இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் வடமாகாணத்தின் நீர் பிரச்சனை, அதனை தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள ‘வடமராட்சி களப்பு’ திட்டம் உள்ளிட்ட செயற்திட்டங்கள் குறித்தும் விரிவாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு உள்நுழைய முயற்சிப்பது குறித்து கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், சட்டவிரோத குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
இதன்போது , சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று குறிப்பிட்ட ஆளுநர் , அகதிகள் விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கமானது கனடா போன்று மனிதாபிமான ரீதியில் உள்ளீர்ப்பது தொடர்பில் கொள்கையொன்றினை உருவாக்குவதன் ஊடாக சர்வதேச ரீதியில் தனக்கான இடத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக உதவி செய்வதற்கு தயாராக இருப்பதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டதுடன் , ஏற்கனவே பயிற்சி வழங்கல் உள்ளிட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்களை வடமாகாணத்தில் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். இதுதொடர்பில் கௌரவ ஆளுநருடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.