2006 ஆம் ஆண்டு திருகோணமலையை கதிகலங்க வைத்த 5 மாணவர் படுகொலையோடு சம்பந்தப்பட்டதாக கருதி கைதுசெய்யப்பட்டு கடந்த 6 வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்த 12 அதிரடிப்படையினரும் சுமார் 13 வருடங்களுக்குப்பிறகு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை (3.7.2019) விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் விடுதலைக்கான தீர்ப்பை திருகோணமலை நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி முகமட் ஹம்சா வழங்கியுள்ளார்.
வழக்கு தொடுநர் சார்பாக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு போதுமானதாக அமையாத காரணத்தினால் இவ்வழக்கிலிருந்து 13 எதிரிகளையும் விடுவிப்பதாக திருமலை நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் தீர்ப்பு வழங்கியுள்ளார். பீனல் கோட்டின் 154 மற்றும் 153 ஆவது பிரிவுகளின் கீழ் இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கான போதிய ஆதாரங்கள் இல்லையெனக்கூறி மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 5 மாணவர் படுகொலை வழக்கானது கடந்த மே மாதம் 15 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வழக்கு தொடர்பாக அதிரடிப்படையினருக்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு 31 சாட்சியாளர்கள் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லையென்ற அடிப்படையில் மேற்படி வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி. இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல் தொடர்பான படுகொலையோடு தொடர்புபட்டதாக பேசப்பட்டது மாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையிலும் இலங்கைக்கெதிரான மிக மோசமான மனிதவுரிமை மீறலாக குற்றம் சாட்டப்பட்டு வந்த பல்கலைக்கழக மாணவர் ஐவரின் படுகொலையானது முன்னாள் மனிதவுரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டதும் அறிக்கைப்படுத்தப்பட்டதுமான படுகொலையாகும்.
இப்படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் ஒரு உதவி பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 13 அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது திருகோணமலை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.
யுத்தம் தீவிரம் பெற்றிருந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக விருக்கும் காந்தி சிலைக்கு முன்பாக மாலைப்பொழுது, பொழுதுபோக்காக உரையாடிக் கொண்டிருந்த 5 மாணவர்கள் மீது இனந்தெரியாதவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் குண்டுவீச்சு காரணமாக 5 மாணவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
திருகோணமலை இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று பல்கலைக்கழகத்துக்கு 2005 – 2006 கல்வியாண்டுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த நான்கு மாணவர்களும் அவர்களின் நண்பர் ஒருவருமாக வன்னியார் வீதியைச் சேர்ந்த தங்கத்துரை சிவானந்தா, புனித மரியாள் வீதி மனோகரன் ரஜீகர், வித்தியாலயம் வீதி சண்முகராஜ சஜேந்திரன், சிவன் வீதி லோ.ரொகாந்த் மற்றும் போ. ஹேமச்சந்திரன் ஆகிய ஐந்து மாணவர்களுமே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.
குறித்த தினம் மாலை 7 மணியளவில் திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக நகரசபையால் நிர்மாணிக்கப்பட்ட காந்தி சிலைக்கருகில் மாணவர்கள் இருந்து உரையாடிக்கொண்டிருந்த போது சுமார் இரவு 7.30 மணியிருக்கும் கோணேசர் ஆலயத்துக்கு செல்லும் கடலுடன் அண்டிய வீதியில் வந்த பச்சைநிற முச்சக்கரவண்டியிலிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் உரையாடிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டு கோணேசர் ஆலய திசையை நோக்கி ஓடி மறைந்துள்ளனர்.
இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தம்மை பாதுகாக்கத்தெரியாது ஓடவும் முடியாமல் நின்ற வேளையில் டொக்கியாட் வீதி பக்கத்திலிருந்து ஓடிவந்த ஆயுத தாரிகள் (சீருடைக்காரர்) இம்மாணவர்களை சுற்றிவளைத்துள்ளனர்.
சுற்றி வளைத்த ஆயுத தாரிகள் செய்வதறியாது திகைத்து நின்ற மாணவர் ஏழுபேரையும் தனித்தனியாக பிரித்தெடுத்து அம்மாணவர்களை நடுவீதியில் குப்புறப்படுக்க வைத்து சரமாரியாக காது வழியாக துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளனர்.
இத் துப்பாக்கிப் பிரயோகத்தினால் மூளை சிதறி ஐந்து மாணவர்களும் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததுடன் வழக்குப்பதிவுகள் மூலமும் வழங்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மனிதவுரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட
ஆதாரங்கள் மூலமும் அறியவருகிறது.
இச்சம்பவ தினம் 7 மாணவர்கள் ஒன்று கூடி நின்ற போதும் சம்பவம் நடைபெற்றவேளை இரு மாணவர்கள் கும்மிருட்டை பயன்படுத்தி தப்பியோட முயற்சி செய்திருக்கிறார்கள். தப்பிக்க முயன்ற தருணம் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஒரு மாணவன் படுகாயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் மற்ற மாணவன் படுகாயங்களுடன் தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் வீடு சென்று பின் பாதுகாப்புக்கருதி ஊரைவிட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது. இரு மாணவர்களும் தெய்வாதினமாக உயிர் தப்பி ஓடிவிட்டார்கள் என்பது பின்னாளில் அறியப்பட்ட விடயம்.
காந்தி சிலையடி சீருடைக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டபோது அந்த அவகாசத்தைப் பயன்படுத்தி மாணவன் மனோகரன் ரஜீகர் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் தந்தையுடன் தொடர்புகொண்டு தாம் சுற்றி வளைக்கப்பட்ட அபாயத்தை தெரிவித்துள்ளான். செய்தி கேட்டு அருகிலுள்ள புனிதமரியாள் வீதியில் குடியிருக்கும் டாக்டர் மனோகரன் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு ஓடிவந்துள்ளார். அவர் கண் முன்னால் மகன் சுடப்பட்டுள்ளான் என பத்திரிகைகள் அக்காலத்தில் செய்தி வெளியிட்டிருந்தன.
இச்சம்பவம் தொடர்பில் பல்வேறு செய்திகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. மேற்படி மாணவர்கள் வைத்திருந்த கைக்குண்டு வெடித்தே அவர்கள் இறந்திருக்கலாம் என அரச தரப்பினராலும் அவ்வாறு இல்லை திட்டமிட்ட முறையில் சீருடைக்காரர்களால் எம்பிள்ளைகள் சுடப்பட்டுள்ளனர் என அவர்களுடைய பெற்றோர்களாலும் சாட்சியங்கள் வழங்கப்பட்டிருந்தன. இச்சாட்சியங்கள் போர் நிறுத்த கண்காணிப்புக்குழு மற்றும் மனிதவுரிமை ஆணைக்குழு ஆகியவற்றிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்மாணவர்களின் படுகொலை சம்பவமானது 2006 ஆம் ஆண்டளவில் உள்நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் அதிக கவனத்தைக் கொண்ட சம்பவமாக பல தரப்பினராலும் எடுத்துக் கூறப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் பயத்தின் காரணமாக நாட்டை விட்டு ஓடி அடைக்கலம் கோரியிருந்தமை சர்வதேச ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற இக்கொடிய சம்பவம் தொடர்பில் அரசாங்கமோ அல்லது நீதியாளர்களோ சட்டத்துறையினரோ இது தொடர்பில் மௌனம் சாதித்த வேளை பல்வேறு மனிதவுரிமை அமைப்புக்களும் சர்வதேச நீதியரசர்களும் இலங்கை அரசாங்கத்தின்மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். உள்நாட்டு வெளிநாட்டு மனிதவுரிமை அமைப்புக்கள் அரசாங்கத்துக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக இப்படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. குறிப்பாக மஹிந்த அரசு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
சந்தேகத்தின்பேரில் உதவி பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட அக்காலப்பகுதியில் திருகோணமலையில் கடமையாற்றிய 13 விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டார்கள். ஏ. சரச்சந்திரபெரேரா, ஜி.ஏ.ரோஹித விஜத்தகுமார, ஜி. ஆனந்த எல்.பி. ஜெயலால்,
ஏ. கமல்பிரதீப், ரவில் குமார ரத்நாயக்க, சமிந்த லோஜித உதயமிகிரபண்டார, கே. எம்.கே.சஞ்சீவ, எம். ஏ. விமல் பண்டார, ஜே. எம்.நிமல்பண்டார, ஜெயசேகர திசாநாயக்க, ஜெயந்த திசாநாயக்க, எஸ். இந்திக்க துஷார ஆகிய 12 அதிரடிப்படையினரும் 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்கள் . 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சுமார் 7 வருடங்களுக்குப்பின்னே சந்தேகத்தின்பேரில் 2013 ஆம் ஆண்டு அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டார்கள். புலனாய்வுப்பிரிவினர் குறித்த நபர்களை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அழுத்தம் ஜெனீவா மனிதவுரிமை பேரவையினால் ஏற்பட்டது என்பதை அப்போதைய மனிதவுரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன. 2013 ஆம் ஆண்டின் ஜெனீவா மனிதவுரிமை பேரவையில் 5 மாணவர்களின் படுகொலை சம்பவமானது முக்கியமானதொரு விடயமாக பிரஸ்தாபிக்கப்பட்டது மாத்திரமன்றி, அதன் நிகழ்ச்சி நிரலிலும் இடம்பெற்றதன் காரணமாக இலங்கை அரசாங்கமானது தனது நீதித்தன்மையை நிரூபிக்கும் நோக்கில் விசாரணைகளை முடுக்கி
விட்டது. மேலும் திருகோணமலை நீதிமன்றில் 13 அதிரடிப்படையினர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
இதே வருடம் படுகொலை செய்யப்பட்ட மாணவன் ரஜீகரின் தந்தையான டாக்டர் மனோகரன் தனது மகனின் படுகொலை சம்பந்தமாக வாக்கு மூலம் அளிக்கும் சந்தர்ப்பமொன்று ஜெனீவா மனிதவுரிமை பேரவையினால் வழங்கப்பட்டது. அவர் தனது வாக்கு மூலத்தில், எனது மகன் ரஜீகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட்டு நீதி வழங்கப்படவேண்டும் என படுகொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தையான காசிப்பிள்ளை மனோகரன் கதறி அழுது கோரிக்கை விடுத்திருந்தார். சர்வதேச மன்னிப்பு சபையின் சார்பில் பங்கு கொண்ட மனோகரன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஐவரும் மாணவர்கள் என்றும் இவர்கள் தனது மகனின் நெருங்கிய நண்பர்கள் என்றும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே திட்டமிட்டமுறையில் தெரிவு செய்யப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் மகனின் மூளை சிதறி கொல்லப்பட்ட அந்த கொடூரத்தை தான் நேரே பார்த்ததாகவும் சாட்சியமளித்திருந்தார்.
இப்படுகொலை சம்பவமானது 2014 ஆம் ஆண்டு ஜெனீவா மனிதவுரிமைபேரவையில் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. முன்னாள் மனிதவுரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். 20 பக்கம் கொண்டதும் 74 விடயங்களை உள்ளடக்கியதுமான அவ்வறிக்கையில் திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற 5 மாணவர் படுகொலை சம்பந்தமாக பின்வரும் விடயங்களை குறிப்பிட்டிருந்தார். திருகோணமலை கடல் முகப்பில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் இப்படுகொலைக்கு சாட்சியங்களாக முன்வந்தவர்கள் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்ததோடு அவ்வறிக்கையின் 48 ஆவது பிரிவில் சொல்லப்பட்டதாவது, 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி திருகோணமலை கடல் முகப்பில் வைத்து பாதுகாப்பு படையினரால் நையப்புடைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
திருகோணமலை நீதவான் நீதிமன்றினால் மாணவர் படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கு பிரசித்திபெற்ற நபர்கள் உள்ளடங்கிய சர்வதேச சுயாதீன ஆணைக்குழுவொன்றால் அவதானிக்கப்பட்டு வந்த உடலகம ஆணைக்குழுவினால் 2006, 2007 காலப்பகுதிகளில் விசாரிக்கப்பட்டபோதும் அவ்வறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
குறித்த காலப்பகுதியில் குறித்த படுகொலை சம்பவம் இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவினாலும் விசாரிக்கப்பட்டிருந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் வெளியிடப்பட்ட மனிதவுரிமை அறிக்கையில் மேற்படி படுகொலையில் பாது காப்பு படையினர் தொடர்புபட்டிருந்ததாக கருதிக்கொள்ளப்பட்ட உடலகம ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்டவை குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமை குறித்து திகைப்பூட்டும் அச்சம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்த படுகொலை பற்றிய மேலதிக விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென சிபாரிசு செய்துள்ளது. ஆகவே இப்படுகொலை தொடர்பில் இலங்கை அரசு அதிக கரிசனை காட்டவேண்டுமென ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
நவநீதம்பிள்ளையால் சுட்டிக்காட்டப்பட்ட உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையானது காலதாமதமாகவே சுமார் 8 வருடங்களுக்குப்பின் 20.10. 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இவ்வறிக்கையில் குறிப்பிட்டவாறு குற்றம் இழைக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லையென்பது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட விடயமாகும்.
உடலகம ஆணைக்குழுவானது இலங்கையில் இடம் பெற்ற மனிதவுரிமை மீறல் தொடர்பான 15 விடயங்களை ஆராயும் அதிகாரம் கொண்டதாக நியமிக்கப்பட்ட நிலையில் திருகோணமலையில் இடம்பெற்ற படுகொலைகளான 5 மாணவர்களின் படுகொலை மற்றும் மூதூரில் நடந்த தொண்டர் நிறுவனப்பணியாளர் 17 நபர்கள் படுகொலை செய்யப் பட்டமை மிக பிரதான விசாரணைப் படுத்தப்படவேண்டிய கொலைகளாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
திருகோணமலை பிரதேசத்தில் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இடம்பெற்ற மிகமோசமான பல படுகொலை சம்பவங்கள் இன்று மறக்கப்பட்டதாகவே காணப்படுகிறது. மூதூர் தொண்டர் நிறுவனப் படுகொலைகளின் சூத்திரதாரிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.1996 ஆம் ஆண்டு குமாரபுரத்தில் நடந்த படுகொலை சம்பவத்தில் 21 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டார்கள். இதன் சந்தேகத்தின் பேரில் 6 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் நீதிமன்றில் நிறுத்தப்பட்டபோதும் அவர்கள் நிரபராதிகள் என 2016 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்கள் .
நீதி தேவன் வாக்குப்படி ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளலாம் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக்கூடாது என்பது இயற்கை நீதி கோட்பாடாக இருப்பினும் கொல்லப்பட்ட அப்பாவிகளின் ஆத்மாக்களுக்கு யாரால் நீதி வழங்கமுடியும்?
திருமலைநவம்