தான்சானியா தீவு ஒன்றில் கரையொதுங்கிய விமான இறக்கையின் பாகம் மாயமான மலேசிய எம்.எச்.370 விமானத்தினுடையது என்று அவுஸ்ரேலிய அதிகாரிகள் வியாழனன்று தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தில் தான்சானியாவின் பெம்பா தீவுகளில் கடற்கரையில் ஒதுங்கிய இந்த உதிரிபாகத்தை அருகிலிருந்த குடியிருப்பு வாசிகள் அடையாளம் கண்டனர். இதனை ஆராய்ந்த அவுஸ்ரேலியா போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் இந்த பாகம் எம்.எச்.370 விமானத்தினுடையதே என்று உறுதி தெரிவித்துள்ளனர்.
மார்ச் 8, 2014, உலகை உலுக்கிய அன்றைய தினத்திலிருந்து இந்தியப் பெருங்கடலின் பல்வேறு கடற்கரைகளில் சில பாகங்கள் ஒதுங்கியது மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று சந்தேக அளவில் இருந்து வருகிறது.
தற்போது இந்த இறக்கை உதிரிபாகத்துடன் சேர்த்து 5 உதிரிபாகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, கடந்த ஆண்டு மடகாஸ்கர் ரீயூனியன் தீவுகளில் ஒதுங்கிய இன்னொரு இறக்கை போன்ற பாகம் எம்.எச். 370 விமானத்தைச் சேர்ந்தது என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த புதிய உதிரிபாகம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
Eelamurasu Australia Online News Portal