அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் கடந்த 3 மாதங்களில் 12 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 84 கோடி) நிதி திரட்டி உள்ளார்.
அடுத்த ஆண்டு அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட பலரும் முனைப்பாக உள்ளனர்.
அவர்களில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் இந்திய வம்சாவளி செனட் சபை எம்.பி. கமலா ஹாரிஸ் (வயது 54) உள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக நிதி திரட்டும் பணியில் அனைவரும் தீவிரமாக உள்ளனர். கமலா ஹாரிஸ் கடந்த 3 மாதங்களில் 12 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 84 கோடி) நிதி திரட்டி உள்ளார்.
இருப்பினும் இவர் ஜோ பிடென், பெர்னி சாண்டர்ஸ் ஆகியோரை விட பின்தங்கிய நிலையில் இருக்கிறார். ஜோ பிடென் 21.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.150 கோடி), பெர்னி சாண்டர்ஸ் 18 மில்லியன் டாலர் (சுமார் ரூ.126 கோடி) திரட்டி உள்ளனர்.
நிதி திரட்டுவதில் கமலா ஹாரிஸ் மேலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஒரு வேளை இவர் வேட்பாளராகி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அமெரிக்க ஜனாதிபதி பதவியில் அமரும் முதல் இந்திய வம்சாவளி என்ற பெயரைப் பெறுவார்.
Eelamurasu Australia Online News Portal