காற்று இடைவெளிகளை நிரப்பும்; தேசம் தன் தலைவர்களை உருவாக்கும்’ என்பது அறிஞர் அண்ணாவின் வாக்காக காணப்பட்டிருந்தது. இவ் வார்த்தை, சொல்வதற்கு உணர்வுபூர்வமானதாகவும் தத்துவார்த்தமானதாக இருந்தாலும் கூட, அதன் உள்ளார்ந்தக் கருத்தை நுட்பமாகப் பார்த்தல் காலத்தின் தேவையாகும்.
வளர்ச்சி பெற்று வரும் நாடுகளுக்கு அல்லது சிறுபான்மை இனங்களைக் கொண்ட தேசங்களுக்கு, மேற்குறிப்பிட்ட வாக்கு, வலுவான கருத்தைப் போதிப்பதாகவே இருக்கின்றது.
வளர்ச்சி அடையும் நாடொன்றில், தற்போதைய விஞ்ஞானத் தொழில்நுட்ப, நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப, தனது பொருளாதார வளர்ச்சிச் சுட்டெண்ணை உயர்த்த முடியாத தலைவராக இனம் காணப்பட்டவர், தொடர்ந்தும் அப்பதவியில் இருந்து, தானாகவோ அல்லது மக்களாலோ விலத்தப்பட வேண்டியவராகவே இருக்கின்றார்.
அதுபோலவே, சிறுபான்மை இனங்கள் வாழும் தேசத்தில், அந்த இனக்குழுமத்தின் உரிமைகளையும் அதன் பொருளாதார மற்றும் மரபுரிமைகளையும் பேணிப்பாதுகாக்க முடியாத அந்தச் சிறுபான்மையினத்தின் தலைமைகள், தொடர்ந்தும் அந்தத் தலைமையை தக்கவைத்துச் செயற்படுவதானது, அந்தச் சமூகத்தாலேயே புறக்கணிக்கும் நிலையை உருவாக்கும்.
வெறும் பசப்பு வார்த்தைகளால், நீண்ட கால அரசியல் செயற்பாட்டைக் கொண்டு செல்ல முடியும் என்ற தோற்றப்பாட்டுடனான முன்னகர்வுகள், அந்த அரசியல் செயற்பாட்டாளர்களை மக்கள் தமது வாக்கு எனும் பலமான ஆயுதத்தின் ஊடாக, விரட்டியடிப்பார்கள் என்பதும் யதார்த்தமானதுதான்.
இந்த வகையிலேயே, இலங்கையில் சிறுபான்மையினரான தமிழர்களின் அரசியல் தலைமைகளும் அவர்களது செயற்பாடுகளும் தொடர்பான சுயபரிசோதனையை, மேற்கொள்ளவேண்டிய கடப்பாட்டுக்குள் அவர்கள் செல்ல கட்டாயமாக்கப்பட்டுள்ளனர்.
ஏனெனில், இலங்கையில் வாழும் இரு பிரதான சிறுபான்மையினரான முஸ்லிம், தமிழர் என்ற இரு தரப்பு அரசியல் தலைமைகளையும் பார்க்கும் போது, முஸ்லிம்களுக்குத் தமது அரசியல் தலைமையை, எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும் என்ற அரசியல் தெளிவு, ஏற்பட்டிருப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது.
வன்னிப்பிரதேசத்தைப் பார்க்கின்ற போது, அவர்களது ஆரம்பத் தெரிவு, ஒரு தமிழரான சுந்தரமூர்த்தி என்ற ஆசிரியரை அபூபக்கராக்கி, அவரைத் தமது நாடாளுமன்ற உறுப்பினராக்கி, அழகு பார்த்திருந்தார்கள்.
அது மாத்திரமின்றி, அபூபக்கராகிய சுந்திரமூர்த்தி அமைச்சராக, முஸ்லிம் சமூகத்துக்காகப் பல்வேறு வரப்பிரசாதங்களை, அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுத்திருந்தமையை மறந்து விட முடியாது.
அதன் பின்னரான காலத்தில், முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நூர்டீன் மசூரைத் தமது பிரதிநிதியாக்கி, அவரையும் மீள்குடியேற்ற அமைச்சராக அரியணையில் ஏற்றி, தமது தேவைகளைப் பெற்றிருந்தார்கள்.
அக்காலப்பகுதியிலேயே, நூர்டீன் மசூரின் சேவைக்கு ஓய்வு கொடுத்து, அவரால் முஸ்லிம் காங்கிரஸுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரிஷாட் பதியுதீனை, நூர்டீன் மசூருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினராக்கி, அவரை அமைச்சராக்கியும் தமது சமூகத்தின் மேன்மைக்கும் வாழ்வியலுக்கும் உரமூட்டிக்கொண்டனர்.
இக்காலப்பகுதியிலேயே, தமது சமூகத்தின் வளர்ச்சிக்கு, இருவரை வேறு வேறு கட்சிகளின் ஊடாக உருவாக்கினால் அரசியல்வாதிகளுக்கு இடையிலான போட்டியில், மேலும் தமது சமூகத்தின் வளர்சிக்கு உறுதுணையாகும் என்ற எண்ணப்பாட்டில், சுதந்திரக்கட்சியின் சார்பில் கே. கே. மஸ்தானையும் நாடாளுமன்ற உறுப்பினராக்கி, வன்னித்தேர்தல் தொகுதியில் தமக்கான இரு பிரதிநிதிகளை முஸ்லிம் சமூகம் உருவாக்கி கொண்டது. இதுவே அவர்களின் அரசியல் ஞானம் என்பது.
எனினும், இவ்வாறான அரசியல் ஞானம், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதா என்றால், 50 சதவீதம் கூட உருவாக்கப்படவில்லை என்பதே உண்மை.
தொடர்ந்தும் ஒரு சின்னம் என்ற கோட்பாட்டுக்குள் சுழன்றடிப்பது மாத்திரமன்றி, ஒரே முகத்தைத் தொடர்ந்தும் தெரிவு செய்வதும் அதனூடாக எந்தவித வரப்பிரசாதத்தையும் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கியமும் தமிழ் சமூகத்திலேயே உள்ளது.
முஸ்லிம் சமூகம், எவ்வாறு வன்னித் தேர்தல் களத்தில், மாற்றி மாற்றித் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்திருந்தபோதிலும், கடந்த 20 வருடங்களாக தமிழர் தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரே முகங்களையே தெரிவு செய்திருப்பதும், மாற்று அணியையோ வேறு தெரிவுகளை விரும்பாமையும் அரசியல் தெளிவுத் தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சூழலில், தமிழர்களுக்கான தீர்வையும் உரிமையையும் தம்மால் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பெற்றுத்தருவார்கள் என்றால், அது சாதகமான நிலையன்று.
சிறுபான்மைச் சமூகமொன்று, தமது இருப்புக்காக, முதலில் தான் வாழும் நிலத்தைக் காக்க வல்லமையுள்ளதாக இருத்தல் வேண்டும். அதன் பிற்பாடு, தமது மரபுசார் உரிமைகளைப் பாதுகாத்திருத்தல் வேண்டும். எனினும், அவை தொடர்ந்து வரும் தமிழர் தரப்பு அரசியல்வாதிகளால், பேணி பாதுகாக்கப்படாமையால் இன்று அவை நிலைகுலைந்துபோயுள்ளன.
தமிழர் மரபுரிமைப் பேரவையின் தலைவர் வீ. நவநீதனின் கருத்தின் பிரகாரம், 1891 ஆம் ஆண்டு, கிழக்கு மாகாணத்தில் நான்கு சதவீதமாக இருந்த சிங்கள மக்கள், 2012 ஆம் ஆண்டு 25 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இது எவ்வாறு சாத்தியமானது. தமிழ்ப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் தமிழர்களின் நிலங்களில், இலங்கை அரசாங்கத்தால் சிங்கள மக்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டபோது, கண்டும் காணாதது போல் இருந்ததையும் தமிழர் குடியேற்றங்களைச் செயற்படுத்த முனைப்புக் காட்டாமையும் பெரும் தாக்கமாக இருந்துள்ளது.
இவற்றுக்குமப்பால் நவநீதனின் கருத்தின் பிரகாரம், போர் முடிந்த கையோடு, ஒன்பது கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய, ஒன்பது கிராமங்களைக் கொண்ட வெலிஓயா என்கின்ற தனியொரு பிரதேச செயலகமாக உருவாக்கப்பட்டு, அது முல்லைத்தீவு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.
பதிவுகளின்படி 7,017 சிங்களவர்கள் அப்பிரதேசத்தில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒரு பிரதேச செயலகப் பிரிவு, போருக்கு பின்னால் உருவாகியிருக்கின்றது.
வவுனியா சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கக்கூடிய 14,028 சிங்களவர்களுக்கு மேலதிகமாக, வவுனியா தமிழ்ப் பிரதேச செயலகத்தோடு கள்ளிகுளம் என்ற கிராம சேவையாளர் பிரிவோடு, மகாவலித் திட்டத்தினூடாக மூன்று கிராமங்கள் புதிதாக அண்மையில் இணைக்கப்பட்டிருக்கிறது. ‘நாமல்கம’, ‘நந்தமித்ரகம’, ‘சங்கமித்தகம’ என்று புதிய கிராமங்கள் இணைக்கப்பட்டு, 1,200 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, வவுனியா தமிழ்ப் பிரதேச செயலகப்பிரிவோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறான மறைமுக நிகழ்ச்சித் திட்டங்கள் தற்போதும் நடந்தேறி வருவது தொடர்பில், தமிழ் பிரதிநிதிகள் மௌனம் காப்பது, ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்காது இருப்பதானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பெரும் ஆபத்தான சூழலை, இன்னும் 10 வருடங்களுக்குள் உருவாக்கும் என்பது மறுப்பதற்கில்லை.
வெறுமனே ‘கம்பெரலிய’வால் வரும் நிதியினூடாக மாத்திரம், தமிழர்களின் மனங்களை வென்றுவிடலாம் என்கின்ற எண்ணப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்த அபிவிருத்திகளை அனுபவிப்பதற்கான காலச்சூழல், இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்களுக்கு இல்லாமல் போய்விடுமோ என்கின்ற ஐயப்பாடு காணப்பட்டு வரும் நிலையில், சிறு ஒழுங்கைகளையும் கோவில்களையும் பொது நோக்கு மண்டபங்களையும் கட்டிவிடுவதால் தமிழர்களின் உரிமைகளை வெல்லவோ, தமிழர்களின் நிலங்களைப் பாதுகாக்கவோ முடியாது. வடக்கு, கிழக்கில் எல்லையோரங்களில் இருக்கும் நிலங்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய தேவை, தமிழ்த் தலைமைகளுக்கு உருவாகியுள்ளது.
யுத்த காலத்தில், வவுனியா மாவட்டத்தின் எல்லையோரத்தில் ‘புளொட்’ அமைப்பினர் எவ்வாறு தமிழர் குடியேற்றங்களை நிறுவி, வவுனியாவின் நிலத்தைத் தம்மால் முடிந்தளவுக்குக் காத்துக்கொண்டார்களோ, அதையும் விடப் பாரியளவிலான வேலைத்திட்டத்தை முன்னகர்த்தவேண்டிய தேவை, தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் காணப்படுகின்றது.
வெறுமனே, முஸ்லிம் பிரதிநிதிகள் வரக்கூடாது என்ற கோசங்களை எழுப்பி, தமிழர்களை ஒன்றுபடவும் வாக்குப் போராட்டத்துக்குத் தயாராகுங்கள் என அறைகூவல் விடுக்கும் ‘சிறிடெலோ’ போன்ற தேசியக்கட்சிகளின் செல்லப்பிள்ளைகள், இதுவரை காலமும் தமது பிரதிநிதிகளூடாக, முல்லிம் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கவே வழிவகை செய்திருந்தனர்.
எனினும், தற்போது தம்மைத் தேசியவாதிகளாகக் காட்டிக்கொண்டு மக்களை உசுப்பேற்றும் அடுத்த அரசியல் கட்சியாக உருவெடுக்க முனைப்பைக் காட்டுகின்றது.
எனவே, தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் உசுப்பேற்றும் அரசியலையும் மத்திய அரசாங்கத்தின் நிதியில் அபிவிருத்தி மோகத்தையும் காட்டி, தமிழர்களின் பூர்வீக நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பை மறைக்க, தமிழ்க் கட்சிகளே முன்னிற்பதானது, காலக்கிரமத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன் தமிழ் அரசியல்வாதிகளுக்குச் சிறந்த பாடத்தையும் புகட்டி நிற்கும் என்பது, மறுப்பதற்கில்லை.
இந்நிலையிலேயே, தமிழர்களது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள, ஆக்கபூர்வமான செயற்றிட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும், அதற்காகத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வரவேண்டும் என்றும் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் ஆவல் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஏக பிரதிநிதிகளாகத் தம்மை அடையாளப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இவ்வாறான விடயங்களுக்கு என்ன பதிலைக் கூறி, அடுத்து வரப்போகும் மாகாணசபைத் தேர்தலிலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, தமது மக்கள் முன் செல்லப்போகின்றனர் என்ற ஐயப்பாடு நிறைந்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் “இரண்டு வருடங்களுக்குள் தீர்வு” என்றபோது, மௌனம் காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், குறித்த விடயத்தை ஊடகங்கள் தொடர்ந்து வந்த நாள்களில் பாரிய அளவில் சுட்டிக்காட்டியபோது, அதற்கான வியாக்கியானங்களை முன்வைக்கவும் அக்கருத்தை மறுதலிக்கவும் கங்கணங்கட்டிக் கொண்டது.
இது வெறும் பசப்புக்காகவேயன்றி, தமிழ் மக்கள் மீதான நம்பிக்கையின்பால் உருவான கருத்துகளா என்பதை ஆராயவேண்டும். ஆகவே, அரசாங்கத்துக்கான தொடர்ச்சியான அரசாங்கத்துக்கான ஆதரவுத் தளத்தில் இருந்து, எதையும் சாதிக்க முடியாத நிலையில், தமிழர்களின் நிலங்களையும் காப்பாற்றிககொள்ளமுடியாத கையாலாகாத்தனம் என்பது, தமிழர்களை எந்தத் தளத்தில் கொண்டு சென்று விடும் என்பது தொடர்பில், சிவில் சமூக பிரதிநிதிகளின் வேகமான செயற்பாட்டின் மூலமே, வெளிச்சத்துக்குக் கொண்டு வரக் கூடியதாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை.
அப்போதேனும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தலைமைத்துவங்களில் மாற்றம் ஏற்பட்டு, தமிழர்களுக்காகப் புதிய தலைமைகள் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே, காலங்கள் நகரத்தொடங்கும்.
-க. அகரன்