பேராசிரியர் விக்னேஸ்வரனின் மனுவை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்!

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், தன்னைப் பதவியிலிருந்து நீக்கயமையை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதிவரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மூத்த அரச சட்டவாதி, மனுவின் அறிவித்தல் நீதிமன்றின் ஊடாகக் கிடைக்கப்பெறவில்லை என மன்றுரைத்ததையடுத்தே விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

தனது துணைவேந்தர் பதவியை நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தவும் தற்போது தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் கந்தசாமியின் நியமனத்தை இடைநிறுத்தி வைக்கவும் இடைக்காலக் கட்டளை ஒன்றை வழங்குமாறு அந்த மனுவில் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் சார்பில் சட்டவாளர் நிறுவனம் ஒன்று இந்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றில் கடந்த மாதம் சமர்ப்பித்தது.

மனுவில் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு இன்று உயர் நீதிமன்ற அமர்வு முன் எடுக்கப்பட்டது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி நிரான் அங்கிட்டல் முன்னிலையானார். பிரதிவாதிகள் சார்பில் மூத்த அரச சட்டவாதி முன்னிலையானார்.

மனுதாரர் சார்பில் இடைக்காலக் கட்டளை கோரப்பட்டது. எனினும் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மூத்த அரச சட்டவாதி, தமக்கு மனுவின் அறிவித்த நீதிமன்றிலிருந்து சேர்ப்பிக்கப்படவில்லை என மன்றுரைத்தார்.

“மனுதாரருக்கான இடைக்காலக் கட்டளை குறுகிய கால எல்லைக்குள் தேவை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் விரைவில் கோரப்படவுள்ளதால், அது மனுதாரரைப் பாதிக்கும். எனவே அடுத்த தவணையை குறுகிய கால எல்லைக்குள் வழங்கவேண்டும்” என்று சட்டத்தரணி நிரான் அங்கிட்டல் மன்றுரைத்தார்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த உயர் நீதிமன்ற அமர்வு, மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதி விலக்கியிருக்கிறார்.

ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் மூலம் மே 5ஆம் திகதி அறிவித்திருந்தார்.

எனினும் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கியமைக்கான காரணங்கள் எதுவும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசுவாமி உயர் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.