இலங்கையில் அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கின்றமையானது மக்களின் அமைதியான ஒன்று கூடலுக்கு தடையாக காணப்படுகின்றது. அத்துடன் இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றவேண்டும். இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐக்கியநாடுகள் சபை தயாராகவே இருக்கின்றது என்று இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.வின் அமைதியான ஒன்றுகூடலுக்கான விசேட அறிக்கையாளர் கிளமன்ட் நைலட்சோஸி தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்ப்பில் சரியான ஆலோசனைகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபை எப்போதுமே தயாராகவே இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்றைய தினம் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
மக்கள் ஒன்று கூடி தமது குரல்களைக் கேட்கச் செய்யும் ஆற்றலிலே, அமைதியாக ஒன்றுகூடுவதற்கும் சங்கங்களை அமைப்பதற்குமான உரிமைகளின் வேர்கள் தங்கியுள்ளன. இலங்கை நாடு இதுவரையில் அடைந்துள்ள ஜனநாயக முன்னேற்றத்தை மேலும் மெருகூட்டுவதென்பது, இலங்கை மக்கள் ஐக்கியத்துடன் இயங்குவதிலேயே தங்கியுள்ளது.
“இலங்கை பல சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகளின் பங்குதாரதரப்பு நாடாகும். எனவே, அரசு பல மனித உரிமைக் கடப்பாடுகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக அரசிற்கு பல தெளிவான கடப்பாடுகள் உண்டு. இக்கடப்பாடுகளைப் பிரதிபலிப்பதற்கு பல சட்டவாக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கடப்பாடுகளை முழுமையாக அடைவதற்கு சமூகத்தின் பிரிவினைகள் அச்சுறுத்தலாக அமைகின்றன.”
ஜனநாயக ரீதியான நன்மைகளின் பின்னடைவுகள் பற்றிய பரந்துபட்ட அச்சுறுத்தல்கள் சமூகத்தின் அனைத்து துறைகளாலும் தெரிவிக்கப்பட்டது. சுதந்திரத்திற்கான மக்களின் அபிலாசைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் நாட்டின் அரசியல்தலைவர்கள் நிராகரிக்ககூடாதென்பது மிக முக்கியமானது. போராடி பெற்ற ஜனநாயக உரிமைகள் தொடர்பான முன்னேற்றத்தைக் குறைத்து மதிப்பிடுதல் போன்ற விடயங்களை எதிர்வரும் தேர்தல்களின்போது அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளக்கூடாது.
அமைதியாக ஒன்றுகூடல், சங்கங்களை அமைக்கும் சுதந்திரம் என்பன இலங்கை அரசியல் அமைப்பில் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், தண்டனைக் சட்டக் கோவை, சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பன மேற்படி உரிமைகளுக்கு தீஙகு ஏற்படுத்தும் வாய்ப்புக்களை உண்டு பண்ணும்.
“காணாமல் ஆக்கப்படுதல், காணி உரிமைகள், வாழ்வாதாரம், வளங்களையும் அபிவிருத்தி திட்டங்களையும் அணுகுதல் என்பவை தொடர்பாக பாரபட்சமான முறையில் இந்தச் சட்டங்கள் பிரயோகிக்கப்படுவது மீதும் எனது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.”
“ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்களையும் ஆர்ப்பாட்டங்களின்போது பங்குபற்றுனர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.”
ஏப்ரல் மாதத்தில் பேரழிவையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய பயங்கரவாதத் தாக்குதல் அதேசமயம் சென்ற ஆண்டு அரசியல் அமைப்பு ரீதியான நெருக்கடிகள் என்பன ஏற்பட்ட சூழலில் அதற்கு மேலதிகமாக தற்போதைய அவசரகாலச்சட்டத்தின் பிரயோகம் என்பன மனஅழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.
சிவில் சமூகத்தின் சில உறுப்பினர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் அமைதியாக ஒன்றுகூடுவதிலும் பல கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.
அண்மையில் பல சட்டவாக்கச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அரச சார்பற்ற நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சகல தொழிற்சட்டங்களையும் ஒருங்கிணைப்பதற்கான சட்டமூலம் இவற்றுள் சிலவாகும். எவ்வாறாயினும் சிவில் சமூக பரப்புரையாளர்கள் முன்வைத்த கடுமையான எதிர்ப்பு காரணமாக சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள உரிமைகள் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி சட்ட மூலங்கள் போதிய பங்கேற்பு ஆலோசனை இன்றி வரையப்பட்டதாகவும் சிவில் சமூகப் பரப்புரையாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.
இத்தகைய எதிர்ப்பு இயக்கங்களையடுத்து அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூலம் குறிப்பிட்ட அமைச்சினரால் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதோடு சிவில் சமூகம் தமது சட்டவரைவினை கலந்துரையாடலுக்கு முன்வைப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது”
2009 இல் நீண்டகால அழிவுகரமான யுத்தத்தின் பின்னர் பாதுகாப்புத்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமை, சிவில் சமூகம் இயங்குவதில் கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாகவும் ஏனைய சிவில் சமூக நடவடிக்கைகள் பற்றியும் தொடர்ச்சியான புலனாய்வுக் கட்டமைப்புக்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்துவதன் காரணமாக மனித உரிமை பாதுகாவலர்கள் மீது தொந்தரவையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ள நிலைமை அறிக்கையிடப்பட்டுள்ளது.