வெளிநாட்டுக்கு விடுமுறையில் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஈழ பின்னணி கொண்ட தமிழ்ப்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததாக நம்பப்படுகிறது.
கடந்த திங்களன்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தாக்குதலை மேற்கொண்டவர் என்று கூறப்படும் குறிப்பிட்ட பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற பின்னர் கணவரே பொலிஸாரை அழைத்தார் என்று குயின்ஸ்லாந்து காவல் துறையினர் கூறியுள்ளார்கள்.
தேவகி என்ற 52 வயது குடும்பப்பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் குயின்ஸ்லாந்து Springfield Lakes பகுதியில் தனது கணவருடன் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவந்தவர் என்றும் கூறப்படுகிறது.
சமூகத்தொண்டுகளை மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமுடையவர் என்று கூறப்படும் தேவகி பழகுவதற்கு இனிமையானவர் என்றும் நற்பண்புகள் நிறைந்தவர் என்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் இவர்கள் இருவரும் தம்பதியினராக தென்கிழக்கு ஆசிய நாடொன்றுக்கு விடுமுறை சென்று திரும்பியிருந்தார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.