இறந்த குழந்தையின் புகைப்படத்தை வைத்து பெற்றோரை மிரட்டிய இளம்பெண்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜே மற்றும் டீ விண்ட்ரோஸ் என்கிற தம்பதியினரின் மகள் அமியா ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது.

இந்த தம்பதியினர் ஒரு வணிகவளாகத்திற்கு சென்ற போது தங்களுடைய செல்போனை தவற விட்டுள்ளனர்.

அதில் இறந்த தங்களுடைய குழந்தையின் புகைப்படங்கள் இருப்பதால், யாரேனும் கண்டறிந்தால் தகவல் தெரிவிக்குமாறு பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

இதனை பார்த்த சிட்டி நூர்ஹிதாயா கமல் (24) என்கிற மலேசிய இளம்பெண், நீங்கள் தவறவிட்ட செல்போன் என்னிடம் தான் இருக்கிறது. அவற்றை நான் பத்திரமாக கொடுக்க வேண்டும் என்றால் என்னுடைய வங்கிக்கணக்கில் 1000 டொலர்கள் செலுத்த வேண்டும்.

அப்படி செய்ய தவறினால் செல்போனில் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் அழித்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து தம்பதியினர் காவல் துறையின்  உதவியை நாடியுள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, நூர்ஹிதாயாவிடம் செல்போன் இல்லை என்பது உறுதியானது.

அவர் பணத்திற்காக வேண்டுமென்றே பொய் கூறி தம்பதியினரை ஏமாற்றி வந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அவரை கைது செய்த காவல் துறையினர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.