ஜனாதிபதி தேர்தலுக்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வேட்பாளர்களாக களமிறங்கக்கூடியவர்கள் குறித்து அறிகுறிகள் காட்டப்படுகின்றனவே தவிர, திட்டவட்டமான அறிவிப்புகள் இதுவரையில் இல்லை. ஆனால், தேர்தலுக்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகள் அல்லது கூட்டணிகள் அவற்றின் வேட்பாளர்களை அறிவிப்பதில் நீண்ட தாமதத்தைக் காட்டமுடியாதநிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இத்தடவை ஜனாதிபதி தேர்தலில் கட்சிகளினால் முன்வைக்கப்படக்கூடிய பிரதான பிரச்சினை எதுவாக இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் ஜனாதிபதி தேர்தல்களில் பிரதான பிரசாரப்பொருளாக இருந்த ‘ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு ‘ க்கு இத்தடவை என்ன நேரப்போகிறது?
2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு இருந்த மட்டுமீறிய அதிகாரங்களில் ஒரளவு குறைப்பைச்செய்த அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தை ஒரு சாபக்கேடு என்று வர்ணிப்பவராக மாறியிருக்கிறார். எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வரக்கூடியவர்கள் 19 ஆவது திருத்தத்தைஒழிப்பதிலேயே முதலில் கவனம் செலுத்தவேண்டும் என்று கூட அவர் யோசனை கூறியிருக்கிறார். மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்குமானால், ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது என்பதற்கு பதிலாக 19 வது திருத்தத்தை ஒழிப்பதற்கு தனக்கு ஆணை தருமாறு மக்களைக் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாலரை வருடங்களுக்கு முன்னர் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தபோது இனிமேல் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் போட்டியிடப்போவதில்லை என்று பிரகடனம் செய்த ஜனாதிபதி சிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் உறுதியான ஆதரவாளராக மாறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரை ஜனாதிபதிக்கு மேலும் கூடுதல் அதிகாரங்கள் இருக்கவேண்டும் என்பதையே தனது நிலைப்பாடாக எப்போதும் கொண்டவர். கடந்த காலத்தில் அவர் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து தேர்தல்களின்போது ஒரு ஒப்பாசாரத்துக்கு வாக்குறுதி அளித்திருந்தாலும் இனிமேல் அது குறித்து பேசுவதற்கு முன்வரப்போவதில்லை. அதற்கான அரசியல் தேவையும் அவருக்கு இல்லை. தனது பதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிலான கூட்டணியின் சார்பில் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர் எவரையாவது தேர்தலில் களமிறக்கி ஜனாதிபதியாக்குவதே அவரின் தற்போதைய இலட்சியமாக இருக்கிறது. 19 ஆவது திருத்தத்தை ராஜபக்ச எதிர்த்தாலும் அது பிரதமர் பதவியை கணிசமானளவுக்கு வலுப்படுத்தியிருப்பதால், தனது குடும்பத்தவர் ஒருவரை ஜனாதிபதியாகக்கொண்ட ஆட்சியில் பிரதமர் பதவியை அடைவதை நோக்கமாகக்கொண்டு அவர் வியூகங்களை வகுக்கிறார்.அதனால், ஜனாதிபதி சிறிசேன அளவுக்கு 19 வது திருத்தத்தின் மீது வெறுப்பைக் கொண்டவராக தன்னைக் காட்டிக்கொள்ளவேண்டிய தேவையும் அவருக்கு இல்லை.
அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பை ஒருபோதும் மானசீகமாக அவர் விரும்பியதில்லை. அந்தப் பதவியை அடையமுடியாமல் இருப்பதே அவரி்ன் பிரச்சினை. அவரின் கால்நூற்றாண்டு கால தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை கைப்பற்றமுடியவில்லை. முதலில் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கவை எதிர்த்தும் பிறகு மகிந்த ராஜபக்சவை எதிர்த்தும் இருதடவைகள் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டு தோல்விகண்ட விக்கிரமசிங்க அதற்கு பிறகு போட்டியிடுவதைத் தவிர்த்துக்கொண்டார்.
இடைப்பட்ட காலத்தில் நடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களின்போது அன்றைய எதிரணியின் பொதுவேட்பாளர்களை ஆதரித்த அவர் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு கோரிக்கையுடன் ஒத்துப்போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதைத் தவிர அவர் அந்தக் கோரிக்கையை உண்மையாக விரும்பி ஆதரித்தவரில்லை. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது சாத்தியப்படாமல் இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சியடையக்கூடும். அதனால், அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது அந்த ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து ஐக்கிய தேசிய கட்சி பேசப்போவதில்லை என்று நம்பலாம்.
அதனால், ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) போன்ற சில கட்சிகளைத் தவிர பிரதான கட்சிகள் எதிர்வரும் டிசம்பரில் நடத்தப்படவேண்டியதாக இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதில்லை என்றே தோன்றுகிறது. நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சியே என்று அதிகப்பெரும்பாலான அரசியல் கட்சிகளும் குழுக்களும் உரக்கப்பேசிய காலம் போய் அது கைவிடப்பட்ட கதையாக முடியப்போகிறது போலத்தெரிகிறது.
2015 ஆட்சி மாற்றத்துக்கு பிறகு முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கச்செயன்முறை மூன்று பிரதான நோக்கங்களைக் கொண்டது என்று முதலில் கூறப்பட்டது.அதாவது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது, தேசியப்பிரச்சினைக்கு அரசியலமைப்புரீதியான தீர்வைக் காண்பது, தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவருவது ஆகியவையே அந்த நோக்கங்களாகும். பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் இப்போது கைவிடப்பட்டபோதிலும், அவை பல படிமுறைகளிலான செயன்முறைகளாக முன்னெடுக்கப்பட்ட சுமார் இரண்டரை வருடகாலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக் கோரிக்கைக்கு தென்னிலங்கையின் முக்கிய அரசியல் சக்திகளின் ஆதரவு அதிகரிப்பதற்கு பதிலாக அந்த ஆட்சிமுறை நிலைநிறுத்தப்படவேண்டும் என்ற வலியுறுத்தல்கள் தீவிரமடைந்த விசித்திரத்தையே காணக்கூடியதாக இருந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பபினர்கள் கூட்டு எதிரணி என்ற பெயரில் மகிந்த ராஜபக்ச தலைமையில் தனியாக செயற்படத் தொடங்கியதும் ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வலுவிழக்கத்தொடங்கியது. ஜனாதிபதியாக வந்த சில வாரங்களில் சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை தனதாக்கிக்கொள்ள சிறிசேனவினால் முடியுமாக இருந்தபோதிலும் கட்சியை தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அவரால் இன்றுவரை முடியவில்லை. ராஜபக்ச அணியினர் எடுக்கின்ற நிலைப்பாடுகளை எதிர்ப்பதற்குப் பதிலாக சிறிசேன அணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றுக்கு ஆதரவாக செயற்படும் போக்கையே காண்பித்தார்கள். புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையின் மூலமாக ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை கூட்டு எதிரணியினர் கடுமையாக எதிர்த்தனர். சிறிசேன அணியினரும் அதே நிலைப்பாட்டையே எடுத்தனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் அரசியலமைப்பு சபையின் குழுக்களுக்கு சமர்ப்பிக்ப்பட்ட யோசனைகளில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பக்கூடாது ; நாட்டின் ஒற்றையாட்சியையும் இறைமையையும் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி ஆட்சி அவசியம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெயவர்தன ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய நாளில் இருந்து அதை எதிர்த்துவந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு ஜனாதிபதி ஆட்சி தொடரவேண்டும் என்று உரத்து வலியுறுத்துகின்ற கட்சியாக மாறியிருக்கிறது.
அது மாத்திரமல்ல, தென்னிலங்கை சமுதாயத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்திருக்கக்கூடிய அரசியல் விவாதங்களின் திசைமார்க்கத்தை தீர்மானிப்பதில் தீவிர தேசியவாத சக்திகள் செலுத்தியிருக்கும் செல்வாக்கு பலம்பொருந்திய ஆட்சியாளர் பற்றிய மருட்சியொன்றை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு ஆதரவான சக்திகளைப் பெருமளவுக்கு பலவீனப்படுத்திருக்கக்கூடும். அரசியலமைப்புச் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை முன்னெடுக்கும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தன்னை பதவிக்கு கொண்டுவந்த அரசியல் சக்திகளையும் சிவில் சமூக இயக்கங்களையும் பலப்படுத்துவதற்குப் பதிலாக தனக்கு எதிராகச் செயற்பட்ட சக்திகளுடன் அணிசேருவதிலேயே ஜனாதிபதி சிறிசேன காட்டிய விபரீதமான நாட்டத்தின் விளைவே இன்றைய அரசியல் கோலங்கள்.
– வீ.தனபாலசிங்கம்