உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த போதிலும் பென் ஸ்டோக்ஸ் பெயரை சிறந்த குடிமகன் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது நியூசிலாந்து.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். 84 ரன்கள் சேர்த்து போட்டி ‘டை’யில் முடிய முக்கிய காரணமாக இருந்தார். அதன்பின் சூப்பர் ஓவரிலும் இங்கிலாந்து 15 ரன்கள் சேர்க்க முக்கிய காரணமாக இருந்தார். இதனால் பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் பிறந்தவர். இவர் 12 வயது வரை நியூசிலாந்தில் வாழ்ந்தார். அதன்பின் இங்கிலாந்தில் குடியேறினார். பென் ஸ்டோக்ஸின் தந்தை ஜெரார்டு நியூசிலாந்துக்காக ரக்பி லீக்கில் விளையாடியுள்ளார். அதன்பின் இங்கிலாந்தில் பயிற்சியாளராக பணிபுரிந்தார்.
பின்னர் அவர் நியூசிலாந்துக்கு திரும்பிவிட்டார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் மட்டும் இங்கிலாந்திலேயே தங்கிவிட்டார். இதனால் பென் ஸ்டோக்ஸும் நியூசிலாந்து குடிமகன்தான். இதனால் அவரது பெயரை சிறந்த குடிமகன் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளோம் என்று விருதுக்கான நபரை தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைமை நீதிபதி கேமரூன் பென்னெட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சர்ச்சைக்குள்ளான இறுதிப் போட்டியின் சூழ்நிலையை சிறப்பாக கையாண்ட கேப்டன் கேன் வில்லியம்சன் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.