பார்ச்சூன் பத்திரிகை, அமெரிக்காவிற்கு வெளியே வணிக உலகில் ஆற்றல் மிக்க பெண்மணிகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த அருந்ததி பட்டாச்சார்யா, சந்தா கோச்சார், ஷிகா சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் பார்ச்சூன் பத்திரிகை, நடப்பு 2016-ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கு வெளியே 19 நாடுகளில் வணிக துறையைச் சேர்ந்த 50 ஆற்றல் மிக்க பெண்மணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பேங்கோ சான்டான்டர் நிறுவன தலைவர் அனா போடின் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய அரசு நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா இருக்கிறார்.
சந்தா கோச்சார், ஐசிஐசிஐ வங்கியின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். இவருக்கு வயது 54. பார்ச்சூன் பட்டியலில் இவர் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இந்திய வங்கித்துறையில் ஐசிஐசிஐ வங்கி இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. அதே சமயம் முதல் பெரிய தனியார் வங்கியாக உள்ளது.
தனியார் துறையைச் சேர்ந்த ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஷிகா சர்மா பார்ச்சூன் பட்டியலில் 19-வது இடத்தில் உள்ளார். சிங்கப்பூர் டெலிகம்யூனிகேஷன் குரூப் செயலாளர் சூவா சாக் குங் நான்காவது இடத்தில் இருக்கிறார். ஓர்நெல்லா பார்ரா (10), லாங்பார் வூ யாசூன் (26), ரெய்ச்சல் டுவான் (35), சன் ய பங் (38), அன் கெய்ன்ஸ் (44), ஆலிசன் வாட்கின்ஸ் (47) ஆகிய பெண்மணிகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த வாரத்தில் பார்ச்சூன் பத்திரிகை அமெரிக்காவின் 50 ஆற்றல் மிக்க பெண்மணிகள் பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுனத்தின் தலைவர் மேரி பாரா முதல் இடத்தையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், பெப்சிகோ நிறுவன தலைவருமான இந்திரா நூயி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.