அவுஸ்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் நுழைய முயன்ற இலங்கையர்களை கைதுசெய்துள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசேடவிமானம் மூலம் அவர்களை உடனடியாக இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.
கிறிஸ்மஸ் தீவில் உள்ள விமானநிலையத்திலிருந்து விமானமொன்று இலங்கையர்களுடன் புறப்பட்டுள்ளதாக த அவுஸ்திரேலியன் தெரிவித்துள்ளது.
20 இலங்கையர்களை படகுடன் அவுஸ்திரேலியா தடுத்து நிறுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட இலங்கையர்கள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் விமானநிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளனர் அங்கிருந்து விமானமொன்று புறப்பட்டுள்ளது என த அவுஸ்திரேலியன் உறுதி செய்துள்ளது.
அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இதனை உறுதி செய்யாத அதேவேளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயலும் எவரையும் நாடு கடத்துவோம் என அவரது அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து பதிலளிப்பதில்லை என்ற கொள்கையை பின்பற்றிவருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயலும் எவரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் புறப்பட்ட இடத்திற்கு அல்லது அவர்களின் நாட்டிற்கு அனுப்பி வைப்பதே எங்கள் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறைமையுள்ள எல்லைகள் என்ற எங்கள் நடவடிக்கையின் காரணமாக எந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முடியாது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஒரிருதினங்களிற்கு முன்னர் இந்த படகை அவுஸ்திரேலியா தடுத்து நிறுத்தியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவில் தேர்தல்கள் இடம்பெற்ற பின்னர் அந்த நாட்டை நோக்கி பயணித்த வேளை தடுக்கப்பட்ட மூன்றாவது படகு இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal