சுகவீனமடைந்திருந்த பிள்ளையைப் பார்க்கச் சென்ற தந்தையை, சுட்டுக் கொல்வது தான், இராணுவம் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் முறையா?” என்று சில நாள்களுக்கு முன்னர், ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருந்தார் மஹிந்த ராஜபக்ஷ.
‘அக்மீமன உபானந்த வித்தியாலய’ என்ற பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், உதய பிரதீப்குமார என்பவர் பலியானதை அடுத்தே, மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்.
முன்னாள் கடற்படை சிப்பாயான பிரதீப்குமாரவின் பிள்ளை, அந்தப் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். அந்தப் பிள்ளைக்குச் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாகப் பாடசாலையில் இருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்தே, அவர் அவசரமாகப் பாடசாலைக்குள் நுழைந்தார்.
அவரைத் தடுக்க முயன்ற இராணுவ அதிகாரிக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. அதையடுத்து, நெஞ்சில் சுடப்பட்டு பிரதீப் குமார உயிரிழந்தார். இந்தச் சம்பவம், நாடெங்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனென்றால், இது ஒரு தனித்த சம்பவம் அல்ல; ‘ஈஸ்டர் ஞாயிறு’ தாக்குதல்களுக்குப் பின்னர், பாடசாலைகளுக்கு இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது; சோதனைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான நிலையில், நாடெங்கும் உள்ள 10 ஆயிரம் பாடசாலைகளில், இதுபோன்ற சம்பவம் இடம்பெறாது என்ற உத்தரவாதம் இல்லை.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் படையினருக்கு, துப்பாக்கியால் பதிலளிக்கின்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய லான்ஸ் கோப்ரல், 58ஆவது டிவிசனின் 1ஆவது பிரிகேட்டில் இடம்பெற்றுள்ள, கெமுனு வோச் படைப்பிரிவைச் சேர்ந்தவர். காலி, கோட்டையில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றுபவர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே, கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தான் ஆச்சரியம்.
எனினும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், இராணுவ அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், எந்தத் தவறும் காணப்படவில்லை என்று, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவ அதிகாரியைக் காப்பாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டுள்ளன என்பதை, இதில் இருந்தே புரிந்துகொள்ள முடிகிறது. காவலுக்கு இருந்த இராணுவ அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற போது, அவர் மீது சூடு நடத்தப்பட்டதாக, இராணுவத் தரப்பு கூறுகிறது.
சுகவீனமுற்ற பிள்ளையைப் பார்க்க, அவசரமாகப் பாடசாலைக்கு ஓடிய தந்தை, இராணுவ அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்தெடுப்பதில் கவனம் செலுத்தியிருப்பாரா என்பது சந்தேகம். எவ்வாறாயினும், தற்காப்புக்காகச் சுட்டிருந்தால் கூட, ஏன் இடுப்புக்குக் கீழ் சுடாமல், நெஞ்சில் குறிவைத்து சுடப்பட்டார் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. ஆனாலும், துப்பாக்கிச் சூட்டை இராணுவம் நியாயப்படுத்துகிறது.
இராணுவத்தின் 58ஆவது, டிவிசனைப் பொறுத்தவரையில், இந்தச் சம்பவம் ஒன்றும் அவர்களுக்குப் பெரிய விடயமே இல்லை. இதுபோன்ற ஏராளமான சம்பவங்களைப் பார்த்து விட்ட படைப்பிரிவு அது.
2009ஆம் ஆண்டு, முடிவுக்கு வந்த இறுதிக்கட்டப் போரில், பிரதான சண்டைகளை நடத்தியதே, இந்தப் படைப்பிரிவு தான். மன்னார் தொடக்கம், முள்ளிவாய்க்கால் வரை நடத்தப்பட்ட அந்தப் போரில், 58ஆவது டிவிசன் மோசமான போர்க்குற்றங்களையும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் இழைத்ததாகப் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளாலும், ஐ.நாவாலும் இந்த டிவிசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து, நியாயமான விசாரணைகள் நடத்தப்படவோ, குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கப்படவோ அல்லது, குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை.
போரின் முடிவில், இந்தப் படைப்பிரிவிடம் சரணடைந்த நூற்றுக்கணக்கான போராளிகள் இன்னமும் எங்கு உள்ளனர் என்றே தெரியாத நிலை உள்ளது. அண்மையில் கூட, போரின் முடிவில், புலிகள் யாரும் தம்மிடம் சரணடையவில்லை; அரசாங்கத்திடமே சரணடைந்தனர் என்று இராணுவம் மழுப்பியிருந்ததும், குறிப்பிடத்தக்க விடயம்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், ரதுபஸ்வெலவில், சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, 58ஆவது டிவிசன் படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல்களை நடத்தி, மூன்று பேரின் மரணத்துக்கும், 33 பேர் காயமடைவதற்கும் காரணமாக இருந்தனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, 58ஆவது டிவிசன் தளபதியாக இருந்த பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன உள்ளிட்ட சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, சில காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், பிணையில் வெளிவந்தனர்.
மீண்டும் இராணுவ சேவைக்குள் உள்வாங்கப்பட்ட பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன, இப்போது மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில், பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன உள்ளிட்ட நான்கு இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, ட்ரயல் அட்பார் நீதிமன்றம் ஒன்றை அமைக்குமாறு, சட்டமா அதிபர் இப்போதுதான் பிரதம நீதியரசரைக் கோரியிருக்கிறார்.
எனவே, 58ஆவது டிவிசனைப் பொறுத்தவரையிலோ, இராணுவத்தைப் பொறுத்தவரையிலோ, பொதுமக்களை மனிதாபிமானத்துடன் கையாண்டு வந்த வழக்கத்தைக் கொண்டது என்று கூறமுடியாது.
அவசரகாலச்சட்டம் அதிகாரங்களைக் கொடுத்திருக்கின்ற போது, அத்துமீறுவது இராணுவத்தினரின் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.
எனினும், அக்மீமன துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது தான் ஆச்சரியமானது. “இதுதான் மக்களைப் பாதுகாக்கின்ற முறையா” என்று, அவர் இராணுவத்தைப் பார்த்துக் கோபத்துடன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியில், இதுபோல எத்தனையோ சம்பவங்கள் வடக்கு, கிழக்கில் நடந்தேறியிருந்தன. அப்போதெல்லாம், பொதுமக்களைப் பாதுகாக்கும் முறை இதுதானா என்று, இராணுவத்தைப் பார்த்து ஒருபோதும் அவர் கேள்வி எழுப்பியதில்லை.
அவ்வாறு அவர் கேள்வி எழுப்பியிருந்தாலோ, ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்திருந்தாலோ, சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, அதனை மூடிமறைக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. போதிய சான்றுகள் முன்வைக்கப்படாமல், அந்த வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட 12 விசேட அதிரடிப்படையினர், ஒரு பொலிஸ் அதிகாரி ஆகியோர் அண்மையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
செஞ்சோலை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில், தலைமைத்துவ பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த 58 மாணவிகள் கொல்லப்பட்டபோது, அவர்களை விடுதலைப் புலிகள் என்று கூறி நியாயப்படுத்திக் கொண்டது அரசாங்கம்.
பாடசாலைக்குச் சென்ற ஏராளமான மாணவர்கள், வீதிகளிலும், பாடசாலைகளிலும் கொல்லப்பட்டபோது, ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இதுபோன்று கேள்வி எழுப்பும் எண்ணம் வரவில்லை.
போரைக் காரணம் காட்டி நடத்தப்பட்ட அந்தப் படுகொலைகளுக்காக, வாய் திறக்காமல் இருந்த மஹிந்த ராஜபக்ஷ, எந்த இராணுவத்தைப் பாதுகாப்பதாக சபதம் செய்தாரோ, அதே இராணுவத்தை இன்று குற்றம்சாட்டுகிறார் என்றால் அதற்குக் காரணம், அரசியல் இலாபம் தான்.
இன்று எல்லாப் பாடசாலைகளிலும் இராணுவத்தினர் உள்ளனர். இலட்சக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பு பற்றி, அவர்களின் பெற்றோருக்குக் கவலைகள் உள்ளன. அவர்களின் கவலைகளை வாக்குகளாக மாற்றுவதே மஹிந்தவின் திட்டம்.
மாணவர்களின் பாதுகாப்புக்காக என்று, படையினரைப் பாடசாலைகளில் நிறுத்திய அரசாங்கத்தின் மீது, குற்றம்சாட்டுவது அவரது நோக்கம்.
ஆனால், கடந்த மாதத்துடன் அவசரகாலச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, ஐ.தே.க அரசாங்கம் அழுத்தம் கொடுத்தபோது, அதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அவசரகாலச் சட்டத்தை நீடிக்க ஆதரவு அளித்தது மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்த எதிரணி தான்.
அவசரகாலச் சட்டத்துக்கு அங்கிகாரம் அளித்து, பாடசாலையில் காவலுக்கு இருந்த படை அதிகாரிக்குச் சுடும் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்த அரசியல்வாதிகள் அனைவருமே, இந்தச் சம்பவத்துக்கு, தாம் பொறுப்பாளிகள் இல்லை என்று நழுவ முற்படுகின்றமை வேடிக்கை.
அதேவேளை, இராணுவமோ இந்தச் சம்பவத்தை நியாயப்படுத்தி, ஒருவரைச் சுட்டுக்கொன்ற படை அதிகாரியைக் காப்பாற்ற முனைந்திருப்பது, பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால், 58ஆவது டிவிசன் உள்ளிட்ட இறுதிப் போரில் பங்கெடுத்த படையினர் தொடர்பான ஒழுக்க மீறல்கள், போர்க்குற்றச்சாட்டுகள் தான், இன்னமும் இலங்கைக்கும் இலங்கைப் படைகளுக்கும் சர்வதேச அளவில் நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
ஐ.நா அமைதிப்படையில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், மனித உரிமை ஆய்வுகளில், இராணுவத்தின் முக்கியமான படைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களால் தேர்ச்சி பெறமுடியாமல் இருக்கிறது. இதனால், ஒழுங்குமுறைப்படி தேவையான படையினரை வெளிநாட்டில் அமைதி காப்புப் பணிகளுக்கு அனுப்ப முடியாமல் இருக்கிறது.
கடந்தகால மோசமான மனித உரிமைப் பதிவுகள், ஆய்வு செய்யப்படுவது ஏன் என்பதை, அக்மீமன சம்பவம் நியாயப்படுத்தி உள்ளது.
போர்க்கால மனோநிலையில் இருந்து விடுபடாத படையினர், வெளிநாட்டுப் பணிகளிலும் அதுபோன்றே செயற்படக் கூடும். இப்போது, காலியில் நடந்ததுதான், நாளை மாலியிலும் நடக்கக் கூடும். அதனால் தான் மனித உரிமை ஆய்வுகளில் ஐ.நா திடமான முடிவில் இருக்கிறது.
கே. சஞ்சயன்