உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில், காலி காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு, 90 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நபரொருவர், விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலி காவல் துறையால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக, காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
காலி- தனிபொல்கஹா பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் காதர் மொஹமட் ஷஸ்னி என்ற 29 வயதுடைய இச்சந்தேகநபர், சஹ்ரானுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் இஸ்லாம் தேசத்துக்காக, வாழ்ககையை தியாகம் செய்வதற்கு, சஹ்ரான் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ள நபரென ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் பியகம பிரதேசத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றில் கணக்காயவாளராக கடமையாற்றுவதுடன், மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்தை பிரத்தியேகமாக கற்பித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மல்வானைப் பிரதேசத்திலுள்ள சந்தேகநபரின் மனைவியின் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் சஹ்ரான், தெஹிவளை குண்டுதாரி ஆகியோர் இந்த விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டிருந்ததாகவும்காவல் துறையால் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.