தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனால் கொண்டுவரப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்; மீண்டும் சம்மந்தனோடு பேசி கூட்டமைப்பில் மீள இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஆனால் அது சாத்தியமாகுமா என்பது குறித்தும் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் எங்கள் இனத்தின் தலைமைத்துவ வித்துவக் காய்ச்சல் இதற்கு வாய்ப்பளிக்காது என்றே நம்புகின்றேன். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ர துணைத்தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள வேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் விடுத்த அழைப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இணைதல் என்பது யார் யார் இணைவது என்பதில் தான் இருக்கின்றது. நான் பிரிந்து செல்கிறேன் எனக் கூறி சென்றவரை இணைத்துக்கொள்வது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் சரி பிழைகளுக்கு அப்பால் கூட்டமைப்பு தான் இன்றைக்கு வடகிழக்கு மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு கட்சியாக இருக்கிறது.
ஆக கூட்டமைப்பில் சேரக் கூடியவர்கள் எங்களோடு இணைந்து பயணிப்பது தான் பொருத்தமான விடயம். அதனடிப்படையில் விக்னேஸ்வரன் ஏற்கனவே சம்மந்தனால் தான் இங்கே கொண்டு வரப்பட்டவர். ஆகவே அவர் சம்மந்தனோடு பேசி எங்களோடு இணைந்து கொள்வதானால் அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்க முடியாது.
ஆனால் அது சாத்தியமோ என்றும் எனக்குத் தெரியவில்லை. அது சாத்தியமாகாது என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் எங்களுடைய இனத்தின் தலைமைத்துவ வித்துவக் காய்ச்சல் இதற்கு வாய்ப்பளிக்காது என்று தான் நான் நம்புகின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.