சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் எதிர்ப்புகள் வலுவடைந்துள்ள போதிலும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியே ஆக வேண் டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தில் தளர்ச்சியைக் காண முடியவில்லை.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கில் இட்டு தண்டிக்கின்ற நடைமுறை நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மரண தண்டனைக்குப் பதிலாக அந்தக் கைதிகள் ஆயுட்கால சிறைத் தண்டனையை அனுபவித்து வந்துள்ளார்கள். ஜனாதிபதியின் தூக்குத் தண்டனை நிறைவேற்றத் தீர்மானம் இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிவகுத்துள்ளது.
எதிர்ப்புகள் இருந்த போதிலும், மரண தண்டனைக் கைதிகளை – குறிப்பாக போதைப் பொருள் குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை வழங்கப்பட்டவர்களைத் தூக்கில் இட வேண்டும் என்ற பிடிவாதத்தை அவர் கைவிடுவதாகத் தெரியவில்லை.
போதைப்பொருள் குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரைத் தெரிவுசெய்து அவர்களு க்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அதிரடியாக அவர் அறிவித்திருந்தார். மூன்று தினங்களின் பின்னர், ஊடகப் பிரதானிகள் செய்தித்தாள்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது அந்த அறிவிப்பை அவர் நேரடியாகவே அழுத்தி உரைத்திருந்தார்.
போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கான சர்வதேச தினமாகிய ஜூன் 26ஆம் திகதியையொட்டி நடத்தப்பட்ட போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாளாகிய ஜூலை முதலாம் திகதி தனது தீர்மானத்தை மூன்றாம் முறையாக வெளியிட்டுள்ள அவர், தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 1976ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி இலங்கையில் இறுதியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் நீதிமன்றங்களால் மிக மோசமான குற்றச்சாட்டு வழக்குகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தூக்கிலிடப்படவில்லை. மாறாக அந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு அந்தக் கைதிகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார்கள்.
ஏன் தூக்கில் இட வேண்டும்….?
இவ்வாறு ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்டவர்கள் மரண தண்டனைக் கைதிகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள். இவர்களில் போதைப்பொருள் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நான்கு பேரைத் தெரிவு செய்து, அவர்களையே தூக்கில் இடுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
போதைப்பொருள் கடத்தல், போதைப் பொருள் விநியோகம், போதைப்பொருள் விற்பனை போன்ற போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே தூக்குத் தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு.
பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட இலட்சக் கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையைக் காவு கொள்ளும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், தேசத்தின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்குமே போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் பாவனையின் காரணமாக பெருமளவிலான பெண்கள் உட்பட வருடாந்தம் 50 ஆயிரம் பேர் சிறைக்குச் செல்கின்றார்கள். சர்வதேச பாடசாலைகள் தொடக்கம் அரசாங்கப் பாடசாலைகள் வரையிலான பாட சாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை வேகமாக அதிகரித்து வருகின்றது. விசேடமாக பல்கலைக்கழகங்களில் இது இடம்பெற்று வருகின்றது.
போதைப்பொருள் பாவனையில் மாணவர்களுக்கு போதைப்பொருள் கும்பல்கள் இலவச பயிற்சியளிக்கின்றன. இனத்தை அழிப்பதற்கு போதைப்பொருள் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. எனவே போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதி மைத்திரிபாலவின் நியாயப்பாடாகும்.
ஆனால், போதைப்பொருள் குற்றவாளிகளைத் தூக்கில் இட்டு தண்டிக்க வேண்டும் என்ற அவரது கொடூரமான அதிரடி அறிவிப்பு, சர்வதேச நாடுகளையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளையும் அதிர்ச்சியடையச் செய்திருந்தது. தூக்கிலிட்டு கொல்லுகின்ற மரண தண்டனை நிறைவேற்றத்தை சர்வதேச நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அது அப்பட்டமான மனித உரிமை மீறல் எனச் சாடியுள்ளன. உள்ளூர் மட்டத்திலும் இது விடயத்தில் அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைவிட வேண்டும் என பிரிட்டன், கனடா, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன. தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி, உலக நாடுகளின் தண்டனை நிறைவேற்ற நடைமுறைக்கு முரணானது என அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எச்சரிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தத் தீர்மானம், பொருளாதார ஏற்றுமதி, உல்லாசப் பயணத்துறை, சர்வதேச தரத்திலான மனித உரிமைகளைப் பேணுதல், போன்ற பல்வேறு அம்சங்களில் சர்வதேசத்தின் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு இலங்கையைத் தள்ளியுள்ளது. போதைப்பொருள் குற்றச் செயல்களுக்காக நான்கு மரண தண்டனைக் கைதிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்த அன்றைய தினமே, அத்தகைய தண்டனை நடவடிக்கை சட்ட விரோதமானது என்று சர்வதேச மன்னிப்புச் சபை கடும் தொனியில் அறிக்கை வெளியிட்டிருந்தது.
சர்வதேச கொலைக்குற்றத்தைப் போன்று போதைப்பொருள் குற்றச் செயலை அதி தீவிரமான குற்றச்செயலாகக் கொள்ள முடியாது என்றும், அதற்கான தூக்குத் தண்டனையை சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு அமைய வரையறை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
தூக்குத் தண்டனை நடைமுறைப்படுத்தப்படுமானால், பயங்கரவாத எதிர்ப்புச் செயற்பாடுகள், கொள்கை வகுத்தல் போன்ற தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்ட விடயங்களில் இலங்கையுடன் ஒத்துழைப்பது தவிர்க்க முடியாத வகையில் கடினமானதாக இருக்கும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, தூக் கில் இட்டு தண்டனை நிறைவேற்றப்படுமானால் இலங்கை விடயத்தில் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று பிரித்தானியா கூறியுள்ளது.
அத்துடன் மரணதண்டனையை நிறைவேற்றுவதில்லை என்ற கொள்கையில் தலைகீழான மாற்றம் ஏற்படுமானால், இலங்கையின் சர்வதேச நிலைப்பாட்டுக்கும், சுற்றுலாத் தலம் என்ற அதன் கீர்த்தியின் ஊடான வர்த்தக மைய வளர்ச்சிக்கும் பெரும் பின்னடைவே ஏற்படும் என்றும் பிரித்தானியா எச்சரித்துள்ளது. முன்னைய ஆட்சிக் காலத்தின் மனித உரிமை மீறல்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைகளை கடுமையான போராட்டத்தின் பின்னர் கடந்த வருடமே அரசு மீண்டும் பெற்றிருந்தது. வரிச்சலுகைகள் நிறுத்தப்பட்டிருந்ததால் 500க்கும் மேற்பட்ட உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் நாடு பெரும் முட்டுக்கட்டைக்கு முகம் கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தூக்குத் தண்டனை மீண்டும் கொண்டுவரப்படுமேயானால், அது உலகத்துக்குத் தவறான சமிக்ஞையையே கொண்டு செல்லும். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பிலான பொறுப்புகளில் சர்வதேச கடப்பாடுகளை அர்த்தமுள்ள வகையில் செயற்படுத்துவதைத் தொடர்ந்து கண்காணிப்போம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைகளை நிறுத்த வேண்டி இருக்கும் என்ற எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகள்
இதனையடுத்து, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான காரணம் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸுக்கு தொலைபேசி வழியாக விளக்கமளித்துள்ளதாகக் கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தீர்மானத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் போதைப்பொருள் கடத்தல்களும், விநியோகமும் அதிகரித்துள்ளன. கடல்வழியாக கேரளக் கஞ்சாவும், ஆகாய மார்க்கமாக அபின் உள்ளிட்ட பயங்கர விளைவுகளை ஏற்படுத்த வல்ல போதைப்பொருட்களும் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டிருக்கின்றன. பெரும் கொள்கலன்களில் பெரும் தொகையில் கடத்தி வரப்பட்ட இந்தப் போதைப்பொருட்கள் அதிகாரிகளால் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
அதேபோன்று பெரும் தொகையான கேரள கஞ்சா கடத்தல்கள் இடம்பெறுவதையும் பொலிஸாரும், அதிகாரிகளும் கண்டுபிடித்த வண்ணம் இருக்கின்றனர். ஆனால் இந்த போதைப்பொருட்கள் யாரால், எங்கிருந்து கடத்தி வரப்படுகின்றன, எங்கு கொண்டு செல்லப்படுகின்றன, இதன் பின்னணியில் இருந்து செயற்படுவது யார், எத்தகைய செல்வாக்குடன் அந்தச் செயற்பாடுகள் என்ன வகையில் இடம்பெறுகின்றன என்பது பற்றிய விபரங்களை பொலிஸாரோ அல்லது போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்காகச் செயற்படுகின்ற அதிகாரிகளோ இதுவரையில் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை.
போதைப்பொருள் பாவனை, போதைப் பொருள் கடத்தல், விற்பனை போன்ற குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சாதாரண குற்றவியல் சட்டங்கள் தொடக்கம் சிறப்புச் சட்டங்களை சம்பந்தப்பட்டவர்களும், உரிய அதிகாரிகளும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தாத நிலைமையே போதைப்பொருள் குற்றச் செயல்கள் அதிகரிக்க முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது.
இந்த நிலையில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் குற்றக் கைதிகளை தூக்கிலிட்டுத் தண்டிக்கின்ற ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக உள்ளூர் மனித உரிமை அமைப்புகள், சட்டத்தரணிகள், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் மரண தண்டனைக் கைதிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் நீதிமன்றத்தில் சுமார் பத்து அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதியின் தீர்மானத்துக்கமைய போதைப் பொருள் குற்றத் தண்டனைக் கைதிகள் நால்வரை, சிறைச்சாலை ஆணையாளரும், வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகரும் தூக்கிலிட்டு தண்டிப்பதைத் தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ள தடை உத்தரவு வழக்கு ஒன்றும் இதில் அடங்கும். ஊடகவியலாளர் மலிந்த செனிவிரட்ன தாக்கல் செய்துள்ள இந்த ரிட் மனுவை விசாரிப்பதற்கென மேன்முறையீட்டு நீதிமன்றம் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் ஒன்றை நியமித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரலாறு
இலங்கையின் மரண தண்டனை நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஆங்கிலேயர்கள் இலங்கையைக் கைப்பற்றியதையடுத்து, அரசனுக்கு எதிராக போர் புரிபவர்களுக்கே தூக்குத் தண்டனை என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தார்கள். நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்ததையடுத்து, 1956 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அந்தத் தண்டனை முறைமையை இல்லாமல் செய்தார்.
ஆயினும் தூக்குத் தண்டனையை இல்லாமல் செய்த அவரே கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூன்று வருடங்களின் பின்னர் அது மீண்டும் நடைமுறைக்கு வந்தது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 1978 ஆம் ஆண்டு கொண்டு வந்த புதிய அரசியலமைப்பில் தீவிர குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், மரண தண்டனை வழங்கிய நீதிபதி, சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகிய மூவரும் இணைந்து உறுதிப்படுத்தினால் மட்டுமே, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நியதி உருவாக்கப்பட்டது. இந்த மூவரும் ஏகமனதாகத் தீர்மானிக்காவிட்டால் மரணதண்டனை ஆயுள் தண் டனையாக மாற்றப்பட்டு குற்றவாளி தண் டனை அனுபவிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. இந்த வகையில் 1976ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி இறுதியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்புணர்வு, கொலை, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்ததையடுத்து, தடையற்ற விதத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு அது பொது விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது. ஏற்கனவே தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டிருந்த நிலையில் 2018ஆம் ஆண்டு, போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான உத்தரவில் கையெழுத்து இடுவதற்குத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே நான்கு மரண தண்டனை பெற்ற கைதிகளை தூக்கில் இடுவதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் குற்றச் செயல்களில் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 18 பேர் தூக்குத் தண்டனைக்குரியவர்களாகத் தெரிவு செய்யப்பட்டு சட்டமா அதிபரால் பெயர்ப்பட்டியல் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் 8 பேர் தமிழர்கள், 8 பேர் முஸ்லிம்கள், 2 பேர் சிங்களவர்கள் ஆவர். இவர்களில் முதல் கட்டமாக 2 சிங்களவர்கள், ஒரு தமிழர், ஒரு முஸ்லிம் ஆகிய நான்கு பேருக்கே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றச்செயலுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ள போதிலும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஜனாதிபதியாகிய தனக்கு மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஆயினும் மேன்முறையீட்டையடுத்து, தண்டனை பெறுபவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுமா அல்லது தூக்குத் தண்டனை தவிர்க்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படுமா என்பது பற்றிய விபரத்தை அவர் வெளியிடவில்லை.
தூக்கில் இடுவது குற்றச் செயல்களைக் குறைக்குமா…?
ஆனால் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால், அதன் எதிர்வினையாக சர்வதேசத்திடம் இருந்து பல்வேறு பாதிப்புகள் இலங்கைக்கு ஏற்படும் என்று விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை இலகுவான விடயமாகப் புறந்தள்ளி விட முடியாது.
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுமானால், போதைப்பொருள் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, யுஎன்ஓடிசி எனப்படும் ஐக்கிய நாடுகளின் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல்களுக்கான ஐ.நா. அலுவலகத்தின் சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் தொடர்பிலான குற்றச் செயல்கள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒத்துழைப்பையும் உதவியையும் பெற முடியாத நிலைமை இலங்கைக்கு உருவாகும். ஏனெனில் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துகின்ற நாடுகளுடன் யுஎன்ஓடிசி தொடர்புகளையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதில்லை என்ற கொள்கையை இறுக்கமாகக் கடைப்பிடித்து வருவதே இதற்கு முக்கிய காரணமாகும். இந்த நிலையில் ஐ.நா. போன்ற சர்வதேச வலையமைப்பையும் வலிமையையும் கொண்ட அமைப்பின் உதவியின்றி போதைப்பொருள் தொடர்பிலான குற்றச் செயல்களை இலங்கையினால் முடிவுக்குக் கொண்டு வர முடியுமா என்பது சந்தேகமே.
அதேவேளை, குற்றவாளிகளைத் தூக் கில் இடுவதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்பது சர்வ தேசத்தினதும், துறைசார்ந்த நிபுணர்களி னதும் கருத்தாகும். இந்த நிலையில் தேர்தல் அரசியல் இலாபத்தைக் கருத்திற் கொண்டே போதைப் பொருள் குற்றத்துக்கான மரண தண்டனைக் கைதிகளைத் தண்டிப்பதற்காக தூக்கிலிடுவதை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன தீர்மானித்து, அதில் பிடி வாதமாக இருப்பதாகக் கருதப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கொள்கை ரீதியில் ஆதரிப்பவர்களே தூக்குத் தண்டனை உத்தரவை எதிர்க்கின்றார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். அதேவேளை, ஜி.எஸ்.பி. வரிச்சலுகை வழங்கப்பட மாட் டாது என்று அச்சுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு இலங்கையின் இறைமைக்குள் தலையீடு செய்கின்ற நடவடிக்கையாகும் என்றும் சாடியுள்ளார்.
நாட்டின் பொது அமைதியை சீர்குலைத்து, இனங்களுக்கிடையில் குரோதத்தையும் பகை உணர்வையும் ஊட்டுகின்ற பல செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டி ருக்கின்ற ஒரு சூழலில் போதைப்பொருள் குற்றத்துக்கான மரணதண்டனைக் கைதிக ளைத் தூக்கிலிட்டுத் தண்டிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் பிடிவாதச் செயற்பாடு சர்வதேச மற்றும் உள்ளக அரசியல் நிலை மைகளில் பெரும் பாதிப்பையே ஏற்படுத் தும் என்பதில் சந்தேகமில்லை.
தேர்தல் ஒன்றை எதிர்கொண்டுள்ள நிலை யில், அவருடைய அரசியல் எதிர்காலம் குறித்த நிலைமைகளிலும், தூக்குத் தண் டனை விவகாரம் செல்வாக்கு செலுத்து வதாகவே அமையும் என்பதிலும் சந்தேக மில்லை.
பி.மாணிக்கவாசகம்