வடகொரியாவால் விடுவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய மாணவர்!

வடகொரியாவால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட மாணவர் அலெக், தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக் சிங்லே(29) என்ற மாணவர், முதுகலைப் பட்டம் பயில வடகொரியா சென்றுள்ளார்.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் காணாமல் போனதாக மாணவரின் பெற்றோர் தெரிவித்தனர். மேலும், அவர் குறித்த எந்த தகவலும் இல்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாணவர் அலெக் சிங்லே கடந்த வியாழக்கிழமை வடகொரிய அரசால் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பாக தெளிவான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட பின்னர் அலெக் கூறுகையில், ‘நான் நலமாக இருக்கிறேன் என்பதை அனைவரும் அறிய வேண்டும். அது மட்டுமில்லாது எனது நலன் குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும், எனது குடும்பத்திற்கு இந்நேரங்களில் ஆதரவு அளித்ததற்கு நன்றி. நான் எனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதற்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவுஸ்திரேலிய பிரதமர் மோரிசனுக்கு நன்றி தெரிவித்த அலெக், தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஊடகங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும், எந்தவித பத்திரிகையாளர் சந்திப்புக்கும் தான் தயாராக இல்லை என்றும் தெரிவித்தார்.