நீண்ட நாள் போராட்டத்தின் பின் மீன் பிடிக்க இரு தமிழ் மீனவர்களுக்கு அனுமதி!

நீரியல் வள திணைக்களத்தின் ஊடக அனுமதி வழங்கப்பட்டபோதும் மீண்டும் குறித்த தமிழ் மீனவர்கள் பெரிய மடு குளத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதி சகோதர இன மீனவர்களால் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடும் போரட்டத்தின் மத்தியில் ஆறு மாதங்களின் பின்னர் இரண்டு மீனவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு குறித்த மீனவர்கள் நேற்று புதன் கிழமையிலிருந்து மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஈச்சளவாக்கை  மற்றும் சன்னார் பகுதிகளில் நன்னீர் மீன் பிடியில் பல வருடங்களாக ஈடுபட்ட தமிழ் மீனவர்கள் நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து தற்காலிகமாக முகாமில் தங்க வைக்கப்பட்ட பின்னர் நாட்டில் ஏற்பட்ட சுமூகமான சூழலின் பின்னர் மீண்டும் தம் சொந்த நிலங்களில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

மீள் குடியேறி சுமார் 10 வருடங்கள் கடந்த நிலையில் குறித்த ஈச்சளவாக்கை மற்றும் சன்னார் பகுதி நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர்களை இதுவரை பெரிய மடு மீனவர் சங்கத்தை சேர்ந்த சகோதர இன மீனவர்கள் பெரிய மடு குளத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட அனுமதிக்கவில்லை.

குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஊடாக  வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைவாக விசரணைகளை மேற்கொண்டு கடந்த ஜனவரி மாதம் வவுனியா நீரியல் வள திணைக்களத்தின் ஊடாக குறித்த பாதிக்கப்பட்ட நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டது.

நீரியல் வள திணைக்களத்தின் ஊடக அனுமதி வழங்கப்பட்டபோதும் மீண்டும் குறித்த தமிழ் மீனவர்கள் பெரிய மடு குளத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதி சகோதர இன மீனவர்களால் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடும் போரட்டத்தின் மத்தியில் ஆறு மாதங்களின் பின்னர் இரண்டு மீனவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு குறித்த மீனவர்கள் நேற்று புதன் கிழமையிலிருந்து மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் நீரியல் வள திணைக்களைத்தின் அனுமதி வழங்கப்பட்ட மற்றும் ஒரு தமிழ் மீனவருக்கு தொடர்சியாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.