கல்முனையும் கன்னியாவும்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழுமையான அதிகாரங்களுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தல் என்பது, அப்பிரதேச தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இந்த விடயம் தொடர்பில், அப்பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களிடையே அபிப்பிராய பேதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அண்மையில் இந்த விடயம் சூடுபிடித்தது.
இது, இன்று நேற்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையோ, இன்று நேற்று உருவான பிரச்சினையோ அல்ல. 1989ஆம் ஆண்டிலிருந்து மிக நீண்ட காலமாக அப்பிரதேச தமிழ் மக்களாலும் தலைமைகளாலும் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கையாகும்.

இதுவரை காலமும் பதவிக்கு வந்த எந்த அரசாங்கமும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதுவரை காலமும் இலங்கையின் எந்தப் பௌத்த பிக்குவும் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத, பேரினவாத அரசியல் தலைமையும் இதனைக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், திடீரென்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில், இலங்கையின் ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத சக்திகளுக்குப் பெரும் அக்கறை ஏற்பட்டிருப்பதை, நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழுமையான அதிகாரங்களுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தல் தொடர்பில், கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம், கல்முனையின் நிலையான அபிவிருத்தி, தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான இன ஐக்கியம் மற்றும் எதிர்கால அமைதி, சமாதானம் என்பன கருதி, ஏறத்தாழ கடந்த 30 வருடகாலமாக இழுத்தடிக்கப்பட்டுவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரத்துக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு வேண்டுதல் வைக்கிறார்.

அதன் பின்னர் அவர், குறித்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்காக, உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்கிறார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அவருடன் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகர சபையின் தமிழ் உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அ.விஜயரத்னம் ஆகியோரும் கைகோர்த்துக்கொண்டனர்.

இந்தப் போராட்டத்துக்குத் தமிழ் மக்களின் ஆதரவு பெருமளவில் கிடைத்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனை, பௌத்த பிக்குவும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்தன தேரர், ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு, குறித்த கோரிக்கைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் சமகாலத் தலைமைத்துவ முகங்களுள் அத்துரலியே ரத்தன தேரர் மிக முக்கியமானவர். போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவருக்கு, அங்கிருந்த தமிழ் மக்கள் அளித்த வரவேற்பு அபாரமாக இருந்தது.

இங்கு உரையாற்றிய ரத்தன தேரர், “கல்முனை வடக்குப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்காமல், இந்த மக்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது” என்று தெரிவித்தார்.

மேலும், “குறித்த பிரதேச செயலகத்துக்கு 2014 ஆம் ஆண்டே அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ள போதிலும், சிலர் அந்த அதிகாரத்தைத் தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குத் தடையாக இருப்பவர்கள் இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள். முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், காணி வழங்குகின்றபோது, தமிழ் மக்களுக்குச் செய்திருக்கின்ற அநீதி தொடர்பில் நாங்கள் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். இப்பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்குக் காணி வழங்கியமை தொடர்பில், ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால், எதிர்வருகின்ற மூன்று மாத காலத்துக்குள் நாங்கள் உருவாக்குகின்ற அரசாங்கத்தால் அனைத்துப் பிரச்சினைகளையும் விசாரித்துத் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றோம்” என்று உறுதி மொழி அளித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்ற ரீதியில், பின்னர் ஷரீஆ பல்கலைக்கழகம் என மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் மூன்று மாத காலத்துக்குள் எமது ஆட்சியைக் கொண்டு வந்து, ஷரீஆ பல்கலைக்கழகக் காணியை விடுவித்து, அதிலே பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை உருவாக்கவுள்ளோம். எதிர்காலத்தில் மூவின மக்களும் ஒன்று சேர்ந்து வாழக்கூடியதாக, தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என வேறுபடுத்திக் காணிகளை வழங்காமல், ஒரே இடத்தில், ஒற்றுமையுடன் வாழக் காணிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்படை வாதிகள், தீவிரவாதிகள் அனைத்தையும் முற்றுமுழுதாக இந்நாட்டிலிருந்து ஒழிப்போம். மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவீதமான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். எனவே அங்குள்ள 75 சதவீதமான தமிழ் மக்களுக்கும் மூன்று நாடாளுமன்றப் பிரதிநிதிகள், 25 சதவீதமான முஸ்லிம் மக்களுக்கு இரண்டு அமைச்சர்களும் ஒருவர் முன்னாள் ஆளுநராகவும் உள்ளார். இலங்கையில 75 சதவீத மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்; இலங்கையில் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்தால் 90 சதவீதமாகிவிடுவோம். நாங்கள் 90 சதவீதமானவர்களும் ஒன்றிணைந்து, எமக்குத் தேவையான அனைத்தையும் ஒன்றிணைந்து செய்வோம். தமிழர்களும் சிங்களவர்களும் இந்த நாட்டிலே ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற சமூகமாகும். பௌத்தர்களினதும் இந்துக்களினதும் ஒரே ரீதியான கலாசாரமாகும். எங்களது பௌத்த விகாரைகளில் பிள்ளையார், முருகன், சரஸ்வதி போன்ற பல இந்துக் கடவுள்களை வைத்து வணங்கி வருகின்றோம். இந்நிலையில் தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரிப்பதற்கு அரசியல்வாதிகள் முயல்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்மைப்பையும் எம்மையும் பிரிப்பதற்கு நாங்கள் எந்த விதத்திலும் இடமளிக்கப் போவதில்லை என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துக் கொள்கின்றேன். அனைவருக்கும் அல்லாஹ் தான் பெரியவன் என்கிறார்கள். ஆனால், முருகனும் புத்தரும்தான் அனைவருக்கும் பெரியவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முருகனும் புத்தரும் ஓரிடத்தில் இருக்க முடியுமாக இருந்தால், ஏன் மனிதர்களாகிய நாமும் ஓரிடத்தில் இருக்க முடியாது” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

ரத்தன தேரர் மட்டுமல்ல, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் தீவிரவாத முகமான கலகொட அத்தே ஞானசார தேரரும் நேரடியாக உண்ணாவிரதப் போராட்டக்களத்துக்குச் சென்றதுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு தினங்களுக்குள் தீர்வொன்றைப் பெற்றுத்தருவேன் என்று உறுதியளித்தார்.

தமிழ் மக்களின் கோரிக்கைக்காக சிங்கள-பௌத்த துறவிகள் உயிர்துறக்கவும் தயாராக உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பதும் இந்து-பௌத்த கலாசார ஒற்றுமை பற்றியும் முருகனும் புத்தரும் ஓரிடத்தில் இருக்க முடியுமாக இருப்பதைப் பற்றியும் பேசுவதெல்லாம் பலரையும் குறிப்பாகப் பல தமிழர்களை மெய்சிலிர்க்க வைத்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு, சிங்கள மக்களுடனான பிரச்சினையை விட, முஸ்லிம் மக்களுடனான பிரச்சினைகள் அதிகம் என்பது யதார்த்தமானது. எந்தவோர் இடத்திலும் அப்பகுதியின் சிறுபான்மைகளுக்கு அப்பகுதியின் பெரும்பான்மையோடு பிரச்சினைகள் ஏற்படவே செய்யும். ஆனால், இதுவரை காலமும் இல்லாத வகையில், தமிழ் மக்கள் மீது, சிங்கள-பௌத்த தேசியவாதிகளுக்கு அக்கறை வரக் காரணம் என்ன என்று நாம் சிந்திக்க வேண்டும்.  கல்முனை விடயத்தில், ரண்முத்துகல சங்கரத்ன தேரர் உள்ளிட்டவர்கள் தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஆதரவளிப்பதென்பது, வரவேற்கத்தக்க விடயம் தான். அதற்கு தமிழ் மக்கள் நன்றியுடையவர்களாக இருக்கலாம். ஆனால் இதன் பின்னாலுள்ள அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த ஒரு சம்பவம், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் அடிப்படை நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அது தன்னுடைய அரசியல் நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கவே தமிழ் மக்களையும் பயன்படுத்திக் கொள்கிறது.
முருகனும் புத்தரும் ஓரிடத்தில் இருக்கமுடியும் என்பதுதான் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் கல்முனையில் உணர்ச்சி பொங்கச் சொன்ன கருத்தாகும். அப்படியானால், கன்னியாவில் பிள்ளையார் கோவில் அஸ்திவாரம் உடைக்கப்பட்டபோது, கல்முனையில் சூளுரைத்த இதே வாய்கள் அமைதி காப்பது ஏன்? பிள்ளையாரும் புத்தரும் ஓரிடத்தில் இருக்க முடியாது என்பதாலோ என்னவோ?

‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் அடிப்படையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் அடிநாதம் என்பது, இந்த இலங்கைத் தீவு ‘சிங்கள-பௌத்தர்களுக்குரிய’ சிங்கள நாடு என்பதாகும். ஏனைய தேசிய இனங்களை, அங்கிகரிக்கவோ, அவர்களது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவோ ‘சிங்கள-பௌத்த’ தேசியம் தயாராக இல்லை.

மாறாக, மற்றைய இனங்களைச் சிறுபான்மை இனங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே ஏற்றுக்கொள்ள அவை தயாராக இருக்கின்றன. ஆனால், அதில்கூட சில பேரினவாத சக்திகள், இது ‘சிங்கள-பௌத்த’ நாடு என்பதை ஏற்றுக்கொண்டு, இரண்டாந்தரப் பிரஜைகள் போலவே சிறுபான்மை இனங்கள் வாழ வேண்டும் என்ற கருத்தை வௌிப்படையாகவே முன்வைப்பதையும் காணலாம். ஆகவே கல்முனையில் தந்த ஆதரவு என்பதை, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தில் ஏற்பட்ட மாற்றமாகக் கருதமுடியாது.

‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் புதிய இலக்காக, மீண்டும் முஸ்லிம்கள் உருவாகியிருக்கிறார்கள். கல்முனைப் பிரச்சினை என்பது அடிப்படையில், தமிழ்-முஸ்லிம் பிரச்சினை. இதில் முஸ்லிம் தலைமைகள் மீது தவறு இருக்கிறதா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, இதில் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் வகிபாகம் என்பது என்ன என்று யோசித்தால், அது முஸ்லிம்களுக்கு எதிரான தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்காக, இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

இந்தப் பிரித்தாளும் தந்திர வலைக்குள் தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு விழுந்துவிடக்கூடாது. இங்கு, ‘எதிரியின் எதிரி நண்பன்’ என்று சில நவயுக சாணக்கியர்கள் பெரும் தந்திரோபாய திட்டங்களை முன்வைக்கிறார்கள். தமிழ் மக்கள், தங்களுடைய அடைவுகளை அடைந்துகொள்ள, சிங்கள-முஸ்லிம் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

ஆனால், இங்கே அவர்கள் கவனிக்க வேண்டிய விடயம், இந்த விடயத்தில் ‘எதிரியின் எதிரி நண்பன்’ என்பதை விட, யதார்த்தத்தில் ‘அவன் எனக்கும் எதிரிதான்’ என்பதைப் புரிந்துகொள்ளுதலே ஆகும்.

பேரினவாதம் என்பது, ஒருபோதும் அடக்குமுறைக்குள்ளாக்கப்படும் சிறுபான்மையினத்துக்கு நண்பனாக முடியாது. இது தற்போது இந்தநாட்டு முஸ்லிம்களுக்குப் புரிந்திருக்கிறது. இந்த நாட்டின் முஸ்லிம்கள் இழைத்த அரசியல் தவறை, தமிழர்களும் இழைத்துவிடக்கூடாது.

பேரினவாதத்துக்குத் தன்னுடைய நலன் மட்டுமே குறிக்கோள். தன்னுடைய நலனுக்குச் சாதகமாக இருக்கும் எதையும் பயன்படுத்திக்கொள்ளவும் அது பாதகமாக அமையும் போது, அதே விடயத்தை அழித்தொழிக்கவும் அது தயங்காது.
கல்முனை விடயத்தைப் பற்றி புளகாங்கிதம் அடையும் போது, கன்னியாவைப் பற்றியும் யோசித்தால் மாயைகள் விலகி யதார்த்தம் என்பது என்னவென்று தௌிவாகப் புலப்படும்.

என்.கே. அஷோக்பரன்