வத்தளையில் தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறுகின்றது. இது தொடர்பான நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.
முதலாம் தரத்தில் இருந்து வத்தளையில் செயற்படும் தமிழ் மொழிமூல ஒரு தேசிய பாடசாலையாக இப்பாடசாலை அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாடசாலைக்காக 4 மாடி கட்டட தொகுதி அமைக்கப்படவுள்ளது. இதற்கான மொத்த மதிப்பீட்டு தொகையாக சுமார் 8 கோடி ரூபாவாக மதிப்பிடிப்பட்டுள்ளதுடன் முதற்கட்ட ஒதுக்கீடாக 3 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு, அரச கருமமொழிகள், சமூக மேம்பாடு, மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசனால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி பாடசாலை, அருண் பிரசாந்த் அறக்கட்டளையின் தலைவர் எம்.மாணிக்கவாசகம் அவர்களால் அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலைக்காக வழங்கப்பட்ட வளாகத்தை கல்வி அமைச்சு பொறுப்பேற்கும் நிகழ்வும் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.
Eelamurasu Australia Online News Portal