ஆஸ்திரேலியாவில் நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற இந்திய மாணவர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த 21 வயது நிரம்பிய இளைஞர் போஷிக் சர்மா. இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தங்கி அங்குள்ள பல்கலைகழம் ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை சர்மாவும் அவரது நண்பர்களும் இணைந்து விக்டோரியா மாகாணத்தின் மேரிஸ்விலி பகுதியில் உள்ள பொழுதுபோக்கு விடுதிக்குச் சென்றனர்.
அந்த பொழுதுபோக்கு விடுதியில் மது அருந்தி கொண்டிருந்தபோது சர்மாவுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவருத்தமடைந்த சர்மா விடுதியில் இருந்து உடனடியாக வெளியேறினார். ஆனால் அவர் தான் தங்கியிருக்கும் இடத்துக்கு செல்லாமல் மாயமானார்.
இதையடுத்து விக்டோரியா மாகாண போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காணாமல் போன சர்மாவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த தேடுதல் பணியில் 90-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் தேடுதல் பணியின் 4-வது நாளான நேற்று மேரிஸ்விலி பகுதியின் புறநகரில் உள்ள முட்புதர் ஒன்றிலிருந்து இறந்த நிலையில் சர்மாவின் உடல் மீட்கப்பட்டது. இறந்த உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அருகில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal