நியூயார்க் மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண் டயான் குஜராத்தியை நியமனம் செய்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வசித்து வருபவர், இந்திய வம்சாவளிப்பெண் டயான் குஜராத்தி (வயது 47). இவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் நியூயார்க் தென் மாவட்ட அரசு வக்கீல் அலுவலகத்தின் குற்றப்பிரிவு துணைத் தலைவர் பதவியில் உள்ளார்.
இவரை நியூயார்க் மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
இதுபற்றிய உத்தரவில் அவர், “அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாவட்ட நீதிபதி பதவியில் பணியாற்று வதற்கு டயான் குஜராத்தியை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் அமெரிக்க மக்களுக்கு மிகச் சிறப்பாக பணி ஆற்றுவார் என்று நான் திடமாக நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
டயான் குஜராத்தியின் நியமனத்தை அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை அங்கீகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
டயான் குஜராத்தியின் தந்தை தாமோதர் குஜராத்தி, அமெரிக்காவில் வெஸ்ட் பாயிண்டில் உள்ள அமெரிக்க ராணுவ கல்லூரியில் பொருளாதார பேராசிரியர் ஆவார். டயான் குஜராத்தி, மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகம் வரவேற்றுள்ளது.
செனட் சபை ஒப்புதல் வழங்கி விட்டால் நியூயார்க்கில் மாவட்ட நீதிபதி பதவிக்கு வருகிற (ஆர்டிகிள் 3 நீதிபதி) முதல் தெற்காசியர், டயான் குஜராத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal