டுவிட்டரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்காக அவரை இலங்கையை விட்டு வெளியேறுமாறு சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பிரதானியும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளருமான மொகான் விஜயவிக்கிரம வேண்டுகோள் விடுத்துள்ளமைக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இலங்கையில் பேருந்து புகையிரத பிரயாணங்களின் போது பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாவதை சுட்டிக்காட்டி பெண் பத்திரிகையாளர் பதிவு செய்த கருத்திற்காக முன்னாள் கடற்படை அதிகாரி அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பதிவிட்டுள்ளார்
வக்கிர மனோபாவம் கொண்ட நபர் ஒருவரின் ஆபாசமான வார்த்தைபிரயோகங்களை இலங்கை வீதிகளில் எதிர்கொள்ளவேண்டியுள்ளதை சுட்டிக்காட்டியிருந்த பெண் பத்திரிகையாளர் என்னால் 100 மீற்றர் கூட இவ்வாறான தொந்தரவுகள் இன்றி நடக்க முடியாதுள்ளது என குறிப்பிட்டிருந்தார்
இதற்கு பதில் அளித்துள்ள கடற்படை அதிகாரி நீங்கள் இந்த நாட்டிற்கு உகந்தவர் இல்லை நீங்கள் இந்த நாட்டிலிருந்து வெளியேறுங்கள் உங்கள் உண்மை நோக்கம் என்னவென கேள்வி எழுப்பியிருந்தார்.
முன்னாள் கடற்படை அதிகாரியின் இந்த கருத்திற்கு பல ஊடகவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal