ஆஸ்திரேலியா எங்கும் ஆர்ப்பாட்டம்!

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று மனுஸ் மற்றும் நவுருத்தீவில் 6ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி மெல்பேர்ன், சிட்னி உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள், ‘அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரவும், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், ஆறு ஆண்டுகள் ரொம்ப அதிகம், ’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

2013ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையில் அப்போதைய பிரதமர் கெவின் ருட் தலைமையிலான லேபர் அரசாங்கம் படகுகள் மூலம் வந்த அகதிகளை மனுஸ் மற்றும் நவுருத்தீவுகளில் சிறைவைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த லிபரல் கூட்டணி அரசு எல்லைப் பாதுகாப்பு என்ற பெயரில் அகதிகள் தொடர்பான கொள்கைகளை மேலும் இறுக்கியது.

இந்த சூழலில், மனுஸ் மற்றும் நவுருத்தீவுகளில் 6 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தமிழ் அகதிகள், சில இந்திய தஞ்சக்கோரிக்கையாளர்கள் உள்பட சுமார் ஆயிரம் பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

மூன்றாம் நாடொன்றில் அகதிகளை குடியமர்த்துவது என்ற முடிவில் 2016 இறுதியில் அமெரிக்காவுடன் அகதிகள் ஒப்பந்தம் ஒன்றை ஆஸ்திரேலிய அரசு கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 1250 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனச் சொல்லப்பட்டுள்ள நிலையில் இதுவரை 580 அகதிகள் மட்டுமே மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். நியூசிலாந்தின் மீள்குடியமர்த்தல் கோரிக்கையையும் ஆஸ்திரேலியா தொடர்ந்து நிராகரித்து வருவதாலும் ஆஸ்திரேலியாவில் ஒருபோதும் படகு வழியாக வரும் அகதிகளை அனுமதிக்க மாட்டோம் என தற்போதைய லிபரல் கூட்டணி அரசு சொல்லி வருவதால், அகதிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த ஆறு ஆண்டுகளில் பல அகதிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அத்துடன், நீண்ட கால தடுப்புக்காவல் அகதிகளிடையே உடல்நலன் பாதிப்புடன் மனநல முறிவையும் ஏற்படுத்தியுள்ளதாக அகதிகள் நல செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், அகதிகளை விடுவிக்கக்கோரி இன்று ஆஸ்திரேலியாவில் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.