திருக்கோணமலை – கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோவிலில் விகாரை அமைப்பதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் மற்றும் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை தர்மகர்த்தா சபையே தொடர்ந்தும் நிர்வகிக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அத்துமீறி நுழைந்து சில அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை மேல் நீதிமன்றில் எழுத்தானை மனுவொன்று கடந்த 19ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வெந்நீர் ஊற்று பகுதிக்கு அருகாமையில் பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதேவேளை, மனுதாரரையோ அல்லது மற்றைய பக்தர்களையோ கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோவிலுக்கு அல்லது அதனை அண்மித்த பகுதிகளுக்கு செல்தை தடுக்கக் கூடாது எனவும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
இதனையடுத்த, இந்த வழக்கு ஓகஸ்ட் 29ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.