அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமை குறித்து எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியினர் மீது, மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிராகரித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷேஹான் சேமசிங்க இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், 2015ஆம் ஆண்டு பொய்யான விடயங்களை தெரிவித்து நல்லாட்சியை கொண்டுவந்து நாட்டை நாசப்படுத்த ஒன்று சேர்ந்த தரப்பினர் மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக ஒன்றிணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையால் சிரமத்துக்கு உள்ளாகிய அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.