பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றும்போது சிலர் பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர்களிடையே இம்ரான் கான் உரையாற்றினார்.
அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இம்ரான் கான் தொடர்ந்து உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது.

பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், மனித உரிமைகளை மீறுவதாகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.
அப்போது, அவர்களை இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறுங்கள் என கூறிக்கொண்டு தள்ளினர். பின்னர் பாதுகாப்பு படையினன் உள்ளே வந்து, முழக்கம் எழுப்பிய நபர்களை வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அரங்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முழக்கமிட்டவர்கள், அமெரிக்காவில் வாழும் பலூசிஸ்தான் பகுதியினர் ஆவர்.
இதேபோல் முத்தாகிதா காஸ்மி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையின குழுவினரும், இம்ரான் கான் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal