சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக இந்த முதுகெலும்பு விவகாரம் மாறியுள்ளது. அது என்ன முதுகெலும்பு விவகாரம் என எண்ணத் தோன்றலாம்.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையே இந்த முதுகெலும்பு விவகாரத்தை எடுத்துக் காட்டி, பெரும் பூகம்பமாக வெடிக்க வைத்திருக்கிறார். இதனால் தெற்கு அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதோடு அரசியல்வாதிகளுக்கும் பேரிடியாக இந்த விவகாரம் மாறியுள்ளது.
அப்பாவி மக்கள் சிறிதும் எதிர்பார்த்திராத மிகக் கொடிய துயரச்சம்பவம் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் பதிவாகியது. இந்த சம்பவத்தில் 263 உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருந்தன. இன்னும் பலர் ஆறாவடுக்களுடனும் ஊனத்துடன் மனதில் வலிகளை சுமந்து, கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்தத் துர்ப்பாக்கிய சம்பவம் நடைபெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த 21 ஆம் திகதி பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண் டகை தெரிவித்திருந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பலருக்கு அதிர்ச்சியாகவும் சிலருக்கு விருந்தாகவும் மாறியிருக்கிறது.
சிம்ம சொப்பனம்
பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் அதிக உயிர்கள் காவுகொள்ளப்பட்ட, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தின் மீள்நிர்மாண பணிகள் நிறைவடைந்து, 3 மாதங்களின் பின்னர் கடந்த ஞாயிற்றுக் கிழமை பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அதனைத் திறந்து வைத்தார்.
அங்கு இடம்பெற்ற சிறப்பு ஆராதனையின் போது, பேராயர் மெல்கம் ரஞ்சித் நிகழ்த்தியிருந்த மறையுரையானது, கேட்டவர்களைச் சற்று கண்புருவத்தை உயர்த்த வைத்திருந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை.
அவருடைய உரையில், நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் ஆளும் கட்சியில் உள்ளவர்களை நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தை வைத்து கடுமையாக சாடியிருந்தார்.
ஓர் ஆன்மீகத் தலைவராக இருக்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இவ்வாறு ஓர் உரை நிகழ்த்துவார் என அரசியல் தலைவர்கள் எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கடந்த காலங்களில் ஆன்மீக ரீதியிலேயே பரப்புரைகளை ஆற்றிவந்த பேராயர் கர்தினால், திடீரென கொந்தளித்தமையானது, ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்திருக்கும்.
முதுகெலும்பு இல்லாத அரசியல் தலைவர்கள்
கட்டுவாப்பிட்டி ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு ஆராதனையில் உரையாற்றிய கர்தி னால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஆட்சியில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு எதிராக அதிரடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அதாவது நாட்டை நிர்வகிக்க முடியாத முதுகெலும்பு இல்லாத அரசியல் தலைவர்களே இன்று ஆட்சியில் இருப்பதாகவும் அவர்கள் வீட்டுக்குச் செல்ல தயாராக வேண்டும் எனவும் ஆண்டகை கூறியிருந்தார்.
மேலும் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்கள், அரசியல் சுயலாபத்துக்காக தடுத்து நிறுத்தப்படவில்லை எனவும் அப்பாவி மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டமைக்கு இந்த முட்டாள்களே பொறுப்பு கூற வேண்டும் எனவும் காட்டமாக கூறியிருந்தார்.
வனாத்துவில்லு பகுதியில் அடிப்படை வாதிகள் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல் தலைவர்கள் இவற்றை மூடிமறைத்துவிட்டனர். இதனால் 300 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன எனவும் குறிப்பிட ஆண்டகை தவறவில்லை.
நன்றாக நடந்து திரிந்தவர்கள் இன்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள்
தேசிய கொள்கைகள் இல்லாத அரசியல் தலைவர்களால் நிர்வாகத்தை முறையாக முன்னெடுத்துச் செல்ல முடியாது.முடிவுகளை எடுக்க முடியாத முதுகெலும்பற்ற தலைவர்கள், ஆட்சிப் பொறுப்பை நன்கு நிர்வாகிக்கக் கூடியவர்களிடம் கையளித்துவிட்டு,வீடு செல்ல வேண்டும் எனவும் ஆண்டகை கூறினார்.
அரசின் பொறுப்பற்றதன்மையால் தான் நாட்டில் அசம்பாவிதம் நடந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது. உலக நாடுகளின் பாரிய சதிகளில் எமது நாடு சிக்கிக் கொண்டது. பலம் வாய்ந்த புலனாய்வு பிரிவு, அரசியல் தேவைகளுக்காகவும், புலம்பெயர் அமைப்புகளுக்காகவும் தொடர்ந்து பலவீனப் படுத்தப்பட்டது.இதன் காரணமாகவே சர்வதேச தீவிரவாதம் மிக இலகுவாக தமது மிலேச்சத்தனமான தாக்குதலை முன்னெடுத்து தமது கொடூர நோக்கத்தை நிறைவேற்றிக் கொண் டது எனவும் ஆண்டகை தெரிவித்திருந்தார்.
தாக்குல்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னதாக, இந்திய தூதரகம் நாட்டில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறப் போவதை முன்கூட்டியே அறிவித்திருந்தது. அந்தத் தகவல்கள் மூலம், தாக்குதல்களை தடுத்து நிறுத்தியிருக்க முடியும்; தடுத்திருக்க வேண்டும். ஆயினும் துரதிஷ்டவசமாக, நாட்டில் நிலவும் அரசியல் அதிகாரப் போட்டியால் இந்த குண்டுத்தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கமுடியாமல் போனது.
தற்போது ஒவ்வொருவரும் வெவ்வேறு ஆணைக்குழுக்களை நியமித்து அவர்களுக்கு ஏற்றவாறு அறிக்கைகளை தயாரித்துக் கொள்கிறார்கள் என்றும் கூறியிருந்தார் ஆண்டகை.
கட்சிகளுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் ஏற்றவகையில் அறிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. எனவே இவை அனைத்தும் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகள் என்பதை மறுப்பதற்கில்லை.
குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரிக்கவென நியமிக்கப்பட்ட ஆணைக் குழுக்களின் இறுதி அறிக்கைகள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனக்கூறப்படுகின்றது. ஆனால் அந்த அறிக்கைகளில் என்னென்ன குறிப்பிடப்படும் என்பது தொடர்பில் எந்த தகவல்களும் இதுவரை எமக்குத் தெரியாது என அதிரடியாக கர்தினால் தெரிவித்திருந் தார்.பேராயரின் ஒவ்வொரு குற்றச்சாட்டும் காரசாரமாகவே அமைந்திருந்தது. இந்த நிலையில் குற்றச்சாட்டுகளுக்கு, ஜனாதிபதி மறுநாள் பதில் வழங்கியிருந்தார்.
பதிலடி கொடுத்த ஜனாதிபதி
”உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலின் பின்னர் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் எம்மை முதுகெலும்பில்லாதவர்கள் என்றும் எம்மை வீடு செல்லுமாறும் சிலர் தெரிவித்துள்ளனர். நாங்கள் வீடு செல்லத்தான் போகின்றோம். நிரந்தரமாக தங்குவதற்கு நாங்கள் வரவில்லை. உத்தியோகபூர்வ காலம் முடிந்ததும் நாம் வீடு சென்றுவிடுவோம். தேவையெனின் மீண்டும் தேர்தலுக்கு முகம்கொடுப்போம். அதனை யாரும் சொல்லவேண்டிய அவசியமில்லை” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயரின் கருத்துக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
”எமக்குச் சிறந்த முதுகெலும்பு உள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி எனக்கு முதுகெலும்பு உள்ளது என்பதனை காட்டினேன். அதன் பின்னர் பதவியில் இருந்த பிரதமரை நீக்கி முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக்கி எனக்கு முதுகெலும்பு உள்ளது என்பதை நிரூபித்திருந்தேன்” எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஏற்றுக்கொள்ள முடியாது
”நான் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்திருந்தால் எனக்கு முதுகெலும்பு இல்லை என்று கூறமாட்டார்கள். நான் வறிய குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதால் விரட்டிவிரட்டி அடிக்கின்றனர். முன்னர் இருந்த ஜனாதிபதிகளுக்கு இவ்வாறு கூறியிருந்தால், அவர்களின் இருப் பிடமே இல்லாமல் போயிருக்கும்” என ஜனாதிபதி மைத்திரிபால கவலை வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும்போதுதான், தான் அமைதியான நபர், வறுமை குடும்பத்தை சேர்ந்தவர், சர்வதிகாரி இல்லை, அனைவரும் தன்மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் எனக்கூறி தனக்கு அனுதாபத்தைத் தேடிக்கொள்ளும் கருத்துக்களை ஜனாதிபதி, இன்று நேற்றல்ல, கடந்த காலங்களிலும் தெரிவித்திருக்கிறார்.
ஒரு நாட்டின் அரசியல் தலைவர் என்ற வகை யில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது அதற்குத் தைரியமாக முகம்கொடுக்க வேண்டுமே தவிர அனுதாபம் தேடும் வார்த்தைகளை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சந்தேகத்தை தோற்றுவித்துள்ள பேராயரின் கருத்து
பேராயரின் குற்றச்சாட்டு ஒவ்வொன்றும் பாரதூரமானது. நாட்டில் பதிவான தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உயர் நீதிமன்ற விசாரணைக்குள் இந்த விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் ஓர் ஆன்மீகத் தலைவராக இருக்கும் பேராயர் திடீரென இவ்வாறு ஆளும் தரப்பு மீது அதிரடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பது,
இதற்கு மஹிந்த தரப்பு ஆதரவு காட்டுவதும் மக்கள் மத்தியில் சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.விரைவில் ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்ற தேர்தல் போன்றவை இடம்பெற வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த தேர்தல்களை அண்மித்த இந்த காலப்பகுதியில் பேராயர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் சந்தேகத்தைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன.
நியாயமான கருத்துக்கள்
பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறிய கருத்துக்ளை எவராலும் ஏற்காமலிருக்க முடியாது. அனைத்தும் யதார்த்தமானவை. நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களும் அதன் பின்னர் இந்த மூன்றுமாத காலப்பகுதிக்குள் நடந்து முடிந்த விசாரணை கோணங்களையும் பார்க்கும்போது, பாதிக்கப்பட்ட தரப்பு என்ற வகையில் ஆயரின் கருத்துக்களும் அவரின் குற்றச்சாட்டுக்களும் நியாயமானவையே.
அரசியல் இலாபம் தேடாதீர்!
பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் பேராயர் உணர்ச்சிபொங்க தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இவற்றில் உண்மைகள் பல இருக்கின்ற போதும் இதை வைத்து அரசியல் இலாபம் தேட சிலர் எத்தனிக்கின்றனர்.நாட்டு மக்களின் மனதில் இருக்கின்ற விடயங்களையே கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியிருக்கின்றார் எனவும் தற்போதைய ஆட்சி தொடர்பில் நம்பிக்கையற்ற தன்மை அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளமையை கர்தினால் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் கூட்டு எதிரணியின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் மஹிந்த அணியின் எம்.பி.யுமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.நாட்டு மக்கள் ஓரளவு நடந்து முடிந்த சம்ப வங்களை மறந்து சுமுகமான வாழ்க்கை ஓட்டத்துக்குள் செல்ல தினம் முயற்சித்து கொண்டிருக்கின்றனர். இதன் அடிப்படையில் நாட்டு மக்களின் எண்ணத்தைக் கர்தினால் ஆண்டகை வெளிப்படுத்தியிருக்கின்றார் என தினேஷ் குணவர்தன எம்.பி. கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அப்பாவியின் முதுகெலும்பே உடைந்துள்ளது
யாருக்கு முதுகெலும்பு உள்ளது அல்லது இல்லை என்ற விமர்சனங்களும் விவாதங்களும் நடத்துவதற்கு இது தருணமல்ல. கடன், வரி, பொருளாதாரம், பொருட்களின் விலை, குண்டு வெடிப்பு பாதிப்புக்கள் என்பவற்றுக்கு மத்தியில் இனவாதம் போன்ற சுமையால் அப்பாவி பொதுமக்களின் முதுகெலும்பே இன்று உடைந்து கிடக்கின்றது. ஒவ்வொரு வரும் கௌவரமாக தலைநிமிர்ந்து வாழும் வகையில் ஜனநாயகத்துடன் கூடிய ஒரு அரசியல் கட்டமைப்பை நாட்டுத் தலைவர்கள் உருவாக்க வேண்டும். இதனைவிடுத்து பொதுமக்கள் மீது சுமத்தி விட்டு தனக்கு முதுகெலும்பு இருக்கின்றது என்று கூறுவதால் எவ்வித பயனும் இல்லை.
– எம்.டி.லூசியஸ்