கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். இதன் திரைக்கதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்துக்கான நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. இதில் 60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ளன.
பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபன், மலையாள நடிகர் ஜெயராமை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜை தேர்வு செய்துள்ளனர்.
ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம் வில்லத்தனமாக இருக்கும். பூங்குழலியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டுள்ளனர். அவர் இன்னும் சம்மதம் சொல்லவில்லை. அமலாபாலும் இதில் நடிக்கிறார். தற்போது பார்த்திபன், மலையாள நடிகர் ஜெயராம் ஆகியோரையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
ஜெயராம் தமிழில் ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன் படங்களிலும் நடித்து இருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தவும் மணிரத்னம் திட்டமிட்டு உள்ளார்.
சரித்திர காலத்து அரண்மனை அரங்குகள், ஆடை ஆபரணங்களையும் பயன்படுத்துகின்றனர். இரண்டு பாகங்களையும் படமாக்க ரூ.800 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.