இனி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜக்கிய தேசியக் கட்சியின் அடிமைகளாகவே இருப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று(06) கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி கோவில்வயல் கிராமத்தில் இடம்பெற்ற கிராம சக்தி வேலைத்திட்ட முன்னேற்ற மக்கள் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
யார் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு நன்மை கிட்டும், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதனை கருத்தில் எடுத்து தீர்மானங்களை மேற்கொள்ளும் நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இல்லை. எவர் ஆட்சிக்கு வந்தாலும் இனி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜக்கிய தேசியக் கட்சியின் நன்றிக்குரியவர்களாக அவர்களின் அடிமைகளாகதான் இருப்பார்கள். இந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை வருகின்ற தேர்தல்களில் ஜக்கிய தேசிய கட்சியிடம் கொண்டு சென்று அடக்கு வைக்கப்போகின்றார்கள். என்பதே உண்மை.
நல்லாட்சி உருவாக்கப்பட்டு நான்கு வருடங்கள் நிறைவுற்றுள்ளது. நல்லாட்சி அரசை கொண்டு வந்ததில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அதிக பங்களிப்பு உண்டு. நல்லாட்சியை கொண்டு வருகின்ற போது தமிழ் மக்களின் மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கிலேயே கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று நடப்பதோ வேறு தமிழ் மக்களின் பிரச்சினைகளை விடுத்து கம்பெரலிய போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காணாமல் போனோருக்கு தீர்வு இல்லை, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, காணிகள் விடுவிக்கப்படவில்லை, அரசியல் தீர்வு எட்டப்படவில்லை, முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை, இப்படி மக்களின் தேவைகள் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படாது கோயில்களுக்கு அடிக்கல் நாட்டுவதிலும் நூறு இருநூறு மீற்றர்களில் வீதிகள் போடுவதிலும் தலைமைகள் கவனம் செலுத்துகின்றன. இதனால் ஒப்பந்தகாரர்கள் நன்மையடைகின்றனரே தவிர பொது மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனத் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கொச்சப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த காலங்களில் தென்னிலங்கையிலிருந்து அமைச்சர்கள் , தலைவர்கள் வருகின்ற போது தமிழ் மக்கள் அவர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்திய போது அது நியாயமானது நேர்மையானது ஆனால் இதே போராட்டம் தங்களுக்கு எதிராக நடந்தால் அது வேறு நிகழ்ச்சி நிரலில் நடக்கிறது. இது நியாயமற்ற போராட்டம் மது போதையில் வந்து போராட்டம் செய்கின்றார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது சினிமா நகைச் சுவை போன்றுள்ளது ஆதாவது தங்களுக்கு வந்தால் இரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போன்றுள்ளது. எனவும் தெரிவித்தார்.