யாழ் மாநகரசபை முதல்வரின் பிரத்தியோகப் பாவனைக்கு என யாழ் மாநகரசபை நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட மடிக் கணனியின் பெறுமதி 6 இலட்சத்து 28 ஆயிரம் ரூபா என கண்டறியப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவல் கோரப்பட்ட நிலையிலேயே யாழ் மாநகரசபையினால் குறித்த விடயங்கள் தொடர்பில் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரத்தியோகமாக தொழில்முறை சார்ந்து பயிற்றுவிக்கப்பட்ட வீடியோ படத் தொகுப்பாளர்கள் பயன்படுத்தக்கூடிய வசதிகளை உள்ளடக்கிய மிக அதிக பெறுமதிவாய்ந்த குறித்த Apple ; MR924PA/A மடிக்கணனி சாதாரண அலுவலக தேவைக்கு பயன்படுத்துவதற்காக யாழ் மாநகர முதல்வரினால் மக்கள் பணத்தில் கொள்வனவு செய்தமை பதவி அதிகாரத்தை வைத்துக்கொண்டு தான் என்னவும் செய்யலாம் எதுவும் வாங்கலாம் என்ற இறுமாப்புடன் நடந்துகொள்ளும் அதிகார துஸ்பிரயோக போக்கையே காட்டிநிற்கின்றது.
குறித்த மடிக்கணனி கொள்வனவுக்கு என சபையில் அனுமதி பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளபோதிலும் குறித்த பெறுமதியில் முதல்வரின் பயன்பாட்டிற்கு என மடிக்கணனி கொள்வனவு செய்ய தாம் சபையில் அனுமதி வழங்கவில்லை எனவும் தமது எதிர்ப்பையும் மீறியே ஆறு இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவிற்கு மாநகர முதல்வரால் மடிக்கணனி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்றும் உறுப்பிர்கள் சிலர் எமக்குத் தெரிவித்தனர்.
எனினும் எமக்கு தரப்பட்ட தகவல் அறியும் சட்டத்தினூடாக பெறப்பட்ட விபரங்களில் சபை அனுமதி பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனினும் கொள்வனவுச் சபையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டபோது குறித்த காலப்பகுதியில் கொள்வனவுச் சபையின் உறுப்பினர்களாக இருந்த சபை உறுப்பினர்களான துணை முதல்வர் ஈசன் மற்றும் வை.கிருபாகன் ஆகியோர் குறித்த பெறுமதியில் மடிக்கணனி கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் பின்னர் ஈசன் குறித்த கேள்விகோரலில் ஒப்பமிட்டதாகவும் கூறப்பட்டது
சபை உறுப்பினரும் கொள்வனவுச் சபை உறுப்பினருமான வை.கிருபாகரன் ஒப்பமிட்டு அங்கீகரித்திருக்கவில்லை. அது தொடர்பான ஆவணங்களும் தகவல் அறியும் சட்டம் ஊடாக எமக்குக் கிடைத்துள்ளன.
இதேவேளை குறித்த Apple ரக மடிக்கணனிக்கு யாழ் நகரிலுள்ள சில கணனி நிறுவனங்களிடம் கேள்விகோரல் பெற்பட்டுள்ளது.
குறித்த Apple ரக மடிக்கணனியின் பயன்பாடு மற்றும் அதன் பெறுமதி குறித்து சில தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் கணனி விற்பனையாளர்களிடம் வினவியபோது நகர முதல்வராக இருந்தால் என்ன மாகாண முதலமைச்சராக இருந்தால் என்ன அலுவலகப் பணிசெய்யும் ஒருவரது பயன்பாட்டிற்கு மக்கள் பணத்தில் இவ்வளவு பெறுமதியில் இத்தனை வசதிகளுடன் கணனி கொள்வனவு செய்வது இருக்கிற அதிகாரத்தில் என்னவும் செய்யலாம் என்ற தான்தோன்றித்தனமான போக்கினையே காட்டுகின்றது எனவும் இது சூத்தைப் பல் குத்துவதற்கு தங்க ஊசிபயன்படுத்துவது போன்ற செயற்பாடு எனவும் விமர்சித்துள்ளனர்.
இதேவேளை யாழ் மாநகரசபையில் உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு என கொள்வனவு செய்யப்படும் இலத்திரணியல் உபகரங்களை மீள சபையில் ஒப்படைக்கத் தேவையில்லை என்றும் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இச் செயற்பாடானது அதிகாரத்தைத் துஸ்பிரயோகம் செய்து மக்கள் பணத்தில் சொத்துக்களைச் சேர்த்து பதவிக் காலத்தில் அனுபவிப்பது மட்டுமல்லாது பதவிக்காலத்தின் பின் குறித்த சொத்துக்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ஏற்பாடு எனவும் மக்கள் விசனமடைந்துள்ளனர்.