­கப்­பட்­டது. (ஆதாரம் வீர­கே­சரி 02.05.1985) இதற்­கான ஏற்­பாட்டை, முன்னாள் கிரா­மோ­தய சபைத் தலைவர் கே.சண்­மு­க­ராசா செய்­தி­ருந்தார்.

ஏலவே இவ்­வா­லயம்  இந்து சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தில் 07.05.1985 பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இதே­வேளை கன்­னியா வெந்­நீ­ரூற்றுப் பிர­தே­சத்தின் பரா­ம­ரிப்பு நட­வ­டிக்­கை­களை உப்பு வெளி பிர­தேச சபை 1950 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து மேற்­கொண்டு வந்­த­தென்றும் 1957 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் திரு­கோ­ண­மலை மாவட்ட அர­சாங்க அதி­ப­ரா­க­வி­ருந்த மக்­ஹெய்சர் (Anton Rothwell McHeyzer )உப்பு வெளி பிர­தேச சபைக்கு 28.02.1958 தேதி­யி­டப்­பட்ட ஆவ­ணத்தின் மூலம் வெந்­நீ­ரூற்றுப் பகு­தியை கைய­ளித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் உப்­பு­வெளி பிர­தேச சபை 2010 ஆம் ஆண்டு வரை நீருற்றுப் பகு­தியை பரா­ம­ரித்து வந்­த­துடன் வரு­வோ­ரிடம் கட்­ட­ணமும் அற­விட்டு வந்­துள்­ளது.

முள்­ளி­வாய்க்கால் யுத்­தத்தை தொடர்ந்து வடகிழக்­கி­லுள்ள தொன்­மை­மிக்க இடங்கள், ஆல­யங்கள் பூர்­வீக சின்­னங்கள் மற்றும் அடை­யா­ளங்­களை கைய­கப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­யுடன் பௌத்த மய­மாக்கும் தீவிர முயற்­சிகள் முன்­னெ­டுத்து வரப்­படும் கொடு­மையின் ஓர் அத்­தி­யா­ய­மா­கவே கன்­னியா கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

2010 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 5 ஆந்திகதி (05.10.2010) கன்­னியா வெந்­நீ­ருற்று பகு­திக்குள் நுழைந்த திரு­கோ­ண­மலை மாவட்ட அர­சாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரி.ரி.ஆர்.டி.சில்­வாவும் அவ­ரது குழு­வி­னரும் அங்­குள்ள விளம்­ப­ரப் ­ப­ல­கை­களை சேதப்­ப­டுத்தி பிடுங்கி எறிந்­த­துடன் உப்­பு­வெளி பிர­தேச சபை ஊழி­யரின் கையி­லி­ருந்த கட்­டண பற்­றுச்­சீட்­டுக்­க­ளையும் கைப்­பற்றி இது தொல்­பொ­ரு­ளுக்­கு­ரிய பிர­தேசம் இதற்குள் யாரும் உள்­நு­ழைய முடி­யாது பிர­தேச சபைக்கு அதி­கா­ர­மில்­லை­யென எச்­ச­ரித்து விட்டும் சென்­றுள்­ளனர்.

இங்கு உப்­பு­வெளி பிர­தேச சபையால் விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த இரா­வ­ண­னுக்கும் வெந்­நீ­ருற்­றுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் விபரப் பல­கையும் பிடுங்கி எறி­யப்­பட்டு, மறு வாரந்­தொ­டக்கம் தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கு கைய­ளிக்­கப்­பட்­ட­துடன் கட்­டணம் அற­விடும் அதி­கா­ரமும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இச்­சம்­பவம் தொடர்பில் உப்­பு­வெளி பிர­ தேச சபை தவி­சாளர் தங்­க­வே­லா­யுதம் காந்­த­ரூபன் தலை­மையில் பிர­தேச சபையில் 6.10.2010 கண்­டன தீர்­மா­ன­மொன்று நிறை­வேற்­றப்­பட்­ட­துடன் இது தொடர்பில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் சந்­தி­ர­காந்தன் மற்றும் திரு­மலை பட்­ட­ணமும் சூழலும் பிர­தேச செய­லா­ள­ருக்கு எழுத்து மூல முறைப்­பாட்டை செய்­தி­ருந்தார். ஆனால் எந்த பயனும் இல்­லாத நிலையே காணப்­பட்­டது. வழக்­கொன்றை தொடர முடி­யாத  ­நி­லையும் காணப்­பட்­டது.

உப்­பு­வெளி பிர­தேச சபையின் தவி­சா­ளரின் முறைப்­பாட்­டுக்கு பதில் அனுப்­பிய திரு­ம­லையின் பட்­ட­ணமும் சூழலும் பிர­தேச செய­லாளர் இவ்­வாறு தனது கடி­தத்தில் குறிப்­பிட்­டி­ருந்­த­தாக குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

உப்­பு­வெளி பிர­தேச சபை தவி­சாளர் கூறி­யுள்ள 1958 ஆம் ஆண்டு திரு­கோ­ண­மலை அர­சாங்க அதிபர் மக் ஹெய்சர் அவர்­களால் பிர­தேச சபைக்கு வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் கன்­னியா வெந்­நீ­ருற்­றுப்­ப­குதி 1981 ஆம் ஆண்டின் (9.11.1981) தேசிய 47 ஆம் இலக்க காணி நிர்­ணய சட்­டத்தின் 166/04 இலக்க அரச வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் அரச உடமை ஆக்­கப்­பட்­டுள்­ளது என நில அள­வைத்­தி­ணைக்­கள ஆவ­ணங்­களின் மூலம் அறிய முடி­கி­றது. குறிப்­பிட்ட வரை­ப­டத்­துண் டில் H என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட காணி தவிர உப்­பு­வெளி பிர­தேச சபைக்கு வேறு உரிமை கொண்ட பகு­திகள் இல்­லை­யென அவரால் அறி­யப்­பட்­டி­ருந்­தது.

பிள்ளையார் விக்கிரகம்

கன்­னியா பிள்­ளையார் ஆலயம் 1983 ஆம் ஆண்டு­களில் துவாம்சம் செய்­யப்­பட்­டி­ருந்தபோதும் அங்­கி­ருந்த பிள்­ளையார் விக்­கி­ர­கத்தை சில அன்­பர்கள் காப்­பாற்றி சிறிய கொட்­டி­லொன்று அமைத்து பாது­காத்து வந்­துள்ள நிலையில் தான் 2002ஆம் ஆண்டு சமா­தான காலத்தில் ஆல­யத்தை புன­ர­மைப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு கன்­னியா பிள்­ளையார் ஆலய தர்­ம­கர்த்­தாவும் திரு­கோ­ண­மலை மடத்­தடி மாரி­யம்மன் கோவில் நம்­பிக்கைப் பொறுப்­பா­ள­ரு­மா­கிய ரத்­தி­னம்­மாவின் ஏற்­பாட்­டுக்கு அமைய கோணேஷர் ஆலய பரி­பா­லன சபைத் தலைவர் சட்­டத்­த­ரணி மு.கோ.செல்­வ­ராஜா ஆகியோர் ஆல­யத்­துக்­கான அடிக்­கல்லை நாட்­டினார். இதைக் கேள்­வி­யுற்ற வில்கம் விகாரை விஹா­ர­ாதி­பதி கடும் எதிர்ப்புக் காட்­டினார்.அனு­ரா­த­புர கால தொன்­மங்­களை சிதைத்து பிள்­ளையார் ஆல­யத்தை அமைக்­கப்­பார்க்­கி­றார்கள் என குற்றம் சாட்டி அரச படை­களின் உத­வி­யுடன் தடுத்தார்.

மீண்டும் 2004 ஆம் ஆண்டு ஆல­யத்தை புன­ர­மைக்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இம்­மு­யற்­சியை மீண்டும் முன்­னெ­டுத்து அடிக்கல் நாட்டும் வைப­வத்தை ரத்­தி­னம்மா நடத்­தி­யி­ருந்தார். தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் அடிக்­கல்லை நாட்டி வைத்தார். இவ்­வை­ப­வத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் க.துரை­ரெட்­ண­சிங்கம், அன்பு இல்லப் பொறுப்­பாளர் சுந்­த­ர­லிங்கம், விடு­த­லைப்­பு­லி­களின் பிர­தி­நிதி ஐங்­கரன் மற்றும் பிர­மு­கர்கள் கலந்துகொண்­டி­ருந்­தனர்.

இச்­சந்­தர்ப்­பத்­திலும் வில்கம் விகாரை விஹா­ரா­தி­பதி குறுக்­கிட்டு ஆலயம் அமைப்­ப­தற்­கான தனது ஆக்­ரோ­ஷ­மான எதிர்ப்பைக் காட்­டினார். பிள்­ளையார் ஆலயம் இருந்­த­தாக கூறி புன­ர­மைக்க முயலும் மேடு, பெரிய குளம் வில்கம் விகா­ரைக்கு பூர்­வீ­க­மாக சொந்­த­மா­னது. அனு­ரா­த­புரத்­துடன் தொடர்­பு­பட்ட தொல்­பொருள் தட­யங்­களை அழிக்க முற்­ப­டு­கின்­றார்கள். அவற்றை மூடி மறைக்­கவே ஆல­யத்தை புன­ர­மைக்க முற்­ப­டு­கி­றார்கள். பௌத்த சின்­னங்கள் உள்ள இடத்தில் இந்து ஆலயம் அமைக்­கப் ­ப­டக்­கூ­டாது என வில்கம் விஹா­ரா­தி­பதி தொல்­பொருள் திணைக்­க­ளத்தை தூண்­டி­ விட்­ட­துடன் உப்­பு­வெளி பொலிஸிலும் முறைப்­பாடு ஒன்றும் செய்­யப்­பட்­டது.

இவ்­வி­வ­காரம் பாரா­ளு­மன்­றத்தில் வண. எல்லாவல மேதா­னந்த தேரர் அவர்­களால் கேள்­வி­யாக எழுப்­பப்­பட்டு கன்­னியா வெந்­நீ­ருற்­றுப்­ப­கு­தியில் சட்டவிரோ­த­மாக இந்து ஆல­ய­மொன்று அமைக்­கப்­பட்டு வரு­வ­தாக கூறி­ய­தற்கு கலா­சார அமைச்சர் விஜி­த­ஹேரத் பதி­ல­ளிக்­கையில், இது தொடர்­பாக வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. நீதி­மன்ற தீர்ப்பு கிடைத்­ததும் ஆலய நிர்­மாண வேலைகள் இடை­நி­றுத்­தப்­ப­டு­மென பதி­ல­ளித்­தி­ருந்தார்.

உப்­பு­வெளி பொலிஸில் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டுக்கு அமைய தொல்­பொருள் சட்­டத்தின் கீழ் திரு­மலை நீதி­மன்றில் வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்டு இவ்­வ­ழக்­கா­னது 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை நடத்­தப்­பட்ட நிலையில் தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரிகள் நீதி­மன்­றுக்கு தொடர்ந்து வராத நிலையில் வழக்கு தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.

காணி பெற்ற தேரர்

ஆனால் கன்­னி­யாவை கைய­கப்­ப­டுத்தும் முயற்­சியை மிக தீவி­ர­மாக செயற்­ப­டுத்தி வந்த பெளத்த குரு­வா­னவர் 2009 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண காணி ஆணை­யா­ள­ருக்கு விண்­ணப்­பித்து (26.11.2009) வெந்நீருற்றுக்கு அருகில் 0.4120 ஹெக் டெயர் விஸ்தீரணமுடைய காணியை வில்கம் ரஜமகா விஹாராதிபதி நீண்டகால குத்தகைக்கு பெற்றிருந்ததுடன் 2010ஆம் ஆண்டு குறிப்பிட்ட சம்பவம் நடந்ததற்குப் பின் நீருற்றுக்கு மேலுள்ள சுமார் 50 மீற்றர் தொலைவில் பௌத்த விகாரையொன்றையும் நிர்மாணித்து முடித்திருந்தார். இவ்விகாரை நிர்மாணிப்புக்கு உப்புவெளி பிரதேச சபையின் அனுமதியோ தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியோ பெறப் படவில்லையென உப்புவெளி பிரதேச சபையினர் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு சில தமிழ் அதிகாரிகளும் அரசாங்க அதிபரும் உடந்தையாக இருந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கன்னியா வெந்நீருற்று விவகாரம் பிள்ளை யார் ஆலய சர்ச்சை மற்றும் கன்னியா காணி உரிமம் சார்ந்த பிரச்சினையென ஏகப்பட்ட குழப்ப நிலைகளைக் கொண்டதாக கன்னியா விவகாரம் இன்று சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகியிருக்கிறது.

கன்னியாவின் காணி உரிமம் சார்ந்த விவகாரத்தில் திருகோணமலை மடத்தடி மாரியம்மன் ஆலய தர்மகர்த்தாவாகிய ரத்தினம்மாவின் மகள் கோகிலரமணியிடம் மாரியம்மன் ஆலயத்துக்கு உரித்தாக்கப்பட்ட 1984ஆம் ஆண்டு ஆவணங்களின்படி உறுதியாக்கப்பட்டுள்ளது. 1623–1638ஆம் ஆண்டுவரை பறங்கிய படைத்தளபதியாக இருந்த நபரால் மடத்தடி மாரியம்மனுக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்ட ஒரு பிரதேசமே கன்னியா வெந்நீருற்றும் பிள்ளையார் ஆலயமும் என்பது பல ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய பூர்வீகமும் வரலாற்றுப் புகழும் கொண்ட பிரதேசத்தை பௌத்த மயமாக்கி அருகிலுள்ள விகாரையொன்றின் அதிகாரத்துக்கு கீழ் கொண்டுவரும் வேட் டையானது திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி உலக இந்துக்களுக்கும் விடுக்கப்படும் சவாலா கவே மாறிவரும் நிலையில்தான் மேற்படி இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டமை ஆறுதலைத் தருகின்றது. ஆயிரக் கணக்கான உள்நாட்டுப் பயணிகளும் வெளிநாட்டுப் பயணிகளும் தினந்தோறும் வந்து செல்லும் கன்னியா வெந்நீரூற்று பூர்வீகமானது, புனிதமானது, புகழ்பெற்றது என்ற பெருமையுடன் அது பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே அனைவரது பிரார்த்த னையாகும்.