சிறீலங்காவின் பொறுப்புக்கூறல் விடயத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம்

பொறுப்புக் கூறல் நடவடிக்கையின் போது சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இருக்கும் வெள்ளபடையற்றத் தன்மைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றம் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் இந்த வாரம் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடருக்காக சர்வதேச மன்னிப்புச் சபை எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இறுதிக்கட்ட போரின் போதும் அதற்குப் பின்னரும் சர்வதேச சட்டங்களை மீறும் மிகவுட் கொடூரமான யுது்தக் குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களும் இடம்பெற்ற போதிலும் அவை தொடர்பான முறையான விசாரணைகள் இன்னமும் மேற்கொள்ளப்படாதுள்ளதுடன் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலையும் தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இணை அணுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழமையை உறுதிப்படுத்துவதற்கான பொறிமுறைகளை தாமதமின்றி உருவாக்கி அவற்றின் ஊடாக பேரவைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றுமாறு சிறீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறீலங்கா அரசாங்கம் நடைவடிக்கை எடுத்துள்ள போதிலும் இன்னமும் பல விடயங்களை பூர்த்திசெய்ய வேண்டியுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான மக்களின் கருத்துக்களை அறிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் அந்த அமர்வுகளில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளதாக கவலை வெளியிட்டுள்ள மன்னிப்புச் சபை அரசாங்கம் நடத்திய கருத்தறியும் அமர்வுகளில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்ட மக்களில் பலர் அரச படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.