எஸ்.தில்லைநாதனின் மரணம் எம்மத்தியிலிருந்து பல்திறப்புலமையும் ஆளுமையும் கொண்ட மூத்த ஊடகவியலாளர் ஒருவரை அபகரித்துச் சென்றுவிட்டது.
அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக ஊடகத்துறையில் சேவையாற்றிய தில்லைநாதன் 1960களின் முற்கூறில் அச்சு இதழியலில் பணியாற்றத் தொடங்கியிருந்தாலும், பிற்காலத்தில் இலத்திரனியல் ஊடகத்துறையிலும் தனது முத்திரையைப் பதித்தவர். மும்மொழிகளிலும் வளமான ஆற்றலைக் கொண்ட அவர் வீரகேசரியில் ஒரு இளைஞனாக 1960களில் சேர்ந்தபோது இலங்கையின் தமிழ்ப் பத்திரிகை உலகில் பழுத்த அனுபவமும், அறிவாற்றலும் உடையவர்களாக விளங்கிய கே.வி.எஸ்.வாஸ், எஸ்.டி.சிவநாயகம், கே.சிவப்பிரகாசம் போன்றவர்களின் வழிநடத்தலில் பணியாற்றும் அதிர்ஷ்டத்தைக் கொண்டிருந்தார். ஒரு அலுவலகச் செய்தியாளர் என்ற வகையில் அந்த நாட்களில் இளமைத்துடிப்புடன் தில்லைநாதன் செயற்பட்ட பாங்கு முன்னுதாரணமானதாகும்.
ஏனைய செய்தியாளர்கள் கையாளத் தயங்கிய சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் செய்தி சேகரிப்பதில் அசாதாரணமான துணிச்சலுடன் செயற்படுவதில் பெயரெடுத்தவர் தில்லைநாதன். அலுவலகச் செய்தியாளராக, அரசியல் மற்றும் இராஜதந்திர விவகார நிருபராக, பாராளுமன்ற செய்தியாளராக, அரசியல் விமர்சகராக பத்திரிகைத் துறையின் பல பரிமாணங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி ஏனைய ஊடகவியலாளர்களுக்கு முன்னுதாரணமாக அவர் விளங்கினார்.
வீரகேசரியில் சேவையாற்றிய பிறகு தினபதி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், சக்தி தொலைக்காட்சி, எப்.எம் 99 வானொலி ஆகியவற்றில் இணைந்து பல வருடகாலம் பணியாற்றியதை அடுத்து லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையில் பிரதம ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு தில்லைநாதனுக்குக் கிடைத்தது. பத்திரிகைத்துறையில் எப்போதோ உயர் பதவியை அடைந்திருக்க வேண்டிய அவர் தனது மனதில் பட்டவற்றை வெளிப்படையாகத் துணிச்சலுடன் கூறிவிடும் சுபாவம் காரணமாக முகாமைத்துவத்துடன் முரண்பட வேண்டியிருந்தது. அந்த சுபாவத்தினால் பல சந்தர்ப்பங்களில் சகபாடிகளின் அதிருப்திக்குக் கூட அவர் ஆளாகியதை நான் நேரடி அனுபவத்தின் ஊடாகக் கண்டிருக்கிறேன். ஆனால் அவர் அதற்காக சிறிதும் வருத்தப்பட்டதில்லை. எதையும் நேர்மையீனமாக மறைத்துப்பேசும் பழக்கம் தனக்கில்லை என்று அவர் கூறிவிடுவார்.
ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் போது வெறுமனே செய்தித்துறைப் பணியுடன் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் ஏனைய ஊழியர்களின் நலன்களிலும் அவர் கவனம் செலுத்தி, அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் தில்லைநாதன். வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் ஊழியர் நலன்புரிச் சங்கத்தைப் பல தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பிப்பதில் முன்னாள் பிரதம ஆசிரியர் காலஞ்சென்ற சிவப்பிரகாசம், வீரகேசரியின் முன்னாள் பொது முகாமையாளர் காலஞ்சென்ற எஸ்.பாலச்சந்திரன், மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம், முன்னாள் பிரதம ஆசிரியர் காலஞ்சென்ற எஸ்.நடராசா, முன்னாள் துணை ஆசிரியர் ஈ.பி.டேவிட்ராஜ், மூத்த ஊடகவியலாளர் திருமதி அன்னலட்சுமி ராஜதுரை, மூத்த பத்திரிகையாளர் காலஞ்சென்ற பொன்.இராஜகோபால் ஆகியோருடன் சேர்ந்து முன்னணியில் நின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகத்துறையின் பல அமைப்புக்களிலும் அவர் பல வருடகாலம் உறுப்பினராக இருந்து, ஊடகத்துறையின் மேம்பாட்டுக்காகத் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இறுதியாக இறக்கும் நேரத்தில் கூட தில்லைநாதன் இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் உறுப்பினராக இருந்தார்.
தில்லைநாதனுடன் பத்திரிகைத்துறையில் ஒரே அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை என்ற போதிலும், வீரகேசரியின் பாராளுமன்ற செய்தியாளராக 1980களின் பிற்பகுதியிலும், 1990களின் முற்பகுதியிலும் நான் பணியாற்றிய போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்சேவையின் சார்பில் அவர் செய்தி சேகரிக்க வந்தபோது பாராளுமன்ற பத்திரிகையாளர் கலரியில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பாராளுமன்ற செய்தி சேகரிப்பில் புதியவர்களாக இருந்த என்னைப் போன்றவர்களுக்குப் பல விடயங்களை அவர் கற்றுத்தருவார். அவர் முன்னதாக வீரகேசரியில் பணியாற்றிய போது பாராளுமன்றச் செய்தியாளராகத் தனக்குக் கிடைத்த அனுபவத்தையும் பின்னாளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியாளர் என்ற வகையில் பெற்ற அனுபவத்தையும் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நூலாக வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்ப்பதற்கு கடுமையானவராக இருந்தாலும் பழகுவதற்கு இனியவரான தில்லைநாதன் அவர்கள் பழைய தலைமுறைத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் குழாமில் எஞ்சியிருந்தவர்களில் ஒருவராக எம்மத்தியில் விளங்கினார். அந்தத் தலைமுறையினரிடம் காணக்கூடியதாக இருந்த கடமையுணர்வும், பொறுப்புணர்வும் என்றென்றைக்கும் முன்மாதிரியானவை ஆகும். அவர்களில் பலர் பணியாற்றிய பாங்கை வெறுமனே அவதானித்ததன் மூலமாகவே என்னைப் போன்ற பலர் சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் பத்திரிகைத்துறையில் ஆர்வத்துடன் செயற்படக்கூடியதாக இருந்தது.
தில்லைநாதனின் மறைவு இலங்கை ஊடகத்துறைக்கு ஒரு பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த ஆனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-வீரகத்தி தனபாலசிங்கம்