இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருக்கலாம், பொதுஐன பெரமுனவாக இருக்கலாம் இவை அனைத்தும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்குடனே செயற்படுகின்றன. இதனை மக்களும் உணர்ந்துள்ளனர்.
அப்படிப்பட்ட தரப்புகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையில்லாத ஆதரவை வழங்குகிறது. அத்தோடு, தங்களுடைய நலன்களை முற்றுமுழுதாக கைவிட்டு வல்லரசுகளின் விருப்பத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி போன்ற தரப்புக்களை ஆதரித்துக்கொண்டிருப்பது தவறான விடயம் என்பதாலேயே கூட்டமைப்பையே தூக்கியெறியும் நிலைக்கு தமிழ் மக்கள் வந்திருக்கின்றனர்.
இவ்வாறான மிகமோசமாக ஒரு பின்னடைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்திருக்கின்றது. இந்நிலையில், தங்களுடைய பங்காளிகளாக கூட்டமைப்பினர் இருக்கின்ற காரணத்தால் ஏதோவொரு வகையில் மக்களை ஏமாற்றியாவது அவர்களை காப்பாற்றுவதற்காக இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படுமென பிரதமர் கூறியுள்ளார்” என மேலும் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal