அரசியல் சகதிக்குள் சிக்கித் தத்தளிக்கும் நிலை !

கல்­முனை வடக்கு உப­பி­ர­தேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்­தக்­கோரி நடத்­தப்­பட்ட  உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்டம் கடந்­த­ வாரம் அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்­தி­ருந்­தது.

கடந்த திங்கள்(17) முதல் ஞாயிறு (23) ஏழு தினங்கள் சாகும்­வரை உண்­ணா­வி­ர­த­மி­ருந்த கல்­முனை சுபத்ரா ராமய விகா­ரா­தி­பதி வண.ரண்­முத்­து­கல சங்­க­ரத்ன தேரர் கிழக்­கி­லங்கை இந்­து ­கு­ருமார் ஒன்­றியத் தலை­வரும் கல்­முனை முருகன் ஆலய பிர­தம குரு­வு­மான சிவஸ்ரீ க.கு.சச்­சி­தா­னந்த சிவக்­கு­ருக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கல்­முனை மாந­க­ர­சபை உறுப்­பி­னர்­க­ளான சந்­தி­ர­சே­கரம் ராஜன், அழ­கக்கோன் விஜ­ய­ரெத்­தினம் அனைத்து இந்து ஆல­யங்­களின் ஒன்­றி­யத்­த­லை­வரும் தொழி­ல­தி­ப­ரு­மான  கிருஸ்­ண­பிள்ளை லிங்­கேஸ்­வரன் ஆகியோர் இதில் பங்­கேற்­றனர்.

தீர்வு?

இப்­போ­ராட்டம் ஒரு­வ­கையில் நீண்­ட­கா­ல­பி­ரச்­சி­னையை மக்­கள் ­ம­யப்­ப­டுத்தி ஜன­ரஞ்­ச­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. பிர­தமர் அனுப்­பிய அமைச்சர் குழாம் 3மாத­கால அவ­கா­சத்­தைக்­கோ­ரிய அதே­வேளை வண.ஞான­சார தேரர் ஒரு மாத­கால அவ­கா­சத்தைக் கோரினார்.  7ஆவது நாள் உண்­ணா­வி­ரதம் கைவி­டப்­பட்­டது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மைக்கு(25) முதல் அங்­கொரு கணக்­காளர் நிய­மிக்­கப்­ப­டுவார் என எழுத்­து­மூல உள்­ளூ­ராட்­சி­ அ­மைச்­சரின் அறி­விப்பு வெளி­யா­கி­யி­ருந்தும் அன்று நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

எனவே மீண்டும் குழுவை நிய­மித்து காலத்­தைக்­க­டத்தி மீண்டும் இதனை இழுத்­த­டித்­து ­வி­டு­வார்­களோ என்ற ஜயப்­பாடு கல்­முனை தமிழ் மக்கள் மத்­தியில் தற்­போது பர­வ­லாக எழுந்­துள்­ளதைக் காணக்­கூ­டி­ய­தா­யுள்­ளது.

கல்­முனை வடக்­கிற்­கான போராட்ட வர­லாறு

கல்­முனை வடக்குப் பிர­தேச செய­ல­கத்­திற்­கான  போராட்டம் நடத்­தப்­ப­டு­வது இது முதற்­த­ட­வை­யல்ல. உண்­மையில் கடந்­த­கா­லங்­களில் 3 தட­வைகள் ஏலவே போராட்­டங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

முதல் போராட்­டத்­திற்­கான காரணம் என்­ன­வெனில் , 1988இல் ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் அப்­போ­தைய பாது­காப்பு அமைச்சர் ரஞ்சன் விஜே­ரத்னா கல்­மு­னைக்கு விஜயம் செய்­தி­ருந்தார்.

அந்­த­வே­ளையில், அம்­பாறை மாவட்ட தமிழர் மகா­சங்­கத்தின்  தலை­வ­ரா­க­வி­ருந்த சின்­னத்­துரை நாவி­தன்­வெளி பிர­தே­ச­சபைத் தவி­சாளர்) அப்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரங்­க­நா­யகி பத்­ம­நா­தனின் உத­வி­யுடன் அமைச்சர் ரஞ்­ச­னிடம் கல்­முனை தமிழ் உதவி அர­ச­அ­திபர் பிரிவு தொடர்­பான கோரிக்­கையை முன்­வைத்தார்.

அன்­றி­ருந்த உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் கே.டபிள்யூ.தேவ­நா­ய­கத்­திடம் இக்­கோ­ரிக்கை சென்­ற­டைந்­ததும் அவர் நட­வ­டிக்கை எடுத்து அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதி­ப­ரிடம் உட­ன­டி­யாக கல்­மு­னையில் சுற்­றுலா அலு­வ­ல­கத்தை  நிறு­வு­மாறு உத்­த­ர­விட்டார்.

ஆனால், இது அமு­லுக்கு வர­வில்லை எது­வுமே நடக்­க­வில்லை இதுவே முத­லா­வது போராட்­டத்­திற்­கான அடித்­தளம்.

முத­லா­வது போராட்டம்

1989இல் பொதுத்­தேர்தல் முடிந்த கையோடு அம்­பாறை மாவட்ட தமிழர் மகா­சங்க துணைத்­த­லைவர் பாண்­டி­யூரான் தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சத்­தியாக்கிரகப் போராட்டம்

முத­லா­வது போராட்­ட­மாகும்.

இந்த சாத்­வீக வழி­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­தை­ய­டுத்து அப்­போ­தைய பொது­நி­ரு­வாக அமைச்சர் யு.பி.விஜேகோன் அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும்

( தயா­ரத்னா அஸ்ரப் கலப்­பதி திவ்­வி­ய­நாதன் போன்றோர்) த.வி.கூ.தலைவர் அ.அமிர்­த­லிங்­கத்­தையும் அழைத்து கொழும்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.

அங்கு எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தின்­படி 1989.4.12இல் கல்­முனை வடக்­கிற்­கான உப அலு­வ­லகம் திறக்­கப்­பட்­டது.

இரண்­டா­வது போராட்டம் 2000இல்..

அதனைத் தர­மு­யர்த்த வேண்­டு­மெ­னக்­கோரி 2000.03.20இல் கல்­மு­னை­யி­லுள்ள 50தமிழர் பொது­நல அமைப்­புகள் இணைந்து உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தது. இதில் சுமார் 1500மக்கள் கலந்­து­கொண்­டனர்.

தமிழர் மகா­சங்­கத்தின் தலைவர் கே.சுப்­பி­ர­ம­ணியம், செய­லாளர் சிவஸ்ரீ சிவ­ஞா­ன­செல்­வக்­கு­ருக்கள், த.மகேஸ்­வரன், கல்­முனை சுபத்­ரா­ரா­மய விகா­ரா­தி­பதி வண.மிதி­சேன மகா­நாம காசு­பதி, தெய்­வ­நா­யகம் அன்­னம்மா, லோக­நாதன் சுனில் போன்ற பல முக்­கிய பிர­மு­கர்கள் உண்­ணா­வி­ர­தத்தில் கலந்­து­கொண்­டனர்.

அன்று மாலை த.வி.கூட்­ட­ணியின் மாவை­சே­னா­தி­ராஜா , ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவா­னந்தா , வடக்கு கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் வர­த­ரா­ஜப்­பெ­ருமாள், மாகா­ண­சபை உறுப்­பினர் இரா.துரை­ரத்னம் ஆகியோர் வழங்­கிய உறு­தி­மொ­ழி­யின்­பேரில் அன்றே அது முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

3 ஆம் கட்­டப்­போ­ராட்டம்

அந்த உறு­தி­மொழி நிறை­வேற்­றப்­ப­டா­த­மை­யினால் மீண்டும் 2001.1.24   இல்  கல்­மு­னை­யி­லுள்ள கிராம அபி­வி­ருத்திச் சங்­கங்கள் இணைந்து உண்­ணா­வி­ரதப் போராட்­ட­மொன்றை முன்­னெ­டுத்­தன. அது உக்­கி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­ட­வேளை ஏழாம் நாள் 31.01.2001இல் மட்டு.மாவட்ட த. வி.கூ. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொன்.செல்­வ­ராஜா உரிய தீர்­வைத்தான் பெற்­றுத் ­த­ரு­வ­தாக உறு­தி­ய­ளித்­த­மையைத் தொடர்ந்து அவ்­வுண்­ணா­வி­ரதம் கைவி­டப்­பட்­டது.

கல்­முனை வடக்கு உப­செ­ய­ல­கமா? பிர­தே­ச­ செ­ய­ல­கமா?

தற்­போது பேசு­பொ­ரு­ளா­க­வி­ருக்­கின்ற நிரு­வாக அலகு பிர­தேச செய­ல­கமா? அல்­லது உப பிர­தே­ச­ செ­ய­ல­கமா? கல்­முனை வடக்கு உப­பி­ர­தேச செய­ல­கமா? கல்­முனை தமிழ் உப­பி­ர­தேச செய­ல­கமா? கல்­முனை வடக்கு தமிழ் உப பிர­தேச செய­ல­கமா? என்­பதில் பல­ருக்கு மயக்­க­மி­ருக்­கி­றது.

ஏனெனில் கடந்த ஒரு ­வா­ர­கா­லப் ­ப­கு­தியில் உண்­ணா­வி­ர­தத்­தின்­போது வரு­கை­தந்த அர­சி­யல்­வா­திகள் முதல் ஊட­கர்கள் வரை இவ்­விரு சொற்­றொ­டர்­க­ளையும் பர­வ­லாக பாவித்து வந்­தி­ருக்­கின்­றனர்.

உண்­மையில் 12.04.1989 இல் உரு­வான கல்­முனை வடக்கு (தமிழ்) உப பிர­தேச செய­லகம் என்­பது முன்னாள் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் காலஞ்­சென்ற கே. டபிள்யூ தேவநா­யகம்  அப்­போ­தைய அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதி­ப­ருக்கு வழங்­கிய பணிப்­பு­ரையின் படியும் பின்னர் 1989 பெப்­ர­வரி பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­தலின் பின்னர் இது விட­ய­மாக முன்னாள் பொது நிரு­வாக உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் யூ. பி. விஜ­ய­கோனின் ஏற்­பாட்டில் அம்­பாறை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் நடை­பெற்ற கலந்­து­ரை­யாடல் கூட்டத் தீர்­மா­னத்­தின்­ப­டி­யுமே உரு­வாக்­கப்­பட்­டது.

பின்னர் 1993 இல் அமைச்­ச­ரவைத்  தீர்­மா­னத்­தின்­படி நாட­ளா­விய ரீதியில் இரு­பத்­தி­யெட்டு உப­பி­ர­தேச செய­ல­கங்கள் தர­மு­யர்த்­தப்­பெற்ற போது கல்­முனைத் தமிழ்ப் பிரிவும் அதில் ஒன்­றாக அமைந்­தது. ஆனால், 1993இல் ஏனைய இரு­பத்­தி­யேழு உப­பி­ர­தேச செய­ல­கங்­களும் தர­மு­யர்த்தப் பெற்­ற­போது கல்­முனை வடக்கு மட்டும் புறக்­க­ணிக்­கப்­பட்­டது.

இதுவே நடந்த உண்­மை­யாகும். இப்­ப­டி­யி­ருக்­கும்­போது முப்­பது வரு­டங்­களும் கழிந்த பின்னர் இப்­பி­ர­தேச செய­ல­கத்தின் உரு­வாக்கம் சட்­ட­வி­ரோ­த­மா­னது என கூறு­வது ‘மதி­யீனம்’   என தமிழ்த் தரப்­பினர் கூறு­கின்­றனர்.

அப்­ப­டி­யானால் முன்னாள் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் கே.டபிள்யூ தேவ­நா­ய­கத்தின் பணிப்­பு­ரையும் முன்னாள் பொது நிரு­வாக உள்­நாட்டு அமைச்சர் யூ. பி. விஜ­ய­கோனின் ஏற்­பாட்டில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னமும் பின்னர் 1993 இல் அமைச்­ச­ரவை மேற்­கொண்ட தீர்­மா­னமும் சட்ட விரோ­த­மா­ன­வையா? என்றும் நோக்­கர்கள் வின­வு­கின்­றனர்.

எனவே இச்­செ­ய­ல­கத்தை காணி மற்றும் நிதி­அ­தி­கா­ர­மிக்­க­தான முழு­ அ­தி­கா­ர­மு­டைய பிர­தே­ச ­செ­ய­ல­க­மாக மாற்றி தர­மு­யர்த்­தி­த­ர­ வேண்டும் என்­ பது தமிழ் ­மக்­களின் கோரிக்­கை­யாகும்.

அண்­மையில் உண்­ணா­வி­ர­தத்­திற்கு வந்த சுமந்­திரன் எம்.பி கூட இது என்றோ தர­மு­யர்த்­தப்­பட்­டு­ விட்­டது.  அதை தர­மு­யர்த்­த­ வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஆக காணி, நிதி அதி­காரம் மட்­டுமே வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று பேசி­யி­ருந்தார்.

அப்­ப­டி­யெனின், பிர­தேச செய­ல­க­மாக எப்­போது தர­மு­யர்த்­தப்­பட்­டது? சரி அப்­படித் தர­மு­யர்த்­தி­யி­ருந்தால் ஏன் காணி மற்றும் நிதி அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை? மேலும் கூறப்­போனால் தர­மு­யர்த்­தித்­த­ரும்­படி இந்த சாகும்­வரை உண்­ணா­வி­ரதப் போராட்டம் எதற்கு?  என்­றெல்லாம் கேள்­விகள் எழ­லா­மல்­லவா.

ஆரம்­பத்தில் தமிழ் உப­பி­ர­தேச செயல­கம் என்று அழைக்­கப்­பட்­டு­ வந்த இவ்­வ­லகு பின்னர் வடக்கு உப அலு­வ­லகம் என அழைக்­கப்­பட்­டது. மூவி­னங்­களும் உள்­ளதால் தமிழ் என்று வராமல் பொது­வான வடக்கு என்ற பெய­ருடன் அழைக்க ஆரம்­பித்­தார்கள்.

ஆக, இது ‘கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லகம்’ என்­பதே சரி­யான சொற்­றொ­ட­ராகும்.  ஏனெனில் எந்தக் கால­கட்­டத்­திலும் இது பிர­தேச செய­ல­க­மாக தர­மு­யர்த்­தப்­ப­ட­வில்­லை­யென்­பது கசப்­பான உண்மை.

தமி­ழ­ருக்கு மட்­டு­மான செய­ல­கமா?  

இது தனித்­தமிழ் செய­ல­க­மல்ல.  இதற்குள் தமி­ழர்கள், முஸ்­லிம்கள், சிங்­க­ள­வர்கள் வரு­கி­றார்கள். எனவே மூவி­னத்­திற்கும் சொந்­த­மான செய­லகம் எனக்­கூ­றப்­ப­டு­கி­றது. 9,798குடும்­பங்­களைச் சேர்ந்த  36,346சனத்­தொ­கையைக் கொண்­டது.

இதற்குள் 33,007தமிழ்­மக்­களும் 3,215முஸ்­லிம் ­மக்­களும் 124 சிங்­கள மக்­க­ளு­முள்­ளனர்.   மேலும் இவை நிலத்­தொ­டர்­புள்­ள ­வ­கையில் உள்­ளன என்றும் வரை­படம் சுட்­டு­கின்­றது. ஆக 15.77 சது­ர­மீற்றர் பரப்­ப­ள­வைக்­கொண்ட இவ்­வ­டக்கு பிர­தேசம் மத­ அ­டிப்­ப­டையில் பார்த்தால் இந்­துக்கள் 30,205பேரும் இஸ்­லா­மி­யர்கள் 3,215பேரும் கிறிஸ்­த­வர்கள் 2,802பேரும் 124பௌத்­தர்­களும் உள்­ளனர்.   இந்­து ­ஆ­ல­யங்கள் 45 உள்­ளன. கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் 12 உம் பள்­ளி­வா­சல்கள் 3உம் பௌத்த விகா­ரை­யொன்றும் உள்­ளன.

இவ்­வாறு 12.04.1989 இல் ஏற்­ப­டுத்­தப்­பெற்ற கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­ல­கம்தான் இன்­று­வரை கடந்த முப்­பது வரு­ட­கா­ல­மாகப் பெய­ர­ளவில் 29 தமிழ்ப் பெரும்­பான்மைக் கிரா­ம­ சே­வ­ கர்­க­ளுடன் இயங்கிக் கொண்­டி­ருக்­கி­றது.

முஸ்­லிம்­த­ரப்பு வாதம்

இதே­வேளை, முஸ்லிம் தரப்­பினர் கடந்த 30வரு­ட­கா­ல­மாக இக்­கோ­ரிக்­கைக்குத் தடை­யாக இருந்­து­ வ­ரு­கின்­றார்கள் என்­பது வெளிப்­ப­டை­யாகக் கூறப்­பட்­டது. அதற்கு அண்­மையில் நடந்த முஸ்­லிம்­களின் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டமும் சாட்­சி­யா­க­வுள்­ளது.

அவர்­க­ளது பார்­வையில் இது நிலத்­தொ­டர்­பற்­றதும் இன­ரீ­தி­யா­ன­து­மாகும் என்­பது பிர­தான குற்­றச்­சாட்­டாகும். எம்­முடன் பேசாமல் கல்­முனை நகரை தானாக கைப்­பற்ற நினைக்­கி­றார்கள் என்று கரு­து­கி­றார்கள்.

கல்­முனை மாந­கரம் எங்­க­ளு­டை­யது.  காலா­கா­ல­மாக தாங்­கள்தான் வர்த்­தகம் செய்­து­வ­ரு­கிறோம். எனவே அது எமக்­குத் தான் சொந்தம்.  எனவே அதனை விட்­டுக்­கொ­டுக்­க­மு­டி­யாது என்­பதும் ஒரு வாதம்.

எனவே அத­னைப்­பேசித் தீர்க்­க­வேண்டும் என்று அவர்கள் கூறு­கி­றார்கள்.

கல்­முனை நகர் ?

கல்­முனை நகர் 1892இல் 100வீதம் தமி­ழர்­க­ளோடு இருந்­த­தையும்  பின்னர் 1946இல் கல்­மு­னைக்­கு­டியை இணைத்து கல்­முனை பட்­டி­ன­ச­பை­யாக மாறி­யது.  எனவே இன்று நிலைமை மாறி­விட்­டது.

மட்­டக்­க­ளப்பு மாந­கரில் முஸ்­லிம்­களின் வர்த்­தக மையங்கள் இருக்­கின்­றன. ஹோட்­டல்கள், ஹார்ட்­வெ­யார்கள், புடைவைக் கடைகள்  இப்­ப­டிப் ­பல உள்­ளன. அதற்­காக அவற்றை காத்­தான்­குடி நக­ர­ச­பைக்குச் சொந்தம் அல்­லது எமது கடைகள் இருப்­பதால் எமக்­குத்தான் சொந்தம் என்று வாதி­ட­லாமா?    என்று கூறும் தமிழ்த்  தரப்­பினர் யார் கடை வைத்­தாலும் மட்­டக்­க­ளப்பு பிர­தேச செய­ல­கத்தின்  கீழ்தான் அனைத்தும் வரும் என்­கி­றார்கள்.

அதே­போன்று கொழும்பு மாந­கரில் யாரும்­ க­டை­ வைக்­கலாம்.மூவி­னத்­த­வரும் கடை ­வைத்­துள்­ளனர். அதற்­காக கொழும்பு எமக்­கு­ரி­யது என்று சொந்தம் கொண்­டா­ட­லாமா? அது கொழும்பு மாந­கர சபைக்­கு­ரி­யது அந்தப் பிர­தேச செய­ல­கத்­துக்­கு­ரி­யது என்று அர்த்தம் கற்­பிக்­கி­றார்கள் தமிழ்த் தரப்­பினர்.

அதே­போன்­று தான் தர­வைப்­பிள்­ளையார் ஆலயம் தொடக்கம் பெரி­ய ­நீ­லா­வணை வரை கல்­முனை வடக்குப் பிர­தேசம் என்றால் அதற்­குள்­வரும் அத்­த­னையும் அப்­பி­ர­தே­சத்­திற்­கு­ரி­ய­துதான்.

கல்­மு­னையின் பூர்­வீகம்

கல்­மு­னைப்­பட்­டினம் 1892ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க கட்­ட­ளைச் ­சட்­டத்தின் பிர­காரம் சுகா­தார நல­னோம்­பு­சபை(Sanitary Board.- சனிற்­றறி வோட்) என்ற உள்ளூர் அதி­கா­ர­ ச­பை­யாக உரு­வா­னது.

இந்த சபையில் கல்­முனை1, கல்­முனை 2, கல்­முனை 3 ஆகிய 3பிரி­வுகள் உள்­ள­டக்­கப்­பட்­டன. இது முழுக்­க ­மு­ழுக்க தமிழ் மக்­களை மட்டும் கொண்ட அல­காக இருந்­தது.

அப்­போது இச்­ச­பைக்குள் சாய்ந்­த­ம­ருதோ கல்­மு­னைக்­கு­டியோ பாண்­டி­ருப்போ மரு­த­மு­னையோ உள்­ள­டங்­க­வில்லை. ஆக ஆரம்­பத்தில் கல்­முனை என்­பது முற்­று­மு­ழு­தாக 100வீதம் தமி­ழர்­களை மாத்­தி­ரமே கொண்­டது.

பின்பு 1946இல் 3ஆம் இலக்க பட்­டி­ன­சபைச் சட்­டத்தின் பிர­காரம்  ஏல­வே­யி­ருந்த கல்­மு­னை­யுடன் கல்­மு­னைக்­குடி என்ற கிரா­மமும் சேர்க்­கப்­பட்டு அப்­போ­தைய அர­சியல் சக்­தி­களால் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வரக்­கூ­டி­ய­வாறு  பட்­டி­ன­ச­பை­யாக தோற்றம் பெற்­றது.

முதன்­மு­றை­யாக பட்­டி­ன­ச­பை­யாக உரு­வெ­டுத்த கல்­மு­னையில் சாய்ந்­த­ம­ருதோ பாண்­டி­ருப்போ உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்­பதை கருத்­திற்­கொள்ள வேண்டும்.

முழு­கல்­முனைத் தொகு­தி­யையும் உள்­ள­டக்­கி­ய­வாறு கர­வா­குப்­பற்று என்ற இறை­வரி உத்­தி­யோ­கத்தர் பிரிவு அல்லது பிரிவுக்காரியாதிகாரி பிரிவு என்ற (D.R.O.Division) என்ற பிரிவு உருவானது.

இதற்குள் 4 பிரிவுகள் உள்ளடக்கப் பட்டன. இக் கட்டுரையில் முற்பத்தியில் சுட்டிக்காட்டப்பட்ட கல்முனை பட்டினசபையுடன் பாண்டிருப்பு மருதமுனையை உள்ளடக்கிய கரவாகு வடக்கு சாய்ந்தமருதைக் கொண்ட கரவாகு தெற்கு சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனையைக் கொண்ட கரவாகு மேற்கு ஆகிய 3 கிராமசபைகள் இருந்தன.

1946இல் தோற்றம் பெற்ற இந்த 4 சபைகளைக் கொண்ட கரவாகுப்பற்று உதவிஅரசாங்க அதிபர் பிரிவு 1987ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரகாரம் அதுவரை இருந்த பட்டினசபைமுறை ஒழிக்கப்பட்டு பிரதேசசபை முறை தோற்றுவிக்கப்பட்டது. அதன்படி 1987இல் கல்முனை பிரதேசசபை உருவானது.

பின்னர் அது 11.12.1998 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 11.06.1999முதல் நகரசபையாக தர முயர்த்தப்பட்டது. பின்னர் அது 2002.04.15ஆம் திகதியன்று மாநகர சபையாக மாற்றம் பெற்றது.

இந்த மாகரசபை எல்லைக்குள் முன்பிருந்த கரவாகுப்பற்றுக்குரிய 4 சபைகளும் உள்ளன என்பதை குறிப்பிடமுடியும்.

தற்போது அதிலிருந்து தனியாக ஒரு உள்ளூராட்சிசபை வேண்டுமென சாய்ந்தமருது மக்கள் கடந்த சில வருடங்களாக பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதுவும் அரசியல் சகதிக்குள் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

நிருவாக அலகைப் பொறுத்த வரை தற்போது கல்முனை பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேசசெயலகம், கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் என 3பிரிவுகள் இயங்கி வருகின்றன. கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் என்பது காணி நிதி அதிகாரங்களில்லாமல் கடந்த 30வருடகாலமாக இயங்கிவருவதே இன்றைய போராட்டத்திற்கு அடிப்படைக் காரணம்.