ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆகப் பிந்திய குத்துக் கரணம், 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராகத் தூக்கியிருக்கின்ற போர்க்கொடி தான்.
ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றானாம், என்பது பழமொழி.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று வெளியிட்டிருக்கின்ற கருத்து, அந்தப் பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்னமும் அவ்வப்போது முட்டி மோதிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருக்கு முன்பாகவே இந்தக் கருத்தை முதலில் வெளியிட்டிருந்தார்.
தற்போதைய அரசாங்கம், கடந்த நான்கரை ஆண்டுகளில் சரியாகச் செயற்படாமல் இருந்தால், அதற்குக் காரணம், 19 ஆவது திருத்தச்சட்டம் தான் என்றும், இந்த திருத்தச்சட்டம் கொண்டு வரப்படாமல் இருந்திருந்தால், இன்னும் நன்றாக இந்த அரசாங்கம் செயற்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஜனாதிபதி பதவியில் அவரது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் – அந்தப் பதவியின், அந்தத்தில் வந்து நின்று கொண்டே, இந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருக்கிறார்.
அவர் இவ்வாறு கூறியிருப்பதற்குக் காரணம், இந்த ஆட்சியின் மீதுள்ள வெறுப்புகளில் இருந்து தப்பிப்பதும், தன் மீதான விமர்சனங்களுக்கு பொறுப்புக்கூறுவதில் இருந்து தப்பிக் கொள்வதும் தான்.
மஹிந்த ராஜபக் ஷ கொண்டு வந்த 18 ஆவது திருத்தச்சட்டம் நாட்டில், சர்வாதிகாரத்தனத்தையும், மன்னராட்சியையும் ஏற்படுத்தியதாக கூறியுள்ள ஜனாதிபதியே, 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்படாமல் இருந்திருந்தால், நாடு இந்த நிலைக்கு வந்திருக்காது என்று கூறியிருப்பது வேடிக்கை.
18 ஆவது திருத்தச்சட்டத்தையும் விமர்சித்துக் கொண்டே, 19 ஆவது திருத்தம் கொண்டு வரப்படாமல் இருந்திருந்தால். நன்றாக இருந்திருக்கும் என்று கூறியிருப்பதன் மூலம், 18 ஆவது திருத்தச்சட்டத்தின் அதிகாரங்களுக்கு அவர் ஏங்குகிறார் என்பது வெளிப்பட்டுள்ளது.
19 ஆவது திருத்தச்சட்டத்தினால் தான், இரட்டை அதிகார மையம் தோன்றியதாக மக்கள் கருதுகின்றனர் என பழியை மக்களின் மீது போட்டு, நாட்டின் உறுதியற்ற நிலைக்கு அதுவே காரணம் என்றும் முடித்திருக்கிறார். அதாவது ஆட்சியாளர்களில் தவறில்லை, ஆளும் முறையில் – அதாவது ஆட்சியைத் தீர்மானிக்கின்ற அரசியலமைப்பில் தான் தவறு என்று முழுப் பழியையும் அரசியலமைப்பின் மீது போட்டிருக்கிறார் ஜனாதிபதி.
நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியையே இல்லாமல் ஒழிப்பேன் என்று சூளுரைத்து, அதனை மக்களிடம் கொண்டு சென்று வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவான மைத்திரிபால சிறிசேன இப்போது, ஒற்றைத் தலைமையின் கீழ் இருப்பதே, நாட்டுக்கு நல்லது என்று கூறியிருக்கிறார்.
முன்பு ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக அனுபவித்தவர். அவர், ஆட்சியில் இருந்து விலகிய பின்னர், அதற்கெதிராக குரல் எழுப்புகிறார். ஆனால், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே தனது வாழ்நாள் இலட்சியம் என்று ஆட்சியில் அமர்ந்த மைத்திரிபால சிறிசேனவோ, மீண்டும் அதே நிறைவேற்று அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எத்தனிக்கிறார்.
சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக் ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர், ஜனாதிபதித் தேர்தல்களின் போது, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகத் தான் வாக்குறுதி கொடுத்தனர். இவர்களில் யாருமே, இந்த வாக்குறுதியை தமது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றியதில்லை.
சந்திரிகா நிறைவேற்று அதிகாரத்தை இழக்காமல், பார்த்துக் கொண்டார். ஆனால், தனக்கான அதிகாரங்களை அதிகரிக்க முனையவில்லை. எனினும், பதவி விலகிய பின்னர் அதற்கெதிராக குரல் கொடுக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷவோ, நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பதற்குப் பதிலாக, தனக்கான அதிகாரங்களை பெருக்கிக் கொண்டார்.
மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரங்களில் குறிப்பிட்ட சிலவற்றை 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் இழப்பதற்கு துணிந்தார். நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து விட்டே பதவியில் இருந்து விலகுவேன், நான் தான் நிறைவேற்று அதிகாரத்தில் இருக்கும் கடைசி ஜனாதிபதி என்றெல்லாம் கூறி விட்டு இப்போது குத்துக்கரணம் அடித்து நிற்கிறார்.
தனது பதவிக்காலம் எப்போது முடிகிறது என்று உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பினாரோ, அப்போதே ஜனாதிபதியின் அதிகார மோகம் வெளிப்பட்டு விட்டது,
அதற்குப் பின்னர், ஆட்சிக்கவிழ்ப்பின் போதும், அதற்குப் பின்னர், அரசியலமைப்புக்கு முரணாக அவர் நடந்து கொண்ட பல்வேறு சந்தர்ப்பங்களிலும், மஹிந்த ராஜபக் ஷவைப் போன்றும், ஜே.ஆரைப் போன்றும் நடந்து கொள்ள முற்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இப்போது அவர், 18 ஆவது, 19 ஆவது திருத்தச்சட்டங்களின் மீது முன்வைத்திருக்கின்ற விமர்சனங்கள், ஜே.ஆர் காலத்து, அரசியலமைப்புச் சட்டத்தையே அவர் மேன்மையானதாக கருதுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இணைந்து செயற்பட முடியாமல் போனதற்கான பழியை அரசியலமைப்பின் மீது போட அவர் முனைகிறார். 19 ஆவது திருத்தச்சட்டம், ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைத்திருந்தது.
அந்த அதிகாரக் குறைப்பே, தற்போதைய ஆட்சியின் குறைபாடுகளுக்கு என்று அவர் நியாயப்படுத்திக் கொள்வதன் மூலம், தமது எல்லா தவறுகளையும், அரசியலமைப்பின் மீது போட்டு விட்டு தப்பிக்க முனைகிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு பழியை அடுத்தவர் மீது போட்டுத் தப்பிக்க முனைவது இதுதான் முதல்முறை என்றில்லை.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் விடயத்திலும் அவர் தனக்குக் கீழ் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் மீது தான் பழியைப் போட்டார். தனக்கு எதுவுமே தெரியாது என்று நிரூபிக்க முனைந்தார்.
பாதுகாப்பு விடயத்தில் அவர் நிறைவேற்று அதிகாரங்களை முழுமையாகவே பயன்படுத்தினார். பாதுகாப்புச் சபையை தன் விருப்புக்கு ஏற்ப மாற்றியமைத்தார். தான் விரும்பிய போதே பாதுகாப்புச் சபைக் கூட்டங்களை நடத்தினார்.
அதில் பங்கேற்பவர்களையும் தானே தீர்மானித்தார். பிரதரையும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரையும், பொலிஸ் மா அதிபரையும் கூட அந்தக் கூட்டங்களில் இருந்து விலக்கி வைத்தார்.
இவ்வளவையும் செய்யும் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதிக்கு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுக்கின்ற வல்லமை இருக்கவில்லை. இருக்கும் அதிகாரங்களைக் கொண்டே, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத- உறுதிப்படுத்த தெரியாத ஒருவராகவே மைத்திரிபால சிறிசேன இருந்தார்.
அப்படிப்பட்ட நிலையில் ஜனாதிபதி, 19 ஆவது திருத்தச்சட்டத்தினால் தான் இந்த நிலை என்றும், ஒற்றை அதிகார மையமே இருக்க வேண்டும் என்றும் கூறியிருப்பது வேடிக்கை.
அதிகாரங்களை எங்கு – எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சரியான தலைமை தான் முக்கியமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த விடயத்தில் சரியாகச் செயற்பட்டிருக்கவில்லை.
தனக்கான அதிகாரங்களை தெளிவாக வரையறுத்துக் கொண்டு, நாட்டை நிர்வகித்திருந்தால், ஈஸ்டர் ஞாயிறு அனர்த்தங்களைக் கூட அவர் தவிர்த்திருக்கலாம்.
அங்குமிங்குமாக அதிகாரங்களை இழுத்துப் பிடித்து, நல்லாட்சி என்று கூறி அமைக்கப்பட்ட அரசாங்கத்தை எதுவும் செய்ய முடியாத நிலைக்குக் கொண்டு வந்தவர் ஜனாதிபதி.
அவர் எல்லா தவறுகளையும் இப்போது அரசியலமைப்பின் மீது போட்டு, தான் நல்ல பிள்ளையாக வெளியேறலாம் என்று எத்தனிக்கிறார்.
சந்திரிகா, மஹிந்த போன்ற முன்னைய ஜனாதிபதிகள் அதிகாரத்துக்கு வந்த பின்னர், நிறைவேற்று அதிகாரத்தை தக்க வைக்க எந்தளவுக்கு முயன்றனரோ, அவர்களை விட தான் எந்தவகையிலும் குறைந்தவரில்லை என்பதை, உறுதி செய்திருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.
மஹிந்தவும், சந்திரிகாவும், தமது கட்சியின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு நிறைவேற்று அதிகாரத்தை தக்கவைப்பது கடினமாக இருக்கவில்லை.
ஆனால், மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததோ, ஐ.தே.க.வின் துணையுடன். அவரது கட்சிக்கும் பலமில்லை. இப்படியான நிலையில் அவரால், தனது அதிகாரத்தை வலுப்படுத்த முடியவில்லை.
ஒருவேளை, மஹிந்தவுக்கு இருந்தது போன்ற மூன்றில் இரண்டு தனிப் பெரும்பான்மை பலம் மைத்திரிபால சிறிசேனவுக்கு இருந்திருந்தால், அவர் இப்போது, 20 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து 18 ஆவது திருத்தச்சட்டத்தை விட மோசமான ஒன்றையே கொண்டு வந்திருக்கக் கூடும்.
தான்தோன்றித்தனமாகச் செயற்படும், வகையிலான அதிகாரங்களை ஒழிக்கவே 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது. சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல சாதகமான, ஜனநாயக பூர்வமான விடயங்களை இதன் மூலம் தான் சாதிக்க முடிந்தது.
இந்தநிலையில், தமது தவறுகளை நியாயப்படுத்தவும், பலவீனங்களை மறைக்கவும், 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மீது பழியைப் போடுவது நியாயமற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வரும் போது, உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும், எந்தளவுக்கு உயர்ந்த நிலையில் மதிக்கப்பட்டாரோ, அந்த நிலையில் அவர் பதவியில் இருந்து விலகிச் செல்லப் போவதில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
அவரது பெயரையும் புகழையும் கெடுத்துக் கொள்வதற்கு வேறு யாரும் வரத் தேவையில்லை, அவரே அதனை செய்து கொள்ளுவார் என்பதை, கடந்த ஒரு ஆண்டு காலத்தில் அவரே நிரூபித்து விட்டார்.
சத்ரியன்