கொரியா நாட்டின் எல்லைப் பகுதியில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்திக்கின்றனர் என தென் கொரியா அறிவித்துள்ளது.
ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக சோதனை செய்து, சர்வதேச நாடுகளை கலங்கடித்து வந்தது வடகொரியா.
உலக நாடுகள் இதனை வன்மையாக கண்டித்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தைகளால் யுத்தம் நடத்தினர்.
இந்த சூழலில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வடகொரியா-தென்கொரியா இடையே அமைதியை ஏற்படுத்த வழிவகை செய்தது. இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசி கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டினர்.
அதனை தொடர்ந்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், அமெரிக்கா-வடகொரியா இடையே சமாதானத்தை ஏற்படுத்தம் முயற்சிகளை முன்னெடுத்தார். இதன் பயனாக உலகின் இரு எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்புக்கு பிறகு, இருநாட்டு உறவில் நீண்டகாலமாக நிலவிவந்த பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் உருவானது. வடகொரியா அமெரிக்காவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தியது.
இந்த விவகாரத்துக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக டிரம்பும், கிம் ஜாங் அன்னும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்துப் பேசினர். ஆனால் எதிர்பாராத வகையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், கொரியா நாட்டின் எல்லைப் பகுதியில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்திக்க உள்ளனர் என தென் கொரியா இன்று அறிவித்துள்ளது. இந்த சந்திப்பை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.