சிறிலங்காவில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு இல்லை. சிறிலங்காவுடன் எந்தவொரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலும் அதுசிறிலங்காவின் இறையாண்மைக்கு முழுமையான மதிப்பை வழங்கும் வகையிலேயே மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ‘படைகளின் நிலைப்பாடு’ தொடர்பான உடன்படிக்கையின் கீழ் சிறிலங்காவிடமிருந்து பெருமளவு இராணுவ சலுகைகளை நாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன என்று ஆங்கில பத்திரிகையொன்று வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் மறுப்பு வெளியிட்டுள்ளார்.
குறித்த பத்திரிகைச் செய்தியை மேற்கோள் காட்டி அமெரிக்க தூதுவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளதோடு சிறிலங்காவில் அமெரிக்க இராணுவ தளமொன்றை அமைக்கும் திட்டமோ அல்லது நோக்கமோ இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.