ஒரு தசாப்தம் கடந்தும் கூட நிலையான வாழ்விடம் இல்லை!

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை 65 இலங்கை அகதிகளை இந்தியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்குமாறு அண்மையில்  பிறப்பித்த உத்தரவு நீண்டகாலப் பிரச்சினை ஒன்றுக்கு இரு நாடுகளும் தீர்வுகாணவேண்டிய தேவை மீது மீண்டும் கவனத்தை திருப்பியிருக்கிறது.

இலங்கையில்  இருந்து 1983 — 2012 காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தப்பியோடிவந்த சுமார் 95 ஆயிரம் அகதிகள் சம்பந்தப்பட்டதே இந்த பிரச்சினையாகும். அவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் மத்திய அரசாங்கத்தின் கணிசமான நிதியுதவியுடன் மாநில அரசாங்கத்தினால் நிருவகிக்கப்பட்டுவருகின்ற 107 முகாம்களில் தங்கியிருக்கிறார்கள் என்று மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது மீதிப்பேர் முகாம்களில் வசிக்காத அகதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். தங்கள் சொந்தச் செலவில் வாழ்கிகின்ற அவர்கள் ஒரு காலமுறைப்படி உள்ளூர் அதிகாரிகள் முன்னிலையில் சமுகமளிக்கவேண்டும். இந்தியாவின் ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடுமபோது மிகப்பெரிய எண்ணிக்கையான அகதிகளுக்கு இடமளித்திருப்பது தமிழ்நாடு தான்.

நாடற்ற 65 பேர் 

1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட நாடளாவிய வன்முறையைத் தொடர்ந்து 1983 — 1985 காலகட்த்தில் தமிழ்நாட்டுக்கு வந்துசேர்ந்த பிறகு திருச்சியில் உள்ள அகதிமுகாமில் தங்கவைக்கப்பட்ட  ” நாடற்ற நபர்கள் ” 65 பேர் சம்பந்தப்பட்டதே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை முன்னால் உள்ள வழக்காகும். (இவர்களின் மூதாதையர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக இந்தியாவில் இருந்து கூட்டிச்செல்லப்பட்டவர்கள். ) இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் 1964 ஆம் ஆண்டிலும் 1974 ஆண்டிலும் கைச்சாத்திட்ட  இரு தரப்பு உடன்படிக்கைகளின் கீழ் வருகின்ற தாயகம் திரும்பியவர்களுக்கு சமதையாக தங்களைக் கணிக்கவேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாகும்.இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த தமிழ் அகதிகளுடன் தங்களைச் சேர்த்து நோக்குவதை இவர்கள் விரும்பவில்லை.

ஆனால், இவர்கள் செல்லுபடியாகக்கூடிய ஆவணங்களின்றி இந்தியாவுக்குள் பிரவேசித்தவர்கள் என்பதால் மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் ” சட்டவிரோத குடியேற்றவாசிகள் ” என்றே நாமகரணஞ்சூட்டியிருக்கின்றன. குடியுரிமைக்கான தகுதிப்பிரமாணங்களை இவர்கள் நிறைவுசெய்திருந்தாலும் கூட  ஒரு உரிமையாக குடியுரிமையைக் கோரமுடியாது என்று மத்திய அரசாங்கம் கூறியிருக்கிறது.ஆனால்,  அகதிகள் வலுக்கட்டாயமாக நாடுதிருப்பியனுப்பப்பட மாட்டார்கள் என்று அவர்களுக்கு 1990களின் முற்பகுதியில் அதிகாரிகள் உறுதியளித்தார்கள்.

குடியுரிமையை வழங்குவது என்பது மத்திய அரசாங்கத்தின் ” பிரத்தியேகமான நிறைவேற்று செயற்களத்திற்குள் ” வருகின்ற விவகாரம் என்பதை ஏற்றுக்கொண்ட அதேவேளை, இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்குமாறு மனுதாரர்களான மேற்படி 65 அகதிகளையும் உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.  மனுதாரர்களின் வாதத்தை கொள்கையளவில் நீதித்துறை இணங்கிக்கொண்டிருப்பதனால், அவர்களுக்கு கிடைத்த ஒரு தார்மீகவெற்றி என்று இதைக் கருதவேண்டும்.

இலங்கை அகதிகள் பிரச்சினையை ஒரேயடியாகத் தீர்த்துவைப்பதற்கு ஒரு வாய்ப்பை நீதிமன்ற உத்தரவு வழங்கியிருக்கிறது. குடியுரிமையை வழங்குவதா அல்லது மறுப்பதா என்பது மாத்திரமல்ல  இங்குள்ள பிரச்சினை ;   இந்தியாவில் அகல்விரிவான குடிவரவு அல்லது அகதிகள் கொள்கை ஒன்று இல்லாதிருப்பதைப் பற்றியதுமாகும். சுமார் 1.08 இலட்சம் திபெத்தியர்கள் மற்றும் 18 ஆயிரம் றொஹிங்கியாக்கள் உட்பட 2.25 இலட்சம் அகதிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்.  வேறு காரணிகளுடன் சேர்த்து கொள்கையொன்று இல்லாதமையும்  போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள்கடந்துவிட்டபோதிலும் கூட இலங்கை அகதிகள் தன்னிச்சையாக நாடுதிரும்பிச் செல்கின்றமை மிகவும் மந்தகதியில் இடம்பெறுவதற்கு பங்களிப்புச் செய்திருக்கின்றது.

 அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

முகாமில் உள்ளவர்களில் 60 சதவீதமானவர்கள் ( வயதுக்குவராத 90 சதவீதமானவர்கள் உட்பட) தமிழ்நாட்டில் பிறந்தவர்களே.இளம் அகதிகள்  உயர்கல்வியைத் (மருத்துவத்துறையைத்தவிர) தொடருவதற்கான பல வாய்ப்புகள் இருக்கின்ற போதிலும், முக்கியமான கம்பனிகள் அகதிகளை வேலைக்கு அமர்த்தத் தயங்குவதால், பரீட்சைகளில் சித்தியடைந்து தகுதிபெற்றவர்களினால் நிலையான தொழில்வாய்ப்பைப் பெறமுடியாமல் இருக்கிறது.வேறு நாடுகளில் தொழில் தேடுவதற்கு இந்த அகதிகளுக்கு இலங்கைக்  கடவுச்சீட்டுகள் தேவை. அவற்றை அந்த நாட்டில் மாத்திரமே அவர்களால் பெறமுடியும். அந்த காரியம் எல்லாம் பெரும் சிக்கலானவை என்று உணரும் சில அகதிகள் சட்டவிரோதமாக தமிழ்நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்தார்கள்.அத்தகைய முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிவடைந்தன.

இதுதவிர, இளம் அகதிகளை அச்சுறுத்தும் வேறு பிரச்சினைகள் சிலவும் இருக்கின்றன. எந்த நாட்டுக்கு அவர்கள் சொந்தமானவர்கள் ; இலங்கைக்கா அல்லது இந்தியாவுக்கா ? அவர்கள் பிறந்து வளர்ந்து கல்விகற்று பிறகு திருமணஞ்செய்த நாடு அவர்களுடையதல்ல. அப்படியானால் அவர்களது நிலையான வாழ்விடம் அல்லது தாயகம் எது? தங்களது பெற்றோர் சொல்லும்போது மாத்திரம் கேள்விப்பட்ட நாட்டை தங்களது சொந்தநாடு என்று அவர்கள் கருதவேண்டுமா?

 

ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை அகதிகளின் விவகாரம் அசாதாரணமானது.ஏனென்றால் 1955 குடியுரிமைச் சட்டத்தை திருத்துவதற்கு இவ்வருட ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தின் வீச்செல்லைக்குள் அவர்கள் உள்ளடக்கப்படவில்லை.பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும்ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகளே அதில் உள்ளடக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த குடியுரிமை திருத்தச் சட்டமூலம் தவணை கடந்துவிட்டது.ஆனால், அதை மீண்டும் சமர்ப்பித்து  நிறைவேற்றுவதில் பாராளுமன்றம் உறுதியாக இருக்கிறது.

இலங்கைக்கு திரும்பிச்செல்லுதல் 

தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு இலங்கை அகதியும் இந்திய குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் அக்கறை கொண்டிருக்கவில்லை.பலர் இலங்கைக்கு திரும்பிச்செல்வதற்கே விரும்புகிறார்கள். இலங்கையின் பொருளாதாரநிலை, அங்கு வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமை,  தரமான கல்வியைப்பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பில்  ஐயுறவுகள் இருந்தாலும் கூட சிலர் திரும்பிச் செல்வதற்கு தீர்மானித்துவிட்டார்கள்.இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் காரணமாக  கூடுதல் எண்ணிக்கையில் அகதிகளைத்திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தவேண்டியேற்பட்டது. ஆனாலும்  அது மீண்டும் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது.வடக்கு குறிப்பாக, யாழ்ப்பாணம் மற்று தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மலையகப் பகுதிகள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானவையாக இருப்பது அகதிகள் திரும்பிச்செல்வதை ஊக்கப்படுத்துகின்ற  ஒரு சூழ்நிலையாகும். இலங்கை அரசாங்கத்தின் ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்த விபரங்களின்படி 2011–2018 இல் 7818 அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.இவ்வருடம் 367 அகதிகள் நாடுதிரும்பியதாக தமிழ்நாடு அரசாங்க அதிகாரியொருவர் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.

சுமார் 28,500 அகதிகள் ( சகலரும் முகாம்களில் வாழ்பவர்கள் ) ” நாடற்ற நபர்களாக ” இருக்கிறார்கள் ; 2003 குடியுரிமை ( திருத்தம் ) சட்டம் மற்றும் 2009 குடியுரிமை திருத்த ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் அவர்கள் இலங்கைக் குடியுரிமைக்கு தகுதியுடையவர்கள் என்று சென்னை தளமாகக் கொண்டியங்கும் ஈழ அகதிகளின் புனர்வாழ்வுக்கான அமைப்பின் ஆய்வு ஒன்று கூறுகிறது.

அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் செல்லவேண்டியதற்கான அரசியல் நிர்ப்பந்தங்களும் இருக்கின்றன.  நீண்டகாலப்போரும் அதன் விளைவாக தமிழர்களுக்கு ஏற்பட்ட  பாதகமான குடிப்பரம்பல் நிலைவரமும் இலங்கைப் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுகின்ற தமிழ்ப்  பிரதிநிதிகளின் எண்ணிக்கைப் பலத்தில் நேரடித்தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன.தமிழ் தேசிய கூட்டமைப்பும் இந்திய அரசாங்கமும் அகதிகள் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

அகதிகள் திரும்பிவருவதை விரும்புவதாக இலங்கை கூறியிருக்கிறது.இது விடயத்தில் வெறுமனே அறிவிப்பு மாத்திரம் போதுமானதல்ல. அறிவிப்பைத் தொடர்ந்து நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும். தமிழகத்தில் இருக்கும் அகதிகளுக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாக எவரும் குடியேறாதிருப்பதை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நிருவாகங்கள் உறுதிசெய்யவேண்டும்.

இரு நாடுகளினதும் அரசாங்கங்களும்தமிழ்நாடு மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அதிகாரிகளின் உதவியுடன் அகதிகள் தன்னிச்சையாக நாடு திரும்புவதற்கான வழிவகைளைத் திட்டமிடவேண்டும்.இதில் அகதிகளுக்கான உதவித்திட்டமும் உள்ளடங்கவேண்டும்.

இவ்வருட இறுதியில் இலங்கை புதிய ஜனாதிபதியொருவரை தெரிவுசெய்யும்போது பெருமளவில் அகதிகள் தங்கள் விருப்பத்தின்பேரில் நாடு  திரும்பிவருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு இந்தியாவும் இலங்கையும் முன்னேற்றபாட்டுப் பணிகளைச் செய்யவேண்டும்.அகதிகளின் பிரச்சினை மனிதாபிமானத்துடன் கையாளப்படவேண்டும் என்பதை இரு நாட்டு அரசாங்கங்களும் மனதிற்கொள்ளவேண்டும். பலவந்தத்தை பிரயோகிப்பதற்கான எந்தவிதமான சாத்தியப்பாடும் இருக்கக்கூடாது.

தி.ராமகிருஷ்ணன்