சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படத்தை சீனாவிலும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படமே ‘ஓ பேபி’. இப்படம் தென் கொரிய திரைப்படமான மிஸ் கிராணியின் தழுவல் ஆகும். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 70 வயது மதிக்கத்தக்க பாட்டி, குடும்பத்தினரின் அன்பு கிடைக்காமல் தனிமையில் வாடுகிறார்.
ஒரு நாள் போட்டோ ஸ்டூடியோவுக்கு செல்லும் பாட்டி, கேமரா பிளாஷ் அடித்ததும் மந்திர சக்தி மூலம் 24 வயது இளம் பெண்ணாக மாறுகிறாள். இதன்பிறகு ஏற்படும் சிக்கல்களை சுவாரசியமாகவும் நகைச்சுவையுடனும் கூறும் படமே ‘ஓ பேபி’. வயதான தோற்றத்தில் பழம்பெறும் நடிகை லட்சுமியும், இளமையான தோற்றத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர்.
வரவேற்பை பெற்றுள்ள இப்படம், தெலுங்கு, தமிழ் என இந்தியா மட்டுமல்லாது அமெரிக்காவிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், சீனாவிலும் ‘ஓ பேபி’ படத்தை வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகிறது. சமந்தாவின் நடிப்பிற்காகவும், இந்திய கதை சொல்லும் முறையை பார்ப்பதற்காகவும் சீன ரசிகர்கள் விரும்புகின்றனர். அதனாலேயே ஒரு சீன விநியோக நிறுவனம் ‘ஓ பேபி’ படத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது’ என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.