தமிழ் மக்கள் மீண்டுமொருமுறை தென்னிலங்கை அதிகாரத்தரப்பினரால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். வரலாறு முழுவதும் தமிழ் பேசும் மக்கள் தமக்கான அரசியல் அதிகாரங்கள், தீர்வுத்திட்டங்கள் தொடர்பில் எவ்வாறு தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டனரோ அதேபோன்று மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டுள்ளனர். நியாயமான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த தமிழ் மக்கள் தற்போது நம்பிக்கையிழந்தவர்களாகவும் எதிர்பார்ப்பு அற்றவர்களாகவும் மாறியிருக்கின்றனர்.
2015ஆம் ஆண்டு உருவாகிய நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடையப் போகின்றது. இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப் போகிறது. ஆனால் அதேபோன்று தமிழ் மக்கள் தீர்வுத் திட்டம் தொடர்பில் வைத்திருந்த நம்பிக்கையும் சிதறிபோகும் தறுவாயிலே காணப்படுகின்றது. எதிர்பார்ப்புகள், நம்பிக்கை, என்பன வீழ்ச்சிப்பாதையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றன. தீர்வுத் திட்டம் கிடைக்கும் என்று எந்தளவு தூரம் 2015ஆம் ஆண்டு தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்தனரோ, அதே அளவு தற்போது நம்பிக்கையின்மை ஏற்பட்டு விட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் உருவாகியபோது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. தமது நீண்ட கால கோரிக்கையான அரசியல் தீர்வுத் திட்டம் நீண்டகாலம் நிலைத்திருக்க வேண்டிய வகையில் முன்வைக்கப்படும் என தமிழ் பேசும் மக்கள் கடந்த 2015ஆம் ஆண்டு வெகுவாக எதிர்பார்த்தனர். அதற்கான சூழலும் அப்போது உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நியாயமான அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கை அனைத்து தரப்பினருக்கும் காணப்பட்டது. அதற்கான சாத்திய மும் அப்போது மிக அதிகமாக காணப்பட்டது. இதற்கு பல காரணங்களும் இருந்தன. தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வு திட்டமொன்றை வழங்க வேண்டும் என்ற தேவையை அப்போது ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் உணர்ந்திருந்தன.
தேசிய அரசு தந்த நம்பிக்கை
அவ்வாறான பின்னணியில் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை 2015ஆம் ஆண்டு அமைத்தன. அவ்வாறு தேசிய அரசாங்கத்தை அமைத்தபோது அதற்கான காரணமாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாணுதல், நாட்டை அபிவிருத்தி செய்தல், தேர்தல் முறைமையை மாற்றியமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் பேசும் மக்களின் தேசிய பிரச்சினைத் தீர்வுக்காக ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இந்த தேசிய அரசாங்கம் காணப்பட்டது. இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதானது தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் வரலாறு முழுவதுமே அதாவது சுதந்திரத்தின் பின்னர் இரண்டு பிரதான கட்சிகளே ஆட்சி அமைத்து வந்துள்ளன. ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அடுத்த கட்சி எதிர்க்கட்சியில் இருக்கும். அதாவது அவ்வாறு ஆட்சியில் இருக்கும் கட்சி தீர்வுத் திட்டத்திற்காக முயற்சிக்கும்போது அதனை எதிர்க்கட்சி எதிர்ப்பதும், அதே எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும்போது அப்போது எதிர்த்தரப்பில் இருக்கும் எதிர்க்கட்சி எதிர்க்கும் நிலைமையே கடந்த காலங்களில் இடம்பெற்று வந்தது. இந்தச் சூழலிலேயே இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து 2015ஆம் ஆண்டு தேசிய அரசாங்கத்தை அமைத்தன. தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டமையானது இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகுமுறை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பு
முனையாகக் காணப்பட்டது. காரணம் தமிழருக்கான தீர்வுத்திட்டத்தின் தேவையை உணர்ந்திருக்கின்ற இரண்டு கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருந்தமையாகும். அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கடந்த காலங்கள் போலன்றி தீர்வுத் திட்ட விடயத்தில் ஒரு நல்ல இடத்துக்கு வந்திருந்தது. அதாவது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கிய 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த தமது கட்சி தயார் என்று சுதந்திரக் கட்சி அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
கனவாகிப் போன புதிய அரசியலமைப்பு
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக தேசிய அரசாங்கம் பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றியமைத்தது. அந்தச் செயற்பாட்டின் கீழ் பிரதான வழிநடத்தல் குழுவும் உப குழுக்களும் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக இந்த பிரதான வழிநடத்தல் குழுவானது அதிகாரப் பகிர்வுத் திட்டம் மற்றும் தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றியமைத்தல் ஆகியவற்றை ஆராய்ந்தது. மறுபுறம் வழமைக்கு மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நல்லாட்சி தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும்போக்கை கடைப்பிடித்தது. காரணம் இவ்வாறு தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தமக்கான ஒரு நியாயமான அரசியல் தீர்வுத்திட்டத்தைப் பெறலாம் என கூட்டமைப்பு எண்ணியது. கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இது ஓர் ஆபத்தான அரசியல் தீர்மானமாகக் காணப்பட்டது. அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் போக்கை கூட்டமைப்பு கடைப் பிடித்ததால் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. எனினும் கூட்டமைப்பினதும் பங்களிப்புடன் தீர்வுத் திட்டத்துடன் கூடிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
‘ஒருமித்த நாடு’
விசேடமாக ஒரு கட்டத்தில் ஒருமித்த நாடு என்ற அடிப்படையில் தீர்வுத் திட்டத்தைக் காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அது கடும் விமர்சனத்தை தென்னிலங்கையில் உருவாக்கியது. எப்படியிருப்பினும் பல்வேறு மாற்றங்கள், முன்னேற்றங்களின் அடிப்படையில் தீர்வுத்திட்டத்தை உள்ளடக்கிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் தொடர்ந்தன. எனினும் ஒரு கட்டத்தில் குழறுபடிகள் ஏற்பட ஆரம்பித்தன. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் தீர்வு காணும் முயற்சியை தலைகீழாக மாற்றிவிட்டன என்பதே யதார்த்தமான உண்மையாகும். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியலமைப்பு முயற்சிகளை கடுமையாக எதிர்த்தது. அதனடிப்படையில் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றதையடுத்து தீர்வுத்திட்டத்துடன் கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் ஸ்தம்பிதமடைய ஆரம்பித்தன.
அதன் பின்னர் அந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதே தவறானது என்ற கருத்து உருவாக்கப்பட்டது. இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மனோ கணேசன், உள்ளிட்டவர்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக புதிய அரசியலமைப்பு தொடர்பான சில பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அவை தொடர்ந்து ஸ்தம்பிதமடைந்தே காணப்பட்டன. அத்துடன் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியும் அரசியலமைப்பு பணிகளை கேள்விக்குறியாக்கின. அதன் பின்னர் அந்தப் பணிகள் முழுமையாக ஸ்தம்பிதமடைய ஆரம்பித்தன. தற்போது தீர்வுத் திட்டம் மற்றும் புதிய அரசியலமைப்பு கிடைக்கும் என்ற தமிழ் மக்களின் நம்பிக்கை சிதறிவிட்டது என்றே கூற வேண்டும். 2018ஆம் ஆண்டு வரை அந்த நம்பிக்கை காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த நம்பிக்கை வீழ்ச்சியடைய ஆரம்பித்து விட்டது.
மிக முக்கியமான விடயம் என்னவென்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்வாறு ஒரு தீர்வுத் திட்டத்தைப் பெற்றுக்கொடுப்பதாக தமிழ் மக்களிடம் வாக்குறுதி அளித்தனர். இதன் காரணமாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு பாரிய பங்களிப்பை செய்தனர். எனினும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் இந்த முயற்சியில் கால்வைத்த தலைவர்கள் பின்னர் தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வைத்த எதிர்ப்பு காரணமாக பின்வாங்கி விட்டனர்.
தற்போது அந்த நிலைமை முற்றாக மாறிவிட்டது. எஞ்சியிருக்கின்ற தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் தீர்வுத்திட்டமோ, அரசியலமைப்போ வரப்போவதில்லை என்பது உறுதியாகி விட்டது.
மீண்டும் ஏமாற்றம்
அப்படிப் பார்க்கும்போது வரலாற்றில் நடந்ததைப்போன்று மீண்டும் தமிழ் மக்கள் தீர்வு விடயத்தில் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே தமிழ் மக்கள் தமக்கான ஒரு தீர்வுத் திட்டத்தை கோரி வருகின்றனர். அதற்காக பாரிய இழப்புகளை தமிழ் மக்கள் சந்தித்து விட்டனர். பல தடவைகளில் தீர்வுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அவை எவையும் இறுதி வெற்றியை நோக்கி நகரவில்லை. டட்லி – செல்வா ஒப்பந்தம், பண்டா– செல்வா ஒப்பந்தம், திம்பு பேச்சுவார்த்தை, இலங்கை–இந்திய ஒப்பந்தம், அதன் அடிப்படையிலான 13ஆவது திருத்தச் சட்டம், சந்திரிகா அம்மையார் காலத்திலான தீர்வு முயற்சிகள், தீர்வுப் பொதி, 2002 போர் நிறுத்த கால பேச்சுவார்த்தைகள், ஒஸ்லோ பிரகடனம், பின்னர் மஹிந்த ராஜபக் ஷ காலத்திலான தீர்வு முயற்சிகள் என வரலாறு முழுவதும் இடம்பெற்றபோதும் அவை வெற்றிக் கனியை ருசிக்கவில்லை.
தீர்வு முயற்சி கள் வெற்றிபெறும் நிலைக்கு இறுதி வரை வந்து பின்னர் ஏமாற்றமே மீதமாக இருக்கும். இதுவே வரலாறு முழுவதும் நடைபெற்று வந்திருக்கிறது. இவ்வாறான வரலாற்றுப் பின்னணியிலேயே 2015ஆம் ஆண்டு அனைவர் மத்தியிலும் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வகையில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அரசியல் தீர்வுத்திட்டமும் கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. தேசிய அரசாங்கமும் அமைந்ததன் காரணமாக தீர்வுத்திட்டம் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை அதிகளவில் ஏற்பட்டது. எனினும் அந்த முயற்சி குறுகிய காலத்திலேயே தோல்வியைச் சந்திக்கும் நிலைமைக்கு வந்திருக்கின்றது. இந்த இடத்தில் அனைத்துத் தரப்பினரும் இதய சுத்தியுடன் செயற்பட்டனரா என்ற சந்தேகமும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படாமல் இல்லை.
கூட்டமைப்பின் தியாகம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு நியாயமான தீர்வைப் பெற வேண்டும் என்பதற்காக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் போக்கை கடைப்பிடித்து வந்தது. இதன் ஊடாக நிலையான அரசாங்கம் ஒன்றைப் பேண முடியும் என்றும் அதன் மூலம் தீர்வுத்திட்டத்தைப் பெற முடியும் என்றும் கூட்டமைப்பு எண்ணியது. எனினும் அந்த முயற்சி கைகூடவில்லை என்று தெரிகிறது. காரணம் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில் இந்தக் காலப்பகுதிக்குள் அரசியல் தீர்வுத்திட்டத்தை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அதன்படி பார்க்கும் போது மீண்டும் ஒருமுறை தமிழ் மக்கள் தீர்வு விடயத்தில் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர் என்றே கூறவேண்டும். அதுவும் இம்முறை பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய நிலையிலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்.
கூட்டமைப்பு இவ்வாறு நல்லாட்சி அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவும் வீணாகிப் போயிருக்கிறது. இது தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இவ்வருடத்துக்குள் தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்றும் இல்லாவிடின் சில முக்கிய தீர்மானங்களை கூட்டமைப்பு எடுக்கும் என்றும் தெரிவித்திருக்கின்றார். சம்பந்தனைப் பொறுத்தவரையில் ஒரு நியாயமான தீர்வுத்திட்டத்துக்கான அடித்தளம் இந்த அரசாங்கத்தில் இடப்படும் என அவர் முழுமையாக நம்பியிருந்தார். அதற்குக் காரணம் கடந்த கால ஆட்சிகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய ஆட்சியில் சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் எண்ணினார். இதனால் எப்படியாவது தீர்வைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை சம்பந்தனிடம் காணப்பட்டது.
மற்றுமொரு பஸ் வருமா?
எனினும் தென்னிலங்கையின் சுயநல அரசியல் மற்றும் கடும் போக்குவாத நகர்வுகள் சம்பந்தனின் நம்பிக்கையை தற்போது தகர்த்தெறிந்திருக்கின்றன என்றே கூற வேண்டும். இந்த நல்லாட்சியில் எப்படியாவது தீர்வைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையிலிருந்த தமிழ் மக்கள் அந்த நம்பிக்கையை இன்று இழந்திருக்கின்றனர். தற்போது தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் அடுத்த தேர்தல்களுக்கான முயற்சிகளிலும் காய்நகர்த்தல்களிலும் ஈடுபட ஆரம்பித்து விட்டன. தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதி அளித்த கட்சிகளும் இன்று வெவ்வேறு வகையான நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கின்றன. எனவே இந்த எஞ்சிய காலப்பகுதியில் தீர்வுத் திட்டம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை சாத்தியமற்றதாகவே தெரிகிறது. இதனை ஏற்றுக்கொள்வது சில தரப்பினருக்கு கசப்பாக இருக்கலாம். எனினும் யதார்த்தம் அதுவாகவே காணப்படுகின்றது. இது இறுதி பஸ். இந்த பஸ்ஸை தவறவிட்டால் பயணம் செய் வதற்கு வேறு பஸ் கிடைக்காது என்று சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா அடிக்கடி கூறுவார். அந்த வகையில் அவ்வாறு கூறப்பட்ட இறுதி பஸ்ஸானது பயணிகளை ஏற்றாமல் போய்விட்டதாகத் தெரிகிறது. அடுத்து எந்த பஸ் வருகின்றது என்று பார்க்கலாம்.
ரொபட் அன்டனி